மது மகிழன் - 2

                             

ஐந்து வருடங்களுக்கு முன்...

எட்டையபுரத்தில் இருந்து விளாத்திக்குளம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தான் மகிழன். இருள் முழுமையாக விலகாத காலை நேரம்.  சற்றுமுன் பெய்த மழை சாரலின் ஈரமும், கரிசல் மண்வாசமும் காற்றில் கலந்து வர அந்த சுகந்தத்தை ஆழ மூச்செடுத்து ரசித்தது அவன் மனம்.

"புளியஞ்சோலை' பெயர்ப் பலகையை பார்த்ததும் மகிழன் மனதில் ஒரு மென்மையான இதம் பரவியது, தாய் பிறந்த ஊர், எட்டையபுரத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கிராமம். முதன்மை சாலையில் இறங்கி உள்ளே இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

"ஏப்பா ஓட வந்துருச்சு இறங்கறவங்க வெரசா இறங்குங்க! என்ற நடத்துனரின் குரலுக்கு முன்பே, படிக்கு அருகில் இருந்தான் மகிழன்.

பேருந்து நிறுத்தத்தில் சேது நின்றிருந்தான், மகிழன் இறங்கி வருவதை பார்த்தவன்.

"மகிழ! என பாசத்தோடு ஓடிவந்து அணைத்துக் கொண்டான், அம்மா எங்கடா?

"அம்மா நாளைக்கு மதினி கூட வருவாங்க' என்னண்ணா இந்த நேரத்தில இங்க இருக்க? யாரு வாரங்க? என்று கேட்க..

"தாமரை அக்கா முதல் பஸ்ல வருவேன்னு சொல்லிச்சு.. மூணாவது பஸ்சும் போயிறுச்சு .

"தாமரை அக்கா' என்றதும் மகிழன் மனதில் ஒரு உற்சாகம். மதுவும் வருவாள் என்று நினைக்கவே உயிர் குளிர்ந்தது, 

அண்ணனும், தம்பியும் நலம் விசாரிப்புகளோடு, விடுபட்ட கதைகளை எல்லாம் பேசி முடிக்க அரை மணி நேரம் கடந்திருந்தது. சேதுவை விட மகிழன் மூன்று வயதுதான் சிறியவன், சகோதரன் என்பதையும் தாண்டி இருவருக்குள்ளும் தோழமை உண்டு. 

"வாடா வண்டியில ஏறு' சேது அழைக்க...

"இல்லண்ணா நான் நடந்து போறேன், நீ அக்காவை அழைச்சிட்டு வா'  மகிழன் நகர்ந்தான், சேது வேகமாக அவன் தோளில் மாட்டியிருந்த பையை பறித்துக்கொண்டான். மகிழன் சிரித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். 

எதிர்ப்பட்ட உறவுகள், பழகிய மனிதர்கள் அவனை அக்கறையோடு நலம் விசாரிக்க! அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னவாறே நடந்தான்.

"எண்ணம் முழுவதும் மதுதான் இருந்தாள், அக்காவின் திருமணம் எப்படியும் இரண்டு நாள் முன்னால் வரவேண்டும், இன்று வருவாளா? பன்னிரெண்டாவது தேர்வு நேரம் வேறு!, இந்த நேரமா திருமணம் வைக்க வேண்டும்?  பலவாறு நினைத்து குளம்பியது மனது..

மகிழன் தாயுடன் பிறந்தவர்தான் சேதுவின் தாய் செல்லம்மா அவருடைய கணவர் முத்தையா. அவர்களுக்கு ஆறு பிள்ளைகள். மூத்தவர்கள் மூவரும் பெண்கள் விசாலாட்சி முத்துச்சாமி, தாமரை சந்திரன், ரமணி வேலுச்சாமி அதன்பின் மூன்று ஆண்கள் மணிமாறன், மருதுபாண்டி, சேதுராமன். மணிமாறன் மனைவி கோகிலா, மருது மனைவி திலகவதி,  சேதுவுக்கு அக்கா விசாலாட்சி மகள் கவிதாவை மணம் முடிக்க இருக்கிறார்கள்.

விசாலாட்சி வீட்டை கடந்துதான் அவன் பெரியதாய் வீட்டுக்கு போகவேண்டும், அக்கா வீட்டு வாசலில் யாரும் இல்லாததால் நேராக கடந்துவிட்டான்.
திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும், இப்போதே வீட்டுக்கு அதன் உற்சாகம்  வந்துவிட்டது. வீட்டு வாசலில் நிறையவே சொந்தங்கள் தலைகள் தென்பட.. முத்தையா நாற்காலியில் அமர்ந்திருந்தார், செல்லம்மா கையில் இருந்த நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டு இருக்க அருகில் கவிதாவின் தம்பிகள் கண்ணன், கதிரவன்.. சொந்தங்களால் நிரம்பி இருந்தது வீடு, அவன் வரவு இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியை கூட்ட, அந்த இடம் இன்னும் அழகானது.

அவன் வந்து ஐந்து நிமிடத்தில் தாமரையை மட்டும் அழைத்துக் கொண்டு வந்தான் சேது. மது வராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், அவள் படிப்பு முக்கியம் என்று அவன் மனது  சமாதானம் ஆனது. தம்பியை பார்த்ததும்  அணைத்துக்கொண்டார் தாமரை.  அக்கா மார்களின் பாசத்திலும், மதினி மார்களின் கேளி, கிண்டலிலும் அன்றைய காலை நேரம் வேகமாக கடந்தது மகிழனுக்கு

மதிய உணவில் ரமணியும், தாமரையும் தங்கள் பாசத்தை காட்ட திணறிக் கொண்டு இருந்தான் மகிழன்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று ரமணி ஆசை ஆசையாக பரிமாற,, அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி  "எனக்கு போதுங்க்கா!, என்று எழுந்து கொண்டான்.

"பஸ்ல வந்தது களைப்பா இருக்கு கொஞ்ச நேரம் தூங்குறேன் என்று ரமணியிடம் சொல்லிவிட்டு, இடதுபுறம் இருந்த அவர் அறைக்குள் புகுந்தான். அவன் வந்தால் எப்போதும் தங்குவது ரமணி அறையில் தான். இன்று அறை கொஞ்சம் வெட்கையாக இருந்தது, ஜன்னலை திறக்க முன்னால் இருந்த மச்சு வீடு தெரிந்தது, பழைய காலத்து வீடு, இந்த வீடு இப்போது புதிதாக கட்டியது..

ஒரு தலையணையும், பாயையும் எடுத்து வந்தவன், மச்சு வீட்டு திண்ணையில் பாயை விரித்துப் படுத்துக்கொண்டான், பின்னாலேயே வந்த ரமணி அவன் தலைமாட்டில் அமர்ந்து அவன் தலையை கோதி விட, தலையணையை எடுத்துவிட்டு மெல்ல அவர் மடியில் தலை வைத்துக் கொண்டான்,

கணவனை இழந்து, குழந்தைகள் இல்லாத ரமணிக்கு சேதுவும், மகிழனும் தான் செல்லப் பிள்ளைகள், சேது கூடவே இருக்கிறான். மகிழன் எப்போதாவது தான் வருவான், அவன் வந்துவிட்டாள் ரமணிக்கு எந்த வேலையும் ஓடாது, கைக்குழந்தையை சுமக்கும் தாய்போல, அவனையே தாங்கி கொண்டு திரிவார், அவனை பார்த்துக் கொள்வதே அவருக்கு வேலையாகி போகும். "அவ புள்ள வந்துட்டா வீட்ல ஒரு வேலை ஓடாது இவளுக்கு' செல்லாயி கூட விளையாட்டாய் சொல்வார்.

ரமணிக்கு அவனிடம் சொல்ல நிறைய கதை இருந்தது,  மகிழனுக்கும் தெரியும் அவனிடம் பேசுவதில் அவருக்கு உள்ள மகிழ்ச்சி, அவர் சொல்லும் கதைகளை எல்லாம் பொறுமையாக கேட்பான். இன்றும் அப்படித்தான் அரைமணி நேரம் ரமணி மட்டுமே பேசினார், மகிழன் கேட்டுக்கொண்டு இருந்தான். கடைசியாக திருமண பேச்சு வந்தது.

"அண்ணன் கவிதா கூட இப்ப நல்ல பேசுமா?

"எங்க அவன் இன்னும் அப்படியே தான் இருக்கான். எல்லோரும் சேர்ந்து சம்மதிக்க வச்சிட்டாங்க,  விருப்பமே இல்லாமல் கல்யாணம் பண்ணி எப்படி? என்ன ஆகுமோ என்னும் போதே விசாலாட்சி அங்கு வர அந்த பேச்சை அத்தோடு நிறுத்தினார் ரமணி..

என்ன ரமணி உட்கார்ந்துட்ட.. எவ்வளவு வேலை கிடக்கு, நீ தூங்குய்யா என்று பாசமாய் தம்பியிடம் சொல்லிவிட்டு ரமணியை அழைத்து சென்றார் விசாலாட்சி. 

இன்னும் இரண்டு நாளில் திருமணம். சேது இன்னும் அப்படியேதான் இருக்கிறான் என்ற செய்தி மனதுக்குள் உறுத்தலாக மாற மகிழன் நினைவுகள் ஆறு மாதங்கள் முன்னாள் நடந்த நிகழ்வுக்குள் சென்றது.

சேதுவின் பதிலுக்காக குடும்பமே அவன் முகத்தையே பார்த்திருக்க... "சட்டுன்னு முடிவு எடுக்க முடியலம்மா கொஞ்சம் யோசிச்சு தான் சொல்லணும்..' என்கிற அவனை கோபமாக பார்த்தார் செல்லாயி.

எனக்கு தெரியும் ஆத்தா, இந்தப்பய கடைசியில இப்படித்தான் சொல்லுவான்னு, உனக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ ராசா, உன்மேல ஆசைப்பட்ட பாவத்துக்கு காலம்பூரா எம்பொன்னு தனிமரமாக கண்கலங்கி நிக்கட்டும்.. என்று அழுதுகொண்டே எழுந்து சென்றார் விசாலாட்சி.

செல்லாயிடம் ஏதோ சொல்ல திரும்பியவனை, அவசர அவசரமாய் தன் புறம் திருப்பிய மகிழன், " அண்ணா ஒரு நிமிஷம் வெளிய வா! என அழைத்து சென்றுவிட்டான்.

"டேய் ஏன்டா பேசிட்டு இருக்கும்போது இழுத்துட்டு வர?  தன் அண்ணனை கோபமாய் உற்றுப் பார்த்த மகிழன்.

"அம்மா, அப்பாட்ட நீ இப்ப என்ன சொன்ன.?

"என்ன சொன்னேன்? யோசிக்கணும்னு சொன்னேன்

"கட்டிக்க சொன்னது நம்ம கவிதாவை...

"அவ சின்ன பொண்ணுடா, அவள போய் கட்டிக்க சொல்றாங்க' விரக்தியாய் சொன்னான் சேது.

"அப்ப உனக்கு கவிதாவை பிடிக்காதா?

"பிடிக்கும் டா', அவளும் மாமா மாமான்னு என்மேல பாசமாதான் இருக்க, பாசமா இருக்குறது வேற கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ்றது வேற, 

"புரியல'

"நான் தூக்கி வளர்த்த பொண்ணு! எப்படிடா?.... அவளை எப்படி என் பொண்டாட்டியா பார்க்க?, இந்த பெருசுகளுக்கு அதெல்லாம் தோணதா?!

"அப்ப போ! போய் சொல்லு,' நீ பிடிக்கலைன்னு சொல்லி, அவ மனசு தாங்காம ஏதாவது பண்ணிக்கிட்ட..

"டேய் என்னடா லூசு மாதிரி பேசுர',  அவல எனக்கு பிடிக்காதுன்னு எப்படா சொன்னேன். அவ கூட கல்யாணம் தானே வேணாம்னேன்.

"ரெண்டும் ஒன்னு தான்' தெளிவா மனசுல வச்சுக்க, கவிதாவுக்கு உன்ன பிடிச்சிருக்கு, உன்ன மட்டும் தான் பிடிச்சிருக்கு' என்றான் சற்று அழுத்தமாக..

"டேய் நீ வேற ஏதாவது சொல்லி என்ன குழப்பதடா," நான் வேண்டாம்னு சொன்ன, கவலைப்படுவாங்க தான்! ஒரு ஆறுமாசம் போன வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்கடா, எனக்கு மட்டும் என்ன அவள பிடிக்கலைனு சொல்றதுல சந்தோசமா? அவளை எனக்கு அவ்வளவு பிடிக்கும்டா, ஆனா பொண்டாட்டியா கற்பனை கூட பண்ண முடியல, பொண்டாட்டின்னா அது வேற மாதிரி எண்ணங்கள் வரனும். தூக்கி வளர்த்த பொண்ணு மேல எப்படிடா வரும்.

"சின்ன வயதில் இருந்தே நீதான் மாப்பிள்ளைன்னு அக்கா கவிதா மனசுல ஆசைய வளர்த்து வச்சிருக்கு,  இப்ப வேற மாப்பிள்ளை பார்த்த அவ மனசு வலிக்காதா..?

"அவளுக்கு நானெல்லாம் மாப்பிள்ளையாடா, அவள நல்ல கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கொடுக்கலாம்!. 

"லூசடா நீ', என்றான் மகிழன் கோபமாக..
"அவளை என்ன நினைச்ச, கவர்மெண்ட் மாப்பிள்ளைன்னா, சந்தோஷமா கல்யாணம் பண்ணிட்டு போயிருவான்னா, ஆனா நீ அவளை பிடிகலைன்னு மட்டும் சொல்லி பாரு அப்ப இருக்கு உனக்கு.

அதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்றியா? இதெல்லாம் சரிப்பட்டு வராது மகிழ.. அக்கா பொண்ண எல்லாம் அந்த மாதிரி ஆசையோடு பார்க்க முடியாதுடா! எப்படி வாழ்நாள் பூரா வாழ முடியும்? அவ முகத்தை பார்த்தாலே எனக்கு எதுவும் தோணால, கொஞ்சமாவது யோசிச்சு பேசு.

"உனக்கு தோணால, ஆனா எனக்கு தோணுதே என்றான் மகிழன்.

"என்னடா சொல்ற..'

"நான் மதுவை லவ் பன்றேன் .

"என்னது' என்று அதிர்ச்சியோடு அவனை பார்த்தான்.

"நீதான் என்ன காப்பாற்ற வேண்டும்? என அவன் கைகளை பிடித்துக் கொண்டான்,  விசாக்கா பொண்ண நீ கல்யாணம் பண்ணிட்ட, எனக்கு தாமரை அக்கா பொண்ணு.. 

தம்பியின் பேச்சில் அதிர்ந்த சேது!  தாமரை அக்கா பொண்ண லவ் பண்றியா?! வேணாண்டா தம்பி, மாமாவுக்கு தெரிஞ்சிது தேவையில்ல சங்கடம் வரும், 

"அதை அப்போ பார்த்துக்கலாம்' நீ இப்ப உன் முடிவை சொல்லு என்று இழுத்து சென்று அவனை சம்மதிக்கவும் வைத்துவிட்டான். தம்பியால் அக்கா மகளை நேசிக்க முடியும் போது நம்மால் ஏன் முடியவில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டான் சேது, திருமணம் முடிந்தால் சரியாகி விடும் என்று எல்லோரும் சொல்லும் கூற்றில் உண்மை இருக்குமோ என்று சமாதானமும் ஆனான். ஆனால் ஒன்றை மறந்துவிட்டான், மகிழன் வெளியூரில் இருந்து எப்போதாவது வந்து போகிறவன், அவனோ உள்ளூரில் வாக்கப்பட்ட அக்காவீட்டில் ஒவ்வொரு நாளும் அவள் மகளை மார்பிலும், தோளிலும் போட்டு தூக்கி வளர்ந்தவன். 

திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த சேது, ஆறுமாதம் கடந்தும் இன்னும் மனதளவில் மாறவில்லை என்ற செய்தி மகிழனுக்கு கலக்கத்தை கொடுத்தது.
சேது கவிதா திருமணத்தை நினைத்துக் கொண்டு படுத்திருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

மகிழன் தூங்கி எழுந்தபோது கவிதாதான் தேநீர் கொண்டுவந்தாள், முகத்தில் கல்யாண பொண்ணுக்கான எந்த மகிழ்ச்சியும் இல்லை. அவனிடம் எப்போதும் நன்றாக பேசுபவள். இன்று அளந்து பேசினாள். இயல்பாக அவளிடம் இருக்கும் துள்ளலும், துடுக்கு தனமும் காணாமல் போயிருந்தது.

ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்த மகிழன் அன்று இரவே அதற்கான வேலையை செய்திருந்தான்.

         ****** ******* ********

மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள் சேதுவும், கவிதாவும்.

"என்ன மாமா?  எதுக்கு என்னை மேல  வரச்சொல்லி சொன்னீங்க " என்று தயக்கமாக கேட்ட கவிதாவின் குரலில் ஆசையும், காதலும், வெட்கமும் பொங்கி வழிந்தது....

"நீ என்கிட்ட ஏதோ கேட்க தயங்கிறதா மகிழன் சொன்னான்... என்று அவன் முடிக்க அப்படி ஒரு கோபம் வந்தது கவிதாவுக்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக அவனை பார்த்தாள்.

"அப்ப உங்களுக்கா ஒன்னும் தோணலையா மாமா? ......
எங்கிட்ட பேச எதுவுமே இல்லையா உங்களுக்கு?

"நீ சொன்ன தானே எனக்கு தெரியும் கவி' என்றவனை விரக்தியான ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர பார்த்தாள்,  அவள் கையை பிடித்து நிறுத்தினான்.

"நீ என்கிட்ட எதையோ எதிர்பாக்கிற..? ஆனா அது என்னன்னு தான் என்னால கண்டுபிடிக்க முடியல.. மகிட்ட என்ன சொன்ன..

"நான் எதுவும் சொல்லல' என்றவள் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க

 "இல்ல ஏதோ இருக்கு சொல்லு." என்று அவன் கேட்க, கேள்வியில் மேலும் கோபமானவள்... 

"சொல்லு..சொல்லுன்ன? என்ன சொல்ல நான் பொண்ணு மாமா.. நான் எதிர்பார்க்கிறதை நானே எப்படி சொல்ல முடியும்..? என்று கத்திவிட்டாள். சேது அதிர்ந்து நின்றான்.

"நான் உங்ககிட்ட இருந்து ஒன்னும் எதிர்பாக்கலை மாமா.." கையை விடுங்க நான் போறேன் என்றாள் கோபமாக...

என்ன கேட்டுட்டேன்னு இப்ப கோபப்படுற..? என்று அவன் புரியாமல் கேட்க, ஆத்திரமடைந்த கவிதா.

ம்ம்.. நீங்க ஒண்ணும் தப்பா கேட்கல.. நான் தான் தப்பு, உங்ககிட்ட போய் எதிர்பார்த்தேன் பாருங்க என்ன சொல்லணும்..?

"என்கிட்ட என்ன எதிர்பாக்கிறேன்னு சொன்னாத்தானே நான் செய்ய முடியும்..?" என்று அவளின் மனநிலையை புரியாமல் கேட்டான்,

அவனின் கேள்வியில் கொந்தளித்த கவிதா "எனக்கு உங்களை கட்டிப்பிடிச்சுக்கிட்டு, உங்க நெஞ்சு மேல சாய்ந்துகிட்டு அழணும் போல இருக்கு.. போதுமா?

"அழணும் போல இருக்கா.. "ஏன்?" என்று கேட்க, 

மாமனை வெறித்து பார்த்தாள், பின்னர் யோசித்தவள், அவனுக்கு தான் சொல்ல வருவது எதுவும் உண்மையிலேயே புரியவில்லையா? அல்லது புரிந்ததும் புரியாதது போல் நடிக்கிறானா? கண்கள் கலங்கியது.. அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பிலும் தாயின் அன்புதான் தெரிந்தது அவளுக்கு, காதல் தெரியவில்லை

தன் மார்பின் சட்டை ஈரமாவதை உணர்ந்தும் சேது அப்படியே சிறிது நேரம்  நின்றான், பின் அவளை தன்னிடம் இருந்து பிரித்து, "அவளின் கலைந்த தலை முடியை ஒதுக்கி, கண்களை துடைத்தான். 

"இப்ப எதுக்கு இந்தக் கண்ணீர்? 
"என் மனசு உனக்கு  புரியலையா." என்றவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவள் சற்றென்று நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள், இப்போதும் அதில் காதல் இல்லை. பாசம் மட்டும் தான் தெரிந்தது.

"உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்குடா.. என்னை கட்டிப்பிடிக்க, என் தோள்ல சாய்ஞ்சு அழ, நீ யார்ட அனுமதி கேக்கணும்? 

உன்னைவிட அதிகமாக யாருக்கும் என்மேல உரிமை இல்லை.. அதே போலதான் நீயும் எனக்கு..", என்றவாறே அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான், 

அவனின் எதிர்ப்பாரா செயலில் அதிர்ந்தவள் புன்னகையுடன் நின்றிருந்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள். அதிர்ச்சியோடு தன்னை பார்த்தவளிடம்,

"என்ன ரொம்ப அதிர்ச்சியா பாக்குற?'  
"நீ என் உசுருடா! உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. இருபது வருசமா பாசமா மட்டும் பார்த்த பார்வையை திடீரென வேறமாதிரி என்னால மாத்திக்க முடியல, அவ்வளவு தான், இந்த பாசம் ஒருநாள் காதலா மாறும், அத தாங்க முடியாமல் நீ பயந்து ஓடுவ பாரு என்று அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

தன் மனங்கவர்ந்த மாமனின் காதலான பேச்சும், முதல் முத்தமும் கவிதாவை முகம் சிவக்க வைத்தது, படபடக்கும் இதயத்துடன் நின்றவளின் தவிப்பை போக்க தன் அணைப்பை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தினான் சேது, அந்த அணைப்பு இனித்தாலும்,  நீண்ட நேரம் அவன் அணைப்பில் இருப்பது புரிந்ததும்...

 அச்சோ.. மாமா யாராவது வந்திருவங்க விடுங்க என அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள்.

"அதெல்லாம் முடியாது, எது பேசறதா இருந்தாலும் இப்படியே பேசு" நீ என் பொண்டாட்டி தானே என்று உரிமையாக சொல்ல,

இத்தனை மாசமா பேசக்கூட இல்லாம இருந்துட்டு இப்போ வந்து ரொம்பத்தான் உரிமை கொண்டாடுறாரு' என்று சிணுங்களாக சலித்துக்கொண்டவள், காதல் வராது என்று சொல்லிவிட்டு இப்படி ரொமான்ஸ் பண்ணுறானே இந்த மாமன் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தாள். அங்கே ஒரு அழகான காதல் பூக்க தொடங்கி இருந்தது.

******** ****** ******

சேது கவிதா திருமணம் உள்ளூர் கோவிலில் நடைபெற, விருந்தும் வரவேற்பும் வீட்டில் ஏற்படாகி இருந்தது. 

திருமணத்தில் மணப்பெண் தங்கையாக நின்றாள் மது. தூரத்தில் இருந்தே அவளை கண்னெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மகிழன். 
நேற்று மாலையே மது வந்துவிட்டாள்.

அவன் பார்வையை தயங்கி தயங்கியே எதிர்கொள்கிறாள் மது. அதை அவனும் கவனிக்கத்தான் செய்தான்.  தலை குனிந்து செல்பவள், அவன் பாக்காத நேரம் பார்ப்பதும், பாத்த உடனே முகத்தை திருப்புவதுமாக இருந்தாள். நேற்றில் இருந்து இந்த நாடகம் தொடர்கிறது...

பட்டுடுத்தி, கழுத்து நிறைய நகை போட்டு பெண்ணுக்கே உரிய வெக்கத்துடன் சேதுவை கை பிடிக்கும் மகிழ்ச்சியை புன்னகையாக்கி பூரிப்புடன் மண மேடைக்கு வந்தாள் கவிதா. முகம் கொள்ள அவள் புன்னகை பார்த்து உலகையே வென்ற கர்வத்தை சுமந்தது சேதுவின் இதயம்.

ஊர் பெரியவர்கள் தாலியை தொட்டுக் கொடுக்க, பெண்கள் குலவை பாட, கவிதா கழுத்தில் கட்டினான் சேது.

திருமணம் முடிந்ததும், பெரியவர்கள் விபூதி போட, மது ஓரமாக ஒதுங்கி நின்றாள், அழகு சிலையாய் நின்ற மதுவை மொத்த காதலையும் கண்ணில் தேக்கி  பார்த்தான் மகிழன். உயிர் கலந்த தன் காதலையும் அவள் கண்களிலும் பிரதிபலித்தாள் மது.

வீட்டில் நடைபெற்ற விருந்தில் இரு வீட்டாரும் ஓடிஓடி சொந்த பந்தங்களை கவனித்தனர், கவிதாவின் தந்தை முத்துச்சாமிக்கும் சேது மாப்பிள்ளையாக கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சியில் தன் வயதைக்கூட மறந்து, எல்லா வேலைகளையும் சின்ன பையன் போல் அவரே ஓடி ஓடி செய்தார், மகிழனும் பந்தியில் தான் நின்றான். உடையில் ஆங்கங்கே சாம்பார் தெறித்து இருந்தது. வேட்டி கட்டியும் பழக்கம் இல்லை அதனால் கொஞ்சம் சிரமமாக உணர்ந்தான்.

வீட்டுக்குள் பசியோடு இருந்த குழந்தைகளுக்கு மட்டும் தனியாக சாப்பட்டுப் பந்தி நடந்தது, அதை பெண்களே பார்த்துக் கொண்டார்கள். குழந்தைகள் எல்லோரும் சாப்பிட்டு முடிய களைத்துப்போய் வெளியே வந்தார்கள் தாமரையும், ரமணியும்.

"தாமரை எப்படி இருக்க', என்றார் உறவுக்கார பெண் ஒருவர்.

"நல்ல இருக்கேன் மதினி'

"உம் மவ தங்க சிலையாட்டம் இருக்க, எம்மவன் அவளை தான் கட்டுவேன்னு நிக்கிறான், நீ யாருக்கும் எனக்கு தெரியாம வாக்கு குடுத்திராத என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார் 

"என்னக்கா பெரிசு ஏதோ சொல்லிட்டு போகுது என்றார் ரமணி..

"அவுக பையனுக்கு மதுவை கட்டனுமாம்".

"ஐயோ' அந்த குடும்பத்தில் நம்ம புள்ளயா....ரமணி அதிர்ந்தாள்.

"ஒத்த புள்ளைய தூக்கி அந்த ராட்சசி கைலயா கொடுப்பேன். சோதுவுக்கு கவிதான்னு முடிவு பண்ணும்போதே. நம்ம மகிழனுக்கு தான் மதுன்னு முடிவே பண்ணிட்டேன்.

ஆமாக்கா. ரெண்டு பெரும் சேர்ந்த "ஜோடிப் பொருத்தம் பாக்கவே ஆசையா இருக்கும்..", என்று தங்கையும் சேர்ந்து சொன்னாள்.

சிறுசுகளுடன் அமர்ந்து ஓரமாக விளையாடிக் கொண்டிருந்த மதுவின் காதுகளிலும் அது விழுந்தது, மனதிற்குள் இன்பத்தின் சாரல்... நானும், மாமாவுமா..? எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் திருமணத்தை நினைத்துப் பார்க்கும் போதே சிலிர்த்தது மதுவுக்கு.

தன் மன சிலிர்ப்பை அறிந்தவள் சுகமாக நினைவுக்குள் சென்றாள், எப்ப இருந்து மாமா இப்படி பார்க்கிறார்..  ஆனா அதுக்கு அப்பறம் இருந்து தான் என்னை ரசனையா பாக்க ஆரம்பிச்சாரு.. இப்போ என்று நினைத்தவுடன் வெட்கத்தில் காது மடல் வரை சிவந்து விட்டது மதுவுக்கு. என்ன பார்வை அது..? அப்படியே என்னை உயிரோட உறிஞ்சுற பார்வை..!

அதுவும் இந்த இடத்திலும், இவ்வளவு கூட்டத்திலும்..! தன்னை மட்டுமே பார்க்கும் உரிமையான பார்வை..  அவரின் பார்வைலியே அவர் மனசு புரியாத்தான் செய்து.. ஆனா எனக்கு தான் என்னமோ பயமா இருக்கே.. மாமாவுக்கு என்னை பிடிக்குமா? என்னை கட்டுவாரா?

முதல்ல என்னால நேரா நிமிந்து அவர் முகத்தை கூட பாக்க முடியறதில்லயே.. அவரை பாக்கும் போது மட்டும் என் தைரியம் எல்லாம் எங்க போய் ஒளிஞ்சுக்குதுன்னு தான் தெரியல

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு தான்.. ஆனா எப்போலிருந்து அவரை பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தான் தெரியல.. சின்ன வயதில் இருந்தே பிடிச்சுருக்குமோ..? அப்படித்தான்
இருக்கும்.. அவர் பார்வையிலேயே அவர் மனசை என்னால புரிஞ்சிக்க முடியுதே..

அவரோட ஆளுமையான தோரணை, அசட்டுத்தனம் இல்லா கம்பீரமான நடை, உடை, பாவனை, பேச்சு, சிரிப்பு, எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கே..

ஆனா என்னமோ ஒரு தயக்கம், பயம், வெட்கம் எல்லாம் என்னை போட்டு பாடா படுத்துதே..என்று நினைத்து கொண்டே கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவள்..

யாரோ தன்னை மது.. என்று கூப்பிடும் குரல் ஒலிக்கவும் சுய நினைவிற்கு வந்தவள், நிமிர்ந்து பார்க்க ரமணி

"சொல்லு சித்தி'

"என்னடி பகல்லேயே கண்ண மூடி கனவு காணுற'

"போ சித்தி காலையில சீக்கிரமே எழுந்தது தூக்கமா வருது..

உன்ன திருச்சி அம்மாச்சி தேடினங்க, மச்சு வீட்ல இருந்தாங்க. ஒரு எட்டு போய் பாரு..

திருச்சி அம்மாச்சி என்றதும், மனதுக்குள் எங்கோ இனித்தது. வேகமாக எழுந்து ஓடினாள், அவளின் வேகத்தை வியப்பாக பார்த்து நின்றார் ரமணி.

        
                   ******** ******* *******

திருமணம் முடிந்ததும் நேற்றே பாதி சொந்தங்கள் கிளம்பிவிட, தங்கியவர்கள் காலையில் இருந்தே ஒவ்வொருவராக புறப்பட்டார்கள்.. இரண்டு நாட்கள் இருந்து போகலாம் என்று தாய் சொன்னதும் மகிழன் துள்ளிக் குதித்தான், இரண்டு நாட்கள் இருக்கிறது அதற்குள் தன் காதலை மதுவிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் உருப்போட்டான்.

காலை உணவை எல்லோரும் முடித்திருக்க, மகிழன் இப்போது தான் அமர்ந்தான், திலகவதி பரிமாற,  இட்லியை பிசைந்து கொண்டே இருந்தான்.

"என்ன இட்லி இறங்களையோ' என்ற திலகவதியின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன். அசட்டு தனமாக சிரித்து வைத்தான்.

"எப்படி இறங்கும் மனசு சாப்பட்டுல இருக்கணும், எங்கயோ மனச விட்டுட்டு இங்கே உட்கார்ந்த இப்படி தான்..

புரியாமல் அவரை கேள்வியாய் பார்த்தான்.

“அதுசரி கொழுந்தனாரே, நாம எப்ப மது வீட்டுக்குப் பொண்ணு கேட்டுப் போறோம்?" திடீரென்று திலகவதி கேட்க மகிழன் திகைத்துப் போனான்.

"மதினி?!"

"எதுக்கு இவ்வளவு ஆச்சரியப்படுரீக? பொண்ணைப் புடிச்சிருக்குதானே?" அவர் கேலியாக சிரித்தார்

"உங்களுக்கு என்னைப் பார்த்தாக் கேலியா இருக்கில்லை."

"ஆமா, அதான் மதுவை பார்த்தாலே நீங்க உலகத்தை மறந்து நின்னுடுறிகளே! உங்க அண்ணன் கூட நேத்துக் கேட்டாங்க."

"என்னது அண்ணனா?"

"மகிழனுக்கு மதுவை பிடிச்சிருக்கான்னு."

"ஐயோ அண்ணனுக்கு தெரியுமா?!"

"ம்க்கும்... அனேகமாக இந்நேரத்துக்கு அது தாமரை மதினி வீட்டுலயும் தெரிஞ்சிருக்கும், நமக்கு வேலை மிச்சம் போங்க!"  இப்படி இங்கே சொல்லிக் கொண்டிருக்கும் போதே

தாமரையும் மகிழன் தாயிடம் இது குறித்து தான் பேசிக்கொண்டு இருந்தார்... உடன் ரமணியும் இருந்தார்.

"சித்தி மகிக்கு எதுவும் பொண்ணு பார்த்து இருக்கியா?

"இல்ல தாமர' வீடு கட்டிட்டு தான் கல்யாணம்னு சொல்லிட்டான், இப்பத்தான் சொந்தமா தொழில் தொடங்கி இருக்கான்... பார்க்கலாம்?

"மகிக்கு மதுவை முடிக்கலாம் சித்தி' தாமரை ஆசையாக கூற, "ஆமா சித்தி' என்றார் ரமணியும் உடன் சேர்ந்து..

பார்வதி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் "கேட்க சந்தோசமா தான் இருக்கு! எனக்கும் ஆசைதான், ஆனா இது சரியா வருமா?

"ஏன் சித்தி'

" நீங்க தம்பி மேல இருக்கிற பாசத்துல பேசுறீங்க!, மாப்பிள்ளை சம்மதிக்கனும் தாமரை?  நான் அவரை குறை சொல்லலை, எங்க நிலமை இப்ப சரியான சூழலில் இல்
லை. பொண்ணு கேட்டு அவர் இல்லைன்னு சொல்லிட்ட உறவுக்குள் சங்கடம், வேண்டாம் தாமரை! இப்படியே இருப்போம்.

தாமரைக்கும், ரமணிக்கும் முகம் வாடிவிட்டது, பார்வதியிடம் மேற்கொண்டு விவாதிக்கவில்லை தாமரையால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகள் மனதில் என்ன உள்ளதென்று தாய்க்கு தெரியும். நேற்று மகிழன் மனதும் தெரிந்துவிட்டது. அவருக்கு இருப்பு கொள்ளவில்லை, எப்படியாவது இருவரையும் சேர்த்து விட வேண்டும், பெரியவர்கள் பேசி வைத்த திருமணமாக..

                                      (10)

தாமரையும், சந்திரனும் விசாலாட்சி வீட்டில் இருந்தார்கள். மாலையில் எல்லோருக்கும் டீயை கொடுத்த தாமரை கணவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். அருகில் வேறுயாரும் இல்லை.

"என்னங்க."

"ம்... என்னம்மா?" பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த சந்திரன் மனைவியை நிமிர்ந்து பார்த்தார்.

"நம்ம மதுவுக்கு மாப்பிள்ளைப் பார்க்க வேணாமாங்க?" கேட்ட மனைவியைச் சற்று வினோதமாகப் பார்த்தார் சந்திரன்.

"எதுக்குங்க இப்போ என்னை இப்பிடிப் பார்க்கிறீங்க? அப்பிடி என்னத்தை நான் தப்பாக் கேட்டுட்டேன்?”

"பைத்திமா உனக்கு? மது இப்பதான் பிளஸ் டூ படிக்கிற, ரெண்டு டிகிரியாவது படிக்கணும், நாளைக்கு அவ நல்லா சம்பாரிச்சு சொந்தக் கால்ல நிக்கனும். பொண்ணுங்களுக்குச் சுய சம்பாத்தியம் ரொம்ப முக்கியம் தாமரை" அதுக்குள்ள பிள்ளைக்கு கல்யாணம் பேசுற.

"இல்லங்க அது..." என்று இழுத்த மனைவியின் முகம் உயிர்ப்பில்லாமல் இருக்கவே சந்திரன் கவலையோடு மனைவியை பார்த்தார்.

"என்னாச்சு தாமரை? எதுக்கு நீ இப்ப இவ்வளவு யோசிக்கிறே?"

"அது வந்துங்க..."

"சொல்லும்மா."

"நேத்து கல்யாணத்திற்கு வந்த செல்வி மதினி  ஒன்னு சொன்னாங்க.'

"என்ன சொன்னாங்க?"

"இல்லை... நம்ம மதுயை அவங்க மகனுக்கு ரொம்பப் புடிச்சிருக்காம்."
நான் மதுவை கேட்பேன், நீ கண்டிப்பாக் குடுக்கணும்னு சொன்னாங்க."

"எது அந்த விளங்காத பயலுக்கா, சும்மா சொல்லி இருப்பாங்கம்மா, அந்த குடும்பத்தில் நம்ம பொண்ண கொடுப்பமா?

"அவங்க அப்படி கேட்டதே எனக்கு அருவருப்பா இருந்துச்சுங்க, நம்ம மதுவுக்கும் யாரையாவது பேசி முடிச்சிட்டா இப்படி கேட்க முடியாது இல்ல. 

"மூட்டை பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்த சொல்ற...

"அது இல்லைங்க, சேதுவுக்கும், கவிதாவுக்கும் பேசி வச்சு இப்ப முடிக்கலையா.. அதுமாதிரி என்று இழுக்க..

"அப்படி யார் இருக்க.

"உங்க பக்கம் இல்லைன்னாலும் எங்க  பக்கம் யாராவது இருக்கலாமில்லை?"

"உங்க பக்கம் எனக்குத் தெரிஞ்சு யாருமில்லையே..." சந்திரன் சாதாரணமாக சொல்ல...

"ஏன் என் தம்பி இல்லையா? இப்ப அவனை கவனிச்சீங்களா சும்மா ராசா மாதிரி இருக்கான் இல்ல?" என்று பெருமையாக கேட்டார் தாமரை.

"அது சரியா வராது தாமரை! அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள் இருந்த மறந்திரு' சட்டென்று சொன்னார் சந்திரன். உன் பாசத்துக்காக எம்பொண்ண  கஷ்டப்பட விட என்னால முடியாது. சொந்த வீடு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வாங்கும் பையனுக்கு தான் என் பொண்ண கொடுப்பேன் என்று அவர் திட்டவட்டமாக சொல்லும் போது மகிழன் வாசலில் தான் நின்றான். இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி. யாரும் பார்க்கும் முன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

இதோ ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது, அதன் பிறகு இன்றுதான் மதுவை நேரில் பார்க்கிறான். கடினமாக உழைத்தான் இன்று நல்ல நிலையில் இருக்கிறான். ஆனாலும் பெண் கேட்க ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

பள்ளிப் பருவத்தில் இருந்தே கடினமான வாழ்க்கைதான். பள்ளிப் படிப்பை தாய் பார்த்துக்கொள்ள.. இவனது முயற்சியால் மட்டுமே கல்லூரி வாழ்க்கை. சாப்பாடு, துணி, இவற்றையெல்லாம்  தாய் பார்த்துக் கொள்வார். படிப்புக்கு இவன் தான் பணம் தேட வேண்டியிருந்தது. கடினமான உடல் உழைப்பைக் கொண்ட பகுதி நேர வேலைதான் உதவியது. 

வாழ்க்கை பற்றிய தெளிவு அவனிடம் அப்போதே துல்லியமாக இருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து தாயுடன் சந்தைக்கு போவான். சிறுவயதில் இருந்தே பழகிப்போனதால் அதை அவன் என்றுமே கடினமாக நினைத்ததில்லை. தாயின் காய்கறி கடையில் வருமானம் குறைவுதான், ஆனால் உணவுக்கு பஞ்சமில்லை, மீதம் ஆகும் காய்களை எல்லாம் பார்வதி அவனுக்கு விதம் விதமாக சமைத்துக் கொடுப்பார். சத்தான உணவுகளையே உண்டதால் அவனுக்கு வலுவான தேகம். கம்பீரமான தோற்றம், முகத்தில் ஒரு வசீகரம் இருக்கும். மகனை பார்க்கும் தாயின் கண்களில் அதன் பெருமையும், வாஞ்சையும் தெரியும். 

அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் வாழ்வின் தேடல் இரவு 11 மணிவரை நீளும். வறுமையிலும் நேர்த்தியான அவனது திட்டமிடல் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, உழைப்பு.. உழைப்பு என ஓடினாலும், குறும்பு, கேலி என இலகுவாக இருக்கவும் செய்வான். அதிலும் வரம்பு மீறிய ஆர்ப்பாட்டம் இருக்காது. 

வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்தவன் வேறு பக்கம் கவனத்தை திருப்பவில்லை. உழைப்பு... உழைப்பு.. உழைப்பு.பிமகிழன் நிலையே மது சற்று தள்ளி வைத்தது எனலாம். மாமன் எதிர்பார்க்கும் நிலையை அடைய வேண்டும். எல்லா தகுதியோடும் போய் பெண் கேட்க வேண்டும். அதுவரை மது படிக்கட்டும். தன்னால் அவளது கவனம் சிதறக்கூடாது என நினைத்தவன் மனதில் இன்று ஏதோ ஒரு தயக்கம்.


***************


கார்த்திகா அறைக்குள் வரவும் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்ற மது ஸ்பீக்கரில் போட்டாள். மதுவின் வீட்டிலிருந்து யார் அழைத்தாலும் கார்த்திகாவும் இணைந்து கொள்வாள்.

"சொல்லும்மா."

"நான் சொல்லுறது இருக்கட்டும். நீ எப்ப வீட்டுக்கு வர்ற." காட்டமாக வந்தது தாமரையின் குரல்.

மது கார்த்திகாவைத் திரும்பிப் பார்த்தாள்.

"என்னாச்சும்மா? ஏன் கோபமா பேசுற?"

"வேற எப்படிப் பேச? உங்க அப்பா மட்டு மரியாதை இல்லாம பேசுறார்! எனக்கு வந்த ஆத்திரத்துக்கு..." தாமரை அங்கே பல்லைக் கடிப்பது இங்கே கேட்டது. மது விக்கித்துப் போனாள்

"அம்மா! என்ன நடந்துச்சு தெளிவா சொல்லு?" நிதானமாகக் கேட்டாள் மது.

"உனக்கு உங்க அப்பா இங்கே மாப்பிள்ளை பார்த்துட்டார், அடுத்த வாரம் ஞாயிறு பொண்ணு பார்க்க வாரங்க, ஒழுங்க எல்லாத்தையும் விட்டுத் தொலைசிட்டு வீட்டுக்கு வந்து சேரு. தாய் போனை வைத்துவிட்டார். 

"என்னடி மது இது?" கார்த்திகாவின் கேள்வியில் மதுவின் கண்களில் நீர் கசிந்தது.

"புரியலடி. என்ன திடீர்னு இப்படிப் பண்ணி இருக்காங்க? அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வர்ராங்களாம் எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை."

வேகமாக தன் தம்பிக்கு போனைப் போட்டாள் மது.

"சொல்லுக்கா."

"டேய்! அங்க என்ன நடக்குது? அம்மா என்னென்னவோ சொல்லுறாங்க."

“அநேகமாக உனக்கு அடுத்த மாதம் கல்யாணமா இருக்கும்னு நினைக்கிறேன்"

"என்னடா சொல்லற." அதிர்ந்தாள் சகோதரி.

"ரெண்டு நாளைக்கு முன்னாடி தரகர் ஒரு குடும்பத்த கூட்டிக்கிட்டு வந்தார்க்கா, உன் போட்டோ பார்த்தங்களம்! அவங்க பையனுக்கு உன்ன பிடிச்சு இருக்காம், அதான்  முந்திக்கணும்னு உடனே கிளம்பி வந்துட்டங்களாம், மாப்பிள்ளை வரல்ல. ஆனா, போட்டோ குடுத்தாங்க. நானும் பார்த்தேன், செம ஸ்மார்ட்க்கா. சென்னையில மாப்பிள்ளைக்கு வேலையாம் அங்கேயே சொந்தமா வீடும் இருக்காம். 

மதுவும் கார்த்திகாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

"என் போட்டோவை தரகரிடம் யார் கொடுத்தது ."

"தெரியலக்கா' 

"அப்பா என்ன சொன்னாங்க?"

'அவர் இதுவரைக்கும் எதுவும் சொன்ன மாதிரி தெரியல, ஆனா அவருக்கும் இந்த சம்மந்தம் பிடித்திருக்கும் போல தான் தெரியுது.

என்னக்கா?  இந்தக் கல்யாணம் உனக்கு ஓகேயா?" தம்பி அதிசயப்பட .. கண்கள் கலங்கியது மதுவுக்கு, கார்த்திகா மதுவின் கையிலிருந்த போனை பறித்து கோபமாக தொடர்பை துண்டித்தாள்.

"என்னதாண்டி உன் பிரச்சினை? 

கண்ணீர் மல்க கார்த்திகா மடியில் விழுந்தாள் மது. அவளது துன்பத்திலும் இன்பத்திலும் அவளுக்கு தோள் கொடுக்கும் தோழி கார்த்திகா தான், சோர்ந்துபோகும் போதெல்லாம் குழந்தை போல அவள் மடியில்  சுருண்டுப் படுத்துக் கொள்வாள். 

                           ********

மறு நாள் விடிந்ததும் விடியாததுமாக தாமரைக்கு கைபேசியில் அழைத்தாள் கார்த்திகா. உடனேயே அழைப்பில் வந்தார்.

"ஆன்ட்டி, நான் கார்த்திகா"..

சொல்லும்மா. என்ன இத்தனை காலையில கூப்பிட்டிருக்கே?"

“இந்த கல்யாணம் மதுவுக்கு வேண்டாம் ஆன்ட்டி' அவ இப்ப கல்யாணத்துக்கு ரெடி இல்ல. மனசுல மாமனை வச்சுக்கிட்டு வேற ஒருத்தருக்கு கழுத்த நீட்ட என்னால முடியாதுன்னு அழுது வடிக்கிறா..

"எனக்கும் என் மக மனசு தெரியும்மா..  சொல்லலையா அவா?" என் தம்பிக்கு அவளை குடுக்கணும்னு முதல்ல சொன்னதே நான் தான்.

அவன்தான் எதுவும் சொல்லாமல் விட்டுட்டு போயிடனே நான் என்ன செய்ய. வீட்டுக்கும் வர்றது இல்ல, அவன் மட்டும் கேட்டிருந்தா நான் எப்போவோ அவங்க கல்யாணத்த முடிச்சிறுப்பேன்..

"இப்ப எதுவும் பேசி முடிக்க முடியாத ஆன்ட்டி,

நாங்க எப்படிமா கேட்க முடியும், அவங்க தான் கேட்டு வரணும். இவருக்கும் அவனுக்கு கொடுக்க ஆசைதான்,  நான் கேட்டப்போ, பார்க்கலாம்னு தான் சொன்னார்!" ஆனா என் சித்தியும், தம்பியும் ஒதுங்கி போய்ட்டாங்களே,

"ஓ... ஆனா மது எங்கிட்ட எதுவும் சொல்லலை ஆன்ட்டி. அவங்க மாமா திருச்சியில் தான் இருக்கிறதா மட்டும் சொன்ன.

அவா அங்க படிக்கிறது அவனுக்கும் தெரியும், எம்பொண்ணுனா அவனுக்கு உசுரும்மா,  மது மதுன்னு அப்படி தாங்குவான், யார் கண்ணு பட்டுச்சோ எதுவும் கூடி வரல.

ஆன்ட்டி." இந்த பொண்ணு பாக்குறத தள்ளிப்போட முடியாத.

"அதை விடும்மா, பொண்ணுன்னு இருந்த நாலுபேர் கேட்டு வரத்தான் செய்வாங்க,  என் தம்பிக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டதா ஒரு செய்தி மது அப்பா காதுக்கு வந்திருக்கு. அவனுக்கு முன்னாடியே என் பொண்ணு கல்யாணத்தை முடிக்கணும்னு துடியா துடிக்கிறார். அதுல எனக்கும் அவருக்கும்  சின்னதா வாக்குவாதம், நேத்து அவர் கோபத்தில் என்னை திட்டிட்டார், அந்த கோபத்தில் நானும் மதுவிடம் கத்திட்டேன், நைட்டு சாப்பிட்டாளா ம்மா..

"இல்ல ஆன்ட்டி' ரெம்ப நேரம் அழுதுட்டே இருந்தா, நாங்க சாப்பிட கூப்பிட்டும் அவ வரல..

"இப்ப எங்க அவ'

"தூங்குறா ஆன்ட்டி'

"சரி உன் பிரண்டு என்னதான் சொல்லுறாங்க? அவ நினைக்கிறது சரியா வரும்னு எனக்கும் இப்ப தோணால! நீயாவது சொல்லிக் கொஞ்சம் புரியவைம்மா..

"சரி ஆன்ட்டி'..

கார்த்திகா சமையல் அறை தொட்டியில் கிடந்த பாத்திரங்களை அலசி அடுக்கிவிட்டு, நால்வருக்கும் உணவை கட்டிவைத்து விட்டு அறைக்குள் நுழைந்தால்

குளித்து முடித்து வெளியே  வந்த மது
கார்த்திகாவிடம் “சாப்பிட்டியா?" என்றாள். 

"ம்" என்றவளின் பார்வை மதுவையே துளைத்தெடுத்தது.

"என்னடி.. ஒரு மாதிரி பார்க்கிற?"

"எப்பதான் வாயை திறப்பேன்னு பார்க்கிறேன்

"என்ன?" அவள் புரியாமல் கேட்க

"யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கத மது.. ஒரு நாள் பூனை வெளிய வந்து தானே ஆகனும்.. அன்னைக்கு இருக்கு.." என்றவள் மதுவின் பதிலை எதிர்பார்க்காமல் செருப்பை மாட்டிக்கொண்டு கீழே இறங்கினாள்

கார்த்திகாவின் இந்த பதிலில் சற்றுக் குழப்பித்தான் போனாள் மது..
'தெரிஞ்சுடுச்சா? போச்சு.. நானே சொல்லிருக்கணுமோ.. இவளுக்கு எப்படி தெரிஞ்சது பலவாறு யோசித்தாளே தவிர தோழியிடம் மாமனுக்கு பொண்ணு பார்த்துட்டாங்க என்று நேற்று கவிதா சொன்னதை சொல்ல தைரியம் தான் வரவில்லை, அவளும் வேகமாக கீழே இறங்கி வந்தாள்.


**************

மொட்டை மாடியில் நின்றிருந்தாள் மது, மாமனைச் சுற்றியே எண்ணங்கள் வந்தது.

 வீட்டில் அம்மாவின் பேச்சில் 'மகிழன்' பெயர் அடிக்கடி வந்து போகும். பெரிதாகக் கண்டு கொள்ளாதவள் போல அனைத்தையும் கேட்டுக் கொள்வாள். சின்ன வயதில் இருந்தே அவன் மீது ஒரு ஈர்ப்பு, 

தாமரைக்கு எப்போதும் தம்பி மேல் அளவுக்கதிகமான அன்பு, தந்தை இல்லாமல் வளர்கிறான், வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறான். அம்மாவை அப்படிப் பார்த்துக்கொள்கிறான், என் தம்பி தங்கம், வைரம் என்று எல்லோரிடமும் பெருமை பேசும் தாயின் மூலம் அவனைப் பற்றி மதுவுக்குள்ளும் ஒரு பிம்பம் உருவாகி இருந்தது.

சிறுவயதில் அவன் மீது இருந்த அன்பு அவள் வளர வளர அதுவும் வளர்ந்தது, குழந்தையாய் ஓடித் திரிந்த காலத்தில் அவன் கைகோர்த்து நடந்தவள், பருவம் அடைந்தும் அதையே தொடர்ந்தாள். என்னுடைய மாமா என்பதை தாண்டி அவள் மனதில் எதுவும் இருந்ததில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பில் தான் தொடங்கியது அந்த மாற்றம், சேதுவுக்கு கவிதாவை பேசிமுடிக்க, அவள் நினைவுகளில் மகிழன் அடிக்கடி வந்துபோனான். அவனைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று மனது தவிக்க உள்ளுக்குள் உருகித் தவித்தாள். எண்ணங்கள் முழுவதும் மகி..!.மகி.. படிப்பில் கூட கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள், 

சேது, கவிதா திருமணத்துக்கு மகிழனும் வருவான் என்பதே அவளுக்குள் உயிர் வரை இனித்தது. மனசுக்குள் அவனை தேடத் தொடங்கிய பிறகு நிறுத்தி நிதானமாக எல்லாம் அவனை பார்த்தது கிடையாது. அதற்குத் தைரியமும் வந்ததில்லை. 

முதல் முதலாக அவனை காதலோடு பார்த்த நாள், அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்று  சேதுவோடு  நின்றிருந்தவனைக் கடந்தவள், ஒரு எதிர்பார்ப்போடு திரும்பிப் பார்த்தாள், அவன் பார்க்கவில்லை. 

வீட்டுக்குள் நுழைந்தவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. எட்டிப் பார்க்கச் சொல்லி ஆசை கட்டளையிட. சுற்றுமுற்றும் பார்த்து யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்  கொண்டவள் மெதுவாக எட்டிப் பார்த்தாள்.. 

அந்தப் பார்வைக்காகவே ஏங்கி நின்றதுபோல் அவன் விழிளும் அவளையே பார்த்தது, பக்கத்தில் பேசிக்கொண்டு நின்றிருந்த சேதுவையும் காணவில்லை. மகிழன் மட்டும் நின்றிருந்தான்.

இவள் விழிகளைச் சந்தித்தவுடன் அவன் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. கண்களில் காதல் வழிய ஒரு சின்னப் புன்னகையோடு இவளையே பார்த்திருந்தான். இருவராலும் பார்வையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. 

ஒன்றை ஒன்று கவ்விக்கொண்ட விழிகள் நான்கும் அந்தக் கணத்திலேயே உறைந்து போனது. காதலைச் சொல்லிக் கொள்ள அங்கு வார்த்தைகளுக்கு அவசியம் இருக்கவில்லை. சொல்லாமலேயே அங்கு ஒரு காதல் நாடகம் அரங்கேறியிருந்தது. 

 இத்தனை நாள் பிரிவின் ஏக்கத்தோடு அவனை தன் கண்களில் அவனுக்கான முழு காதலையும் தேக்கி காதலாக பார்த்தாள் மது. அவளின் கண்களில் தெரிந்த தனக்கான காதலை புரிந்து கொண்ட மகிழன் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். 

"மதுவும் என்னை காதலிக்கிறாளா..?"

அவளுக்கு தன்னைப் பிடிக்குமென்று அவனுக்குத் தெரியும், பிடித்தம் எப்போது காதலாக மாறும் என்ற ஏக்கம் அவன் மனதுக்குள் இருந்தாலும் அதை வெளியே அவன் காட்டியதில்லை. அவள் கல்வியில் அவனுக்கும் அக்கறை இருந்தது. இப்பொழுது மது கண்களில் தனக்கான காதலை பார்க்கவும்..! இன்ப அதிர்ச்சியில் அவனும் உலகம் மறந்து நின்றான்

யாரோ வரும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு தன் காதல் உலகிலிருந்து வெளிய வந்தாள் மது..

"ஐயோ ச்சே.. இப்படியா..? அவரை விடாம பாத்து வைப்பேன்" என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் வேகமாக தலையை குனிந்து கொண்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மகிழன்,  அவளை சீண்டும் விதமாக "என்னை ரொம்ப தேடுன போல..?" என்று குறுஞ்சிறுப்புடன் கேட்க..

"இப்படி பறக்காவெட்டி மாதிரி பார்த்து வச்சா, இப்படித்தான் மானம் போகும் என்று மனதுக்குள் நொந்தவள்.. 

குனிந்தவாறே "இல்ல மாமா.." என்று வார்த்தைகளை வெட்கத்தில் குழைத்து, தரையில் கால் விரல்களால் கோலமிட்டாள். அவள் கண்கள் வெளிப்படுத்திய ஏக்கத்தை, தவிப்பை புரிந்து கொண்ட மகிழன்,

அப்படியா..? ஆனா மதினி என்னை நீ ரொம்ப தேடுனதா சொன்னாங்களே.. என்று குறும்பாக கேட்டான்,

"அய்யோ நான் கேட்டதை இந்த அத்தை சொல்லிட்டாங்க போலேவே.. என வெட்கத்தில் சிவந்தவள்..

"அது.. அது..சும்மா தான் அம்மாச்சிய தான்.. என்று கொஞ்சம் திக்கி சொல்லவும், அவளின் அவஸ்த்தையில் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான். தன்னுடைய நிலையை கண்டு அவன் சிரிக்கவும் அங்கிருந்து வேகமாக அறைக்குள் ஓடிவிட்டாள்.

அன்று பார்த்த அந்த முகம்தான் இன்றும் அவள் கண்ணுக்குள் நிற்கிறது... மாமனை பிடிக்கும்,  ஆனால் அதற்கு மேல் என்ன..? யோசிக்கவே பயந்து கொண்டிருந்தவளின், பயத்தை அவன் பார்வை உடைத்து அவன் காதலை சொல்லியது. "மாமனும் தன்னை காதலிக்கிறான்" மதுவுக்கு பரவசத்தில் வானில் சிறகே இல்லாமல் பறக்கும் உணர்வு.. மனதும், உடலும் எந்நேரமும் கனவுலகிலே மிதந்தது.

அவன் காதலை உணர்ந்த கொஞ்ச நாட்களிலே, அவனை எப்போது மீண்டும் பார்ப்போம்? என ஏங்க ஆரம்பித்தது அவள் மனது. அவனை பார்க்காமல் எதுவும் ருசிக்கவில்லை. ஆனால் அவனோ முற்றிலுமாக அவர்கள் உறவையே தவிர்த்துவிட்டான். அவனின் பிரிவு மிகுந்த மன உளைச்சலையே கொடுத்தாலும் எல்லாவற்றையும் அவள் தாங்கிக் கொண்டாள். 

அவன் தன்னைத் தேடி வராமல் இருக்க ஏதோ காரணம் இருக்கிறது, ஒருநாள் கண்டிப்பாக வருவான், தன் தாயைப் போலவே அவளும் அவனை நம்பினாள். அவனுக்காக காத்திருந்தாள், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் கவிதா சொன்ன செய்தி அவள் நம்பிக்கையை அசைத்து பார்த்தது. மேலே அவள் சிந்தனையில் இருக்க, கீழே அவளை தேடிக்கொண்டு இருந்தாள் கார்த்திகா

"மது...” என்ற அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லாமல் போகவே எழுந்து வந்து கிச்சனில் பார்த்தாள். அங்கும் மது இல்லாமல் போகவும்.. மாடிக்கு வர. அங்கு கண்ணீரோடு நின்று கொண்டிருந்த மதுவை பார்த்ததும்.. கோபமாக அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாக அழுத முகமாகத்தான் இருக்கிறாள். அது கார்த்திகாவிற்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மது.. ரெண்டு நாளா நீ சரியே இல்ல.." அடிக்கடி அமைதியாகிடுற என்னதான்டி ஆச்சு உனக்கு..? கார்த்திகா ஆராய்ச்சியாக கேட்டாள்.

"ச்சு..ஒண்ணுமில்ல விடு கார்த்தி'.. 

"என்ன ஒண்ணுமில்ல' .. ஏதோ இருக்கு.. நீ நார்மலாவே இல்ல..எதாவது பிரச்சனையா மது..? என்றாள்

"அவள் மாற்றி, மாற்றி கேட்கவும், கண்கள் லேசாக கலங்கியது' ஆனால் சொல்ல பிடிக்கவில்லை.

"இப்ப எதுக்குடி காலையிலேயே அழுது வடிக்கிற.. என்னன்னு தான் சொல்லி தொலையேன்'

'ஆரம்பிச்சிட்டியா...?" என்றாள் மது.

'நான் ஆரம்பிக்கிறது இருக்கட்டும் நீ நடந்துக்கிறது உனக்கே நல்லா இருக்க சொல்லு, ரெண்டு நாளா நைட் எல்லாம் தூங்காமல் பேய் மாதிரி நடந்து திரியுற என்றாள் முறைப்பாக.

'நான் என்ன பண்ணிட்டன்னு இப்ப நீ என்னை படுத்தற..? என்றாள் மது.

மதுவை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்.. 'ம்ம்.உனக்கு என்ன ஆச்சு மது.. ஏன் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற..? என்றாள் மன்றாடலாக.

'அதெல்லாம் ஒன்னுமில்லை'...

'உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. சரி என்ன டிபன் செய்யலாம்?"

"எல்லாம் செஞ்சி ஹாட் பாக்சுல ரெடியா இருக்கு.. பசிச்ச வா சாப்பிடலாம்." என்றாள் சிரித்தபடி

'என்ன...ரெடி பண்ணிட்டியா? இந்த நேரத்திலா? நீ தூங்கவே இல்லையா மது...?" என்றாள் ஆச்சரியமாக.

'டிபன் செய்யறதுக்கு நைட்டெல்லாம் தூங்காம இருக்கனும்மா என்ன!?.

'நான் இன்னும் ப்ரஷ் கூட பண்ணலடி, நீ குளித்து ரெடியாகி ஆறு மணிக்கே சாப்பிடலாமான்னு கேட்கிற' என்றாள் சிரித்ததுக் கொண்டு...

உன் மாமாவிடம் மனம் விட்டு பேசு மது, இப்படியே போனால் நாட்கள் தான் போகும், எத்தனை முறை தான் உன்னை பார்க்க வரும் மாப்பிள்ளையை உன்னால் தட்டிக் கழிக்க முடியும். உன் அப்பா, அம்மாவையும் நீ காயப் படுத்துகிற...

அமைதியாக இருந்தாள் மது, கார்த்தி சொல்வது நியாயமாகத்தான் பட்டது. தானே தன்னுடைய வாழ்க்கையை துன்பமாக்கிக் கொள்கிறோமோ என்றிருந்தது அவளுக்கு, மாமா இடத்தில் தன்னால் இன்னொருவரை எப்போதுமே வைத்துப் பார்க்க முடியாது எனும் போது, எதற்கு இந்த முட்டாள்தனமான தயக்கம்?  மனது கேள்வி கேட்டது.

'என்னை கல்யாணம் பண்ணிக்க மாமான்னு அவங்க வீட்டுக்கு போய் நின்னு கெஞ்ச போறியா?' இன்னொரு மனது கேட்டது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். தலை வலிப்பது போல் இருந்தது.


  **************

இருவரும் கீழே இறங்கி வர.. ஜானகி நிகிலாவிடம் கத்திக்கொண்டு இருந்தாள்.

"சனியனே தாலியை எங்கடி வச்ச' 

"நீ இனிமே வெளியே போய் போசுவேன்னு சொல்லு தாரேன்' இது நிகிலா.

"காலையிலேயே என்னடி பிரச்சனை' என்று இருவருக்குள்ளும் வந்தாள் கார்த்திகா, மது எதையும் கண்டுகொள்ளாமல் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டாள். 

தாலியை தரச் சொல்லு கார்த்தி, அவர் இப்ப வீடியோ கால் பண்ணுவாறு, மாட்டினால் போச்சு. ஒரு மாசத்துக்கு அதையே சொல்வார்.

"தாலியை வச்சு என்னடி விளையாட்டு, நிகி தாலியைக் கொடு'

"அவ நைட் என்ன பண்ணினான்னு உனக்கு தெரியுமா? என்னை பக்கத்துல வச்சுக்கிட்டே போன்ல புருஷன் கூட ரெண்டு மணி வரைக்கும் ரொமான்ஸ் பண்றா..

ஹாலுக்கு போடின்னு சொன்னதுக்கு செக்சியா பேசி வெறுப்பேத்ரா..ஒரு பச்சைபுள்ளைய வச்சிட்டு செய்ற வேலையா இது' என்று நிகிலா வேடிக்கையாகக் கூற, 

"இவ கூட இருந்தா, முடியாது சாமி, கார்த்தி நான் மது கூட போறேன் நீ இங்கே சிப்ட் ஆகிக்க என்றாள் ஜானகி. 

இது இங்கே வழமையாக நடக்கும் ஒன்றுதான், 

நிகி முதல்ல தாலியை கொடு என்று கார்த்திகா வேண்ட, அறைக்குள் சென்று எடுத்து வந்தாள் நிகிலா. அவர்களை சமாதானம் செய்து உள்ளே நுழைய புத்தகத்தில் மூழ்கி இருந்தாள் மது.



மதுவோடு சேர்ந்து தோழிகள் நால்வரும் கேண்டீனில் அமர்ந்திருக்க தன் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு மஹாவும் அங்கே வந்தாள். இப்போது அவளுடைய இலக்கு மதுவின் நட்பு, எப்படியாவது அவளை நெருங்கிவிட வேண்டும்

நிகிலாவும், ஜானகியும் மஹாவின் வகுப்புப் தோழிகள். ஜானகி திருமணத்தில் இருந்து கார்த்திகாவோடும் நல்ல நட்பு தொடர்ந்தது, அவர்களை வைத்து மதுவை நெருங்குவது எளிது.

திருமணத்தில் தோழிகளுடன் சேர்ந்து மஹா செய்த சேட்டைகளை கார்த்திகா தங்கள் அறையில் சொல்லி சிரித்தபோது மதுவும் அருகில் இருந்ததால் அவளுக்கும் மஹாவின் பெயர் பரிச்சயம், 

அவள் செய்யும் சேட்டைகளை கேட்ட பின்பு அவள் பெயரை மறக்கத்தான் முடியுமா?  மஹா இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அதனாலேயே அவள் நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது. ஜானகியின் திருமணத்திற்கு மதுவாள் வரமுடியவில்லை. ஆனாலும் அவளுக்கும் மஹாவை பெயரளவில் தெரியும்.

மதுவை ஜானகியின் தோழியாக தெரிந்திருந்தது மஹாவுக்கும், நெருக்கம் இல்லை என்பதால் அன்று அவளை பார்த்தவுடன் சட்டென்று ஞாபகம் வரவில்லை. கல்லூரியில் தோழிகளோடு அவளை பார்த்திருக்கிறாள்.. ஆனால் பேசியதில்லை. இப்போது மதுவோடு பேச வேண்டும், தன் சித்தப்பாவுக்காக அவளோடு பேசியே ஆகவேண்டும்.

மதுவை அவ்வளவு பிடித்திருந்தது மஹாவுக்கு, .. தன் ஆருயிர் சித்தப்பாவின் அன்புக்குறியவளான அவளை பார்க்கும் போது அளவிட முடியாத அன்பு ஒன்று மனதிற்குள் எழுந்தது! மகிழன் மனைவியாகவே அவளை நினைக்கும் அளவிற்கு அப்படியொரு பிடித்தம்..

எப்போதும் போலேவே ஜானகி அருகே வந்தமர்ந்தவள், “ஜானு இந்தா' என்று அவளுடைய ரெக்கார்ட் நோட்டைக் கொடுத்தாள். அமைதியுடன் வாங்கி தன் பையில் வைத்துக்கொண்டாள் ஜானகி.

"என்ன ஜானு, முகம் டல்லா இருக்கு ரகசியமாய் மஹா கேட்க, 

“இல்லையே" என்றாள் ஜானகி.

"நைட்டு புல்ல தூங்காம போன்ல ரொமான்ஸ் பண்ணினா மூஞ்சி எப்படி இருக்கும். இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் என்று நிகிலா கேலி பேச...

கோபமான ஜானகி தண்ணீரை எடுத்து நிகிலாவை நோக்கி ஊற்றினாள் . நிகிலா விலக தண்ணீர் மதுவை நனைத்தது. ஏதோ சிந்தனையில் இருந்த மது தன்மேல் ஈரம் பட திடுக்கிட்டாள். அதிர்ச்சியில் உடல் நடுங்க தொடங்கியது. 

"ஐயோ' என்று ஜானகி ஓடிவந்து தன் துப்பட்டாவால் ஈரத்தை துடைக்க மதுவின் கண்களில் கண்ணீர். 

"ஏய் மது இதுக்கெல்லாமா அழுவங்க என்று நிகிலாவும் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டாள். மது தேம்பி தேம்பி அழுதாள், 

மஹாவுக்கு தான் அவளை பார்க்க சிரிப்பு சிரிப்பாக வந்தது. இவ என்ன குழந்தை மாதிரி இருக்க, ஐயோ சித்தப்பா நீ செத்த..


************


மஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள் மது.  இன்று அபூர்வமாக சேலையில் வந்திருந்தாள் மஹா, கடந்த ஒரு மாதமாக மஹா அலைந்து திரிந்ததில் அவள் நெருங்கிய தோழிகள் வட்டத்துக்குள் இருந்தாள் மதுவும்..

குடிப்பதற்கு ஜூசை ஆர்டர் செய்துவிட்டு இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்..

"என்ன மஹா ஏதோ முக்கியமா பேசணும்னு வரச்சொன்ன'

"என் லைப்ல முக்கியமான ஒருத்தரை நான் உனக்கு இன்னைக்கு அறிமுகம் செய்யப்போறேன்.

"யாருடி அது' என்றாள் மது.

"அது சஸ்பென்ஸ்' நீ ஜூசைக் குடி நான் போய் அழைச்சிட்டு வாறேன் என்று அந்த ஹோட்டலின்  வாசளுக்கு வந்தாள் மஹா. 

மது அவளையே பார்த்துக்கொண்டு இருக்க..
டூவீலரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் மகிழன்.

உணவகத்திற்குள் நுழைந்தவனை
"ஹாய் சித்தப்பு,"என்று இடுப்போடு கை போட்டு அணைத்தாள் மஹா. உள்ளே இருந்து பார்த்த மது அதிர்ந்து போனாள். 

ஐந்து வருடங்கள் கடந்து மாமனை பார்க்கிறாள். இதயம் வேகமாக அடிக்க படபடப்புடன் அவனையே பார்த்தாள்.

"என்ன ஆச்சு இவளுக்கு!? அவசரமாக வரச்சொன்னாள், காரணமே இல்லாமல் கட்டி பிடிக்கிறாள்! யோசித்தபடியே மகிழன் அவளுடன் நடந்தான்.  

மஹா அவனை அணைத்தபடியே அழைத்துச் செல்ல,  அவள் செயலில் இன்று வித்தியாசம் உணர்ந்து  நிமிர்ந்தபோது உறைந்து போனான் மகிழன். அவனையே பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தாள் மது. 

காதல், ஆசை, கோபம், கண்ணீர் என்று எல்லா உணர்ச்சிகளும் வந்து வந்து போன அந்தக் கண்கள் மகிழனை பார்த்தபடியே மஹாவிடம் போனது, புருவங்கள் நெளிய அவளை கேள்வியாகப் பார்த்தாள்,  முகம் மட்டும் அதிர்ச்சியில் இருந்தது.

"மது, மீட் மை ஸ்வீட் ஹார்ட் மகிழன்,

"இது மது, என்னோட  பிரண்ட் என்று மகிழனுக்கு அறிமுகம் செய்துகொண்டே மது அருகில் அமர்ந்தாள் மஹா.

அவள் அறிமுகப் படுத்திய முறையில் அதிர்ந்து போய் நின்றான் மகிழன், மதுவை பார்த்த மகிழ்ச்சியயைக் கூட மகிழனால் உணரமுடியவில்லை.

"என்ன மது அவரை அப்படி பார்க்கிற முன்னாடியே தெரியுமா? என்று மஹா தோளில் தட்ட..

மகிழன் மாமாவுக்கும் மஹாவுக்கும் எப்படி பழக்கம் என்ற கேள்வியின் அதிர்ச்சியில் இருந்த மது திடுக்கிட்டு விழித்தாள். உயிர்ப்பில்லா புன்னகை ஒன்று அவளிடமிருந்து பதிலாய் வந்தது. முக்கியமான ஒருவரை அறிமுகம் செய்வதாகச் சொன்னாளே, அது மாமா தானா. சிந்திக்க சிந்திக்க கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

"சாரி மஹா' அவசரமாக நான் போகணும்' என்று எழுந்து நின்றாள், கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

"ஏய் மது, நில்லுடி உன்கிட்ட கொஞ்சம் பேசனும், மஹா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே காதில் வாங்காமல் வேக வேகமாக நடந்தாள் மது. 

சாலையை கடந்து ஆட்டோவில் ஏறி மறைந்த அவளையே பார்த்து நின்றார்கள் இருவரும்.

மஹாவை மகிழன் கோபமாக பார்க்க, வாய் விட்டுச் சிரித்தாள் அவள்.

"உன் பிரச்சினை என்ன மஹா? எதுக்கு இப்படி பண்ற? சலிப்பாய் அவன் கேட்க,

"கூல் சித்தப்பா, உங்களுக்கு பொண்ணுங்க பத்தி தெரியல. இப்படி ஏதாவது குட்டி கலாட்டா பண்ணாம சும்மாவே இருந்த நீங்க அப்படியே இருக்க வேண்டியது தான்..

"நீ அவகிட்ட என்ன சொல்லி வச்சிருக்க!"

"உங்களை பத்தி இதுவரை நான் எதுவும் சொல்லலா..

"அப்ப ஏன் இப்படி கோபமாக போறா..

"ஹா... ஹா... பொஸஸிவ்னஸ் சித்தப்பா, அவ உங்களை கண்டுக்க மாட்டா. ஆனா வேற யாராவது இடையில வந்தா மேடத்துக்கு பொறுக்காது"

"யாரு இடையில் வந்தா!"

"வேற யாரு நான்தான்' மை ஸ்வீட் ஹார்ட்னு உங்களை சொன்னேன் இல்ல, அவளுக்கு தாங்களா...  "ம்... இப்போ நீங்க என்ன பண்ணுறீங்க அவ போன் நம்பர் தாறேன் பேசுங்க.

"வில்லங்கமாகவே ஏதாவது பண்ணாத மஹா..

"அட ஆண்டவா'! நீங்க எல்லாம் எதுக்கு சித்தப்பு லவ் பண்றீங்க? அதுவும் பத்து வருசமா! பேசாம சாமியாரா போயிறுங்களேன்..

மகிழன் கோபமாக மஹாவை பார்த்தான்.

"சொன்னா கேளுங்க சித்தப்பா. திட்டினா பரவாயில்லை. வாங்கிக்கலாம் ஆனா பேசுங்க. அப்பதான் அவ மனசுல என்ன இருக்குதுன்னு தெரியும்"

அவன் கைபேசியை பறித்து மதுவின் எண்கள் பதிந்தவள் அழைப்பை அழுத்திவிட்டு அவனிடம் கொடுத்தாள். ஆனால் அவள் எடுக்கவில்லை. மஹா அவளுடைய போனில் இருந்தும் முயற்சி செய்தாள். பாட்டுப்போய் முடிந்தது.

மகிழன் முகம் வாடிப்போக, மஹாவுக்கும் வேதனையாக இருந்தது. கொஞ்சம் ஓவராக பண்ணிட்டமோ என்று நினைத்தாள். 

"சித்தப்பா நான் கார்த்திகிட்ட சொல்றேன்..  அவ போற வேகத்தை பார்த்த எனக்கே பயமா இருக்கு.." என்று கார்த்திகாவை கைபேசியில் அழைத்தாள்

'சொல்லு மஹா.." என்று கார்த்தி தொடர்பில் வர

'கார்த்தி..ஒரு சின்ன ப்ராப்ளம், மது கொஞ்சம் கோபமா வரா.. கூல் பண்ணுடி..  

"என்னடி பண்ணி தொலைச்ச...

"ம்ம்' உன் குழந்தைய தனியாகக் கூட்டி வந்து லேசா கிள்ளி பார்த்தேன். கோவிச்சுட்டு கிளம்பிட்டா.. 

"ஆரம்பிச்சிட்டியா...? நீ இப்ப எங்க இருக்க..

அஷ்வின்'ஸ் வாசல்ல, அவ போனுக்கு அத்தனைமுறை கால் பண்ணிட்டேன்..  எடுக்கவே மாட்றா.. இப்படி செய்தா மாமா என்ன நினைப்பாங்க..?

'இதப்பார்றா...மாமாவா, இது எப்பயிருந்து மஹா...? என்றாள் குறும்புடன்

'அது இப்பயிருந்துதான்.. ஆனா இனிமே இப்படிதான், மாமா புராணத்தை அடிக்கடி கேட்கலாம்." என்று மகிழனையும் திரும்பி பார்த்து சிரித்தாள்.

'சரி.. சரி.. எதுவாயிருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்ருடி.. நிறைய வேலை இருக்கு, அவ பத்திரமாக வந்துருவா, நான் பார்த்துக்கிறேன்...".

 "அதெல்லாம் அவ வந்துருவான்னு எனக்கும் தெரியும்,  பேசிக் கொண்டிருக்கும் போதே, கோபமாக சாப்பிடாமக் கூட கிளம்பிட்டா.. பார்த்துக்கடி.." இப்ப அவளை ஒன்னும் கேட்காத நான் நேரில் வந்து எல்லாம் சொல்கிறேன்.." என்றாள்.

சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தாள் கார்த்திகா.

*************

மணி எட்டு. இன்னும் மது வீட்டுக்கு வரவில்லை. இருட்டிய பின்பு வெளியே சுற்றும் வழக்கம் அவளிடம் இல்லாமல் போக கார்த்திகா குளம்பிப்போனாள். தங்கள் வீட்டை விட்டு அவள் தனியாக போகும் ஒரே இடம் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா மட்டும் தான். அதுவும் இப்போது பூட்டி விடுவார்கள். நிகிலாவும், ஜானகியும் சமையலில் இருக்க அவர்களிடம் சொல்லி விட்டு வெளியே வந்தாள், அவளைத் தேடி பூங்கா வாசலில் நுழையும் போதே உள்ளே அவள் தனியாக அமர்ந்திருந்ததை பார்த்துவிட்டாள். அவள் அருகில் வந்த பிறகும் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை

"மது.. இங்க என்னடி பண்ற..? என்று கார்த்திகா கேட்க, நிமிர்ந்து பார்த்தவள் பதில் பேசவில்லை

"சரி வா போலாம்..'

"நான் வரல நீ போ.. என்றாள் மது

"ஏய் மணி எட்டு ஆச்சுடி, பூங்காவில் யாரும் இருக்க கூடாது, ஏன் உனக்கு தெரியாதா?

"நீ போ நான் வர்றேன்'..

"அங்க பாரு எல்லாரையும் போக சொல்ராங்கடி. வா நாம சேர்ந்தே போகலாம்.

"ச்சு.. நான் வரல, நீ கிளம்பு..

"லூசாடி நீ'.. அதான் இங்க யாரும் இருக்க கூடாதுன்னு சொல்ராங்க இல்ல வா போலாம்..

"நான் தான் வரலன்னு சொல்றேன் இல்லை.. நீ கிளம்பு என்று கோவத்தில் கத்தவும்,

"ஏய் மது ஏன்டி கத்துற.. உனக்கு எதுக்கு இப்ப இவ்ளோ கோவம்..

"அதெல்லாம் உனக்கு எதுக்கு.. நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு..

"மஹாவா' என்று கேட்க,
கார்த்திகாவை முறைத்து பார்த்தாள் மது.

"மது நீ பண்றது எதுவும் சரியில்லை.. வா ரூமுக்கு போய் பேசலாம்.. அந்த வாட்ச்மேன் வேற நம்ம கிட்ட தான் வாராருடி.. வாடி போலாம் என்று கெஞ்சியபடியே மதுவின் கையை பற்றி இழுத்து கொன்டே வெளியே செல்லவும்,

"விடு' என்று கையை உதறிவிட.. 

"மது.. உன்னைக் கொல்ல போறேன், பேசாம வா..

"விடு கார்த்தி.."

"கத்தமா வா .. மது மறுக்க மறுக்க அவளை வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள் கார்த்தி.

"எதுக்குடி என்னை இழுத்துட்டு வந்த.. என்று மது கோபமாய் கேட்க..

"எதுக்கா..? முதல்ல அங்க உனக்கென்ன வேலை.. ஆமா நீ எதுக்கு இவ்ளோ கோவப்பட்ற..? என்று சிரித்துக்கொண்டே கேட்கவும்,

அவளின் சிரிப்பில் கடுப்பன மது 

"அது உனக்கு எதுக்கு..?" கோவமாக எகிரினால்..

"எனக்கு எதுக்கா? நீதானடி என் உயிர் தோழி என்று கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் வைக்க..
 
சிறு குழந்தை போல் கன்னத்தை துடைத்து கொண்டு அவளை முறைத்தாள்.

"ஏய் மது, மஹா மேல இருக்க கோபத்தை என் மேல் ஏன் காட்டுற..
அதுவும் இவ்ளோ கோவமா நின்னா எப்படி மது.. அந்த வாட்ச்மேன் பாவம் இல்லையா, அதான் உன்னை இழுத்துட்டு வந்தேன்..

மதுவின் கண்கள் கலங்கியது

"ஏண்டி இப்படி சட்டு சட்டுனு வடிக்கிற.. 

மஹா உன் மாமாவோட அண்ணன் பொண்ணு. உன்ன வெறுப்பேத்த சும்மா விளையாடி இருக்க, அவ்வளவு தான், 

என் மாமாவுக்கு ஏது அண்ணன். அதுவும் எனக்கு தெரியாம?

அம்மா தாயே உங்க சொந்தங்கள் பத்தி எனக்கு தெரியாது. நீ அவகிட்டயே கேளு நீ கோவிச்சுட்டு வந்திட்ட. உனக்கு போன் போட்டுருக்க நீ எடுக்கல, உன்கிட்ட சாரி சொல்ல சொன்ன.. என்று முடித்தாள்.

நம்ப முடியாமல் அவள் முகத்தையே பார்த்தாள் மது.


***********


தோழிகள் நால்வரும் டைனிங் டேபிளில் இருந்தார்கள். இந்த வாரம் ஜானகி, நிகிலா சமையல், அவர்கள் சமையல் என்றாள் இரவிலும் வெளிநாட்டு வகையறா உணவுகள் இருக்கும். உணவின் ருசியை விட, மதுவின் காதல் கதை சுவையாக போய்க்கொண்டு இருந்தது.

"அப்படீன்னா இன்னமும் நீங்க ரெண்டு பேரும் டிக்ளேர் பண்ணிக்கவே இல்லையேடி..." நிகிலாவிற்கு வார்த்தைகள் வரவில்லை. இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தாள்.

“என்னடி சொல்ற, அப்படின்னா நீ அஞ்சு
வருஷமாவா லவ் பண்றது உன் மாமாவுக்கு தெரியாதா"  ஜானகி கேட்க, 

"ஏழு வருசமா' என்று திருத்தினாள் கார்த்திகா

"அப்ப பதினைந்து வயதிலேயே லவ்வா'  நிகிலா..

இத்தனை வருடமாக உரியவரிடம் சேர்க்காமல் தேக்கி வைத்திருக்கும் காதலின் கணம், கண்களில் வலியாய் தெரிய  அமைதியாய் அமர்ந்திருந்தாள் மது, வார்த்தைகளால் சொல்லாத அவள் வலிகளை தோழிகளால் புரிந்து கொள்ள முடிந்தது.

தன் கண்களில் தெரியும் வலியை மறைக்க ஒரு வறண்ட புன்னகையை சூடிக்கொண்ட மதுவின் கண்களை பார்த்தாள் ஜானகி

"அப்போ திருச்சிக்கு படிக்க வந்தது உன் மாமாவுக்காக தானா"என்று மீண்டும் உறுதிப்படுத்தி கொள்ளும் விதமாக கேட்டாள் ஜானகி.

"உண்மையை தோழியிடம் மறைத்த குற்ற உணர்ச்சியுடன் மது தலை குனிந்து இருந்தாள். 

நீ இங்க வந்து தங்கி படிக்கிறது உன் மாமாவுக்கு முன்னாடியே தெரியுமா" 

"ம்" என்று தலையாட்டினாள்.

இத்தனை வருடமாக காதலை சொல்லாமல், தனக்குள் பூட்டி வைத்து மறுகி கொண்டிருக்கும் தோழியை பார்க்க கோபமும் வந்தது, பாவமாகவும் இருந்தது ஜானகிக்கு

"இத்தனை வருஷமா காதலை சொல்லாம இருந்து இருக்கியே, லூசாடி நீ, ஒரு வேளை இந்நேரம் உன் மாமாவுக்கு வேற யார் கூடவாது கல்யாணம் ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்ப"என்று  கேட்க, 

"என் மாமா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு' என்றாள் சட்டென்று..

"என்னடி நம்பிக்கை' சொல்லாத காதல் மேல் இவ்வளவு நம்பிக்கையா பேசுறா என்றாள் ஜானகி

"பேசித்தான் காதலை புரிய வைக்கணுமா?...  "எம்மனசு என்னன்னு என் மாமாவுக்கு தெரியும். அவர் மனசுல என்ன இருந்ததுன்னு எனக்கு தெரியும்' 

தோழிகள் மூவரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

உன்னைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்குடி,, லவ் பண்ணினா உன்ன மாதிரி உருகி உருகி லவ் பண்ணணும்."  முகம் லேசாகச் சிவக்கச் சிரித்தாள் நிகிலா..

தானது இருக்கையின் மேல் இரு கால்களையும் தூக்கி வைத்து
அமர்ந்து கொண்டாள் மது. மனம் இப்போது லேசானது போல இருந்தது. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள ஏதோ கனவில் மிதப்பது போல தோழிகளிடம் பேசினாள்.

    
********(*******
       
                                

மதுவை பற்றிய தகவல்களை எல்லாம் பார்வதியிடம் சொல்லி இருந்தாள் மஹா. தி.நகரில் மகிழன் பார்த்தது, ஹோட்டலில் அவள் கோபமாய் போனது உட்பட.. 

பார்வதி மதுவின் எண்ணுக்கு அழைத்திருந்தார்.. புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும், யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே எடுத்தவள்

"ஹலோ' என்றாள்.

"ஹலோ மது நான் திருச்சி அம்மாச்சி பேசுறேன்டா.." என்றதும், சற்று பதட்டமானாள்.

“சொல்..சொல்லுங்க.." என்று அவள் தடுமாற

“என்னாச்சுடா.. ஏன் இவ்வளவு பதட்டம்
என்னோட பேச.."

"இல்ல.. சாரி அம்மாச்சி.. திடீர்னு நீங்க கால் பண்ணதும்  .." என்றாள்

"எங்கிட்ட பேச என்னடா?" என்று கூறி சிரித்தார்..

"இல்ல அம்மாச்சி.. அது..” என்று அவள் இழுக்க

“சும்மா சொன்னேன்டா.. எப்படி இருக்க?''

"நல்லா இருக்கேன் அம்மாச்சி.. நீங்க எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன், மாமாவும் நல்ல இருக்கான்.. படிப்பு எல்லாம் எப்படி போகுது?"

"நல்லா போகுது அம்மாச்சி.."

"உன் நம்பர், மகா கிட்ட இருந்து வாங்குனேன்டா." ரெண்டு வருசமா இங்க இருந்திருக்க அம்மாச்சிய பார்க்கணும்னு உனக்கு தோணலையா?

"அப்படி இல்ல அம்மாச்சி.. மஹா நம்ம சொந்தம்னு எனக்கும் இப்பதான் தெரியும்

“சரிடா.. எனக்கு உன்ன பார்க்கணும் போல இருக்கு” அவர் கேட்க, மதுவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..

“என்ன அமைதி ஆகிட்ட.." பார்வதி மறுபடி கேட்க

“இல்ல அம்மாச்சி.. எனக்கு வீடு தெரியாதே" என்றாள்

"மகா கூப்பிட்டும் நீ தயங்கி நின்னதா சொன்ன.. அதுக்குத்தான் நானே கூப்பிட்டேன்." வீட்டுக்கு போன் பண்ணி அம்மா, அப்பாட்ட சொல்லிவிட்டு இங்க வர்றியாடா? எல்லாத்தையும் ஒரு தடவ பார்த்துட்டுப் போகலாம். 

"ம்ம்' என்றாள்

நாளைக்கு அம்மாச்சி போன் பண்றேன்.."
நீ கண்டிப்பாக மகா கூட வரணும், நான் வைக்கட்ட செல்லம் என்றவர் அழைப்பைத் துண்டித்தார்..


***********

மாலை நான்கு மணி. வீட்டின் முகப்பில் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்த மகிழனை, சிரித்த முகமாக வரவேற்றார் பார்வதி.. எப்பொழுதுமே மகிழன் வீட்டிற்கு வரும்பொழுதும் தாயின் முகம் புன்னகையுடன் தான் அவனை வரவேற்கும், ஆனால் இன்று அந்தப் புன்னகை கொஞ்சம் அதிகப்படியாக இருந்தது.

மகிழன் வருவதற்கு சற்று  தாமதமாகும்.. ஒரு சில நாள் ஆறு மணிக்கு வருவான்.. சிலநாள் பத்து மணிக்குக் கூட வருவான்.. அவன் வரும்போது மலர்ந்த முகமாகவே அவனை வரவேற்பார்..இன்று சற்றுக் கூடுதலாக அவரின் முகத்தில் தீபம் எறிவது போல் மகிழனுக்குத் தோன்றியது.. அதை அவரிடமே அவன் கேட்டான்..

“என்னம்மா.. முகத்துல ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் எறியுது?"

“நீ முகம் கழுவிட்டு வாடா.. சொல்லுறேன்.." என்றார் அதே புன்னகையுடன்

“அப்படி என்ன விஷயம்?"

"போடா.." என்று அவனை அனுப்பியவர், அவனுக்கு உணவை மேசையில் எடுத்து வைத்தவாறே கேட்டார்

“என்னப்பா...மணி நாலு ஆயிடுச்சு இன்னிக்கு?" 

"ஆமாம்மா...இன்னிக்கு லாரி கொஞ்சம் தாமதம், லோடு இறக்க ஆளும் வரல...!... அதையெல்லாம் இறக்கி அனுப்பிட்டு வர்றதுக்கு நேரமாயிடுச்சு" என்றவாறே கையை சுத்தம் செய்து சாப்பிட அமர்ந்தான்.

சாப்பிட  ஆரம்பித்தவனுக்கு "கெக்...கெக்"கென்று விக்கலெடுக்க அவசரமாய் தண்ணீர் டம்ளரை எடுத்து நீட்டினார் பார்வதி. 

"யாரோ உன்னை நினைக்கிறாங்க' என்றார் பார்வதி.

"நீங்க இல்லைன்னா வேற யாரு என்னை நினைக்கப் போறா..

"ஏன் வேற யாருமே இல்லையா உனக்கு' என்று தாயும் சிரிப்புடன் கேட்க.

  "வேற யாரு மதுவா " என்றான் மகிழனும் சிரித்துக்கொண்டே..

மகிழனுக்கு  இன்ப அதிர்ச்சி தருவதற்காக அறையின் உள்ளே நின்றிருந்த மது காதுகளில் அந்த வார்த்தைகள் விழ அவள் கண்கள் கலங்கியது.

"நீதான் எப்ப பார்த்தாலும்..."மது... மது"ன்னு புலம்பிக்கிட்டிருக்கே?... அவ சுத்தமாய் நம்மை மறந்தே போயிட்டாள்! நம்ம மேல அன்பு இருந்தால், இங்க படிக்கிற புள்ள நம்ம வீட்டுக்கு வரளாமில்ல..

தாயின் வார்த்தைகளின் உண்மை புரிய உயிருக்குள் எங்கோ வலித்தது. பாதி உணவுடன் எழுந்தான், 

"ஐயோ என்னப்பா சாப்பிடாம எழும்பிட்ட,
என்றார் வருத்தத்துடன்

"போதும்மா', என்று வாஷ் பேஷன் பைப்பை திறந்து கை கழுவ  மகிழன் குனிந்தபோது “மாமா” என்ற குரல் கேட்க..சட்டென்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான். "ச்சே...மது என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருக்கு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"என்னப்பா...பாதி சாப்பாட்டுல கை கழுவிட்டு வந்திட்ட?”

"ம்...நேரம் கடந்து சாப்பிட முடியலம்மா!" என்றவன்  “அம்மா...கை கழுவும் போது என் பின்னாடியிருந்து மது என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருந்திச்சு" என்றான்.

"அப்படியா?..ஒருவேளை உன்னைத் தேடி அவள் நேரிலேயே வந்திட்டாளோ என்னவோ?" விளையாட்டாக சொன்னார் பார்வதி.

"மகிழன் மெதுவாக புன்னைத்தான், அதில் வெறுமையும், வலியுமே இருந்தது. தாய்க்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை

"நீ உன் கண்களை மூடு மகி” என்றாள்.

"எதுக்கும்மா'

"அம்மாவுக்காக மூடுடா'

தாயின் ஆசைக்காக சும்மாவாகிலும் கண்களை மூடி நின்றான் மகிழன். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு 

"ம்... இப்பக் கண்களைத் திறந்து பார்" என்றார் பார்வதி.

சாதாரணமாய்க் கண்களைத் திறந்த மகிழன் எதிரே மது நிற்பதைக் கண்டதும் முதலில் நம்பாதவனாய் புன்னகைத்தபடியே கையால் தொட முயற்சித்தான்.

உண்மையிலேயே அவன் கைகளில் மது உடல் பட  அவசரமாய் கையை இழுத்துக் கொண்டான்.மகிழ்ச்சியில் சத்தமாக கத்த தோன்றிய உணர்வை தன்னுள்ளே அடக்கினான், அவளை இறுக அணைத்துக் கொள்ள தழுதழுத்தா கைகளுக்கும் தடை விதித்தான். உணர்வுகளை கட்டுப்படுத்த எடுத்த முயற்சியில் அவன் முகம் உணர்ச்சியற்ற பாறையாய் இருகிப்போனது.

 "எப்ப வந்த மது? அவனிடம் இருந்து எந்த உணர்வுகளும் இல்லாமல் வந்த அந்தக் கேள்வி அவள் காதல் மனதை அடித்துப்போட்டது. அவளது கண்கள் கலங்கப் பார்த்தது..." குழப்பத்துடன் யோசித்துக் கொண்டே மீண்டும் அவன் முகத்தைப் பார்க்க,  அவன் முகம் எந்த உணர்வும் இன்றி வெறுமையாய் இருந்தது. அந்தப் பார்வையில் தொனித்தது வெறுப்பா... நிராசையா... புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறி நின்றாள் மது. 

ஒருவேளை மாமா மனதில் நான் இல்லையா? நான் மட்டும் தான் அவரை பைத்தியம் போல் மனதில் வைத்து கொண்டு தவிக்கிறேனா?.. இல்லையே இப்போது விக்கல் வந்தபோது கூட நான் நினைக்கிறேன் என்று சொன்னாரே. மதுவின் பார்வை அவன் முகத்திலேயே நிலைத்திருப்பதைக் கண்ட மகிழன் அவளை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தான். அந்தப் புன்னகை அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.

"யார் கூட வந்த மது?"

"மஹா" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அதிகம் பேசினாள் அழுது விடுவோமோ என்ற பயம் அவளுக்கும்..

இருவரும் பேசிக்கொள்ள வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற, மௌனம் அவர்களுக்கு இடையே ஓடிப்பிடித்து விளையாடியது. என்ன பேசுவது, எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தடுமாற்றமாய் நின்ற மது. தன் காதலை சொல்லும் வழி தெரியாமல்...

"மாமா எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்திட்டாங்க' என்று உளறினாள்.

மகிழன் இதயத்தில் இடி விழுந்தது போல் அதிர்ந்தான். அவனால் பேச முடியவில்லை. என்ன சொல்ல போகிறான் ஆவலோடு பார்த்த மதுவிற்கு அவன் அமைதி அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவன் மறுமொழி பேசவே இல்லை. பேச முடியவில்லை. உடைந்த குரலில் பேசவும் விருப்பமில்லை.

"அம்மா' எனக்கு தலை வலிக்குது.. நான் தூங்கப் போறேன்.. மதுவை பார்த்துக்கொள்ளுங்க' என்று அவன் படியேறி மேலே சென்றுவிட்டான்.

அவர்கள் இருவரையும் சமையல் அறையில் இருந்து கவனித்த பார்வதியின் கண்களும் கலங்கி விட்டது. வேகமாக வந்து மதுவை கட்டிக்கொண்டார். மது அவரது அணைப்பில் மௌனமாக நின்றிருந்தவள், முதுகை தட்டிக் கொடுத்தபடி அவனுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலடா அதன் உன்கிட்ட சரியா பேச முடியல அவளை ஆறுதல் செய்தார் பார்வதி.

மாமன் அரைகுறையாக கேட்டு இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வான் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவனது கண்களில் தெரிந்த வெறுமை அவளை ஏதோ செய்தது. அதிர்ச்சியில் இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. அவளால் அழக்கூட முடியவில்லை.

நான் போகணும் அம்மாச்சி, நேரமாச்சு என்று அவரை விட்டு விலகி கதவருகிலே சென்றவள், திரும்பி  அவரை கலக்கமாக பார்க்கவும், பார்வதியின் மனது பேத்தியின் பார்வையில் நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தது.

"மது..அம்மாச்சிய அப்படி பாக்காதடா." இப்படி எல்லாம் ஆகும்னு நான் நினைக்கலடா", என்று வலியோடு பேச, வேகமாக அவர் அருகில் வந்தாள் மது.

“ஐயோ அம்மாச்சி, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று உணர்வற்ற குரலில் சொன்னவள், பார்வதி எதோ பேசவருகிறார் என்று தெரிந்தும்,

"நான் வரேன் அம்மாச்சி.." என்று உடனடியாக அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.

அவள் சென்ற ஆட்டோ கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்வதி கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தார்.


 **************



இருப்பிடம் வந்ததும், மஹாவிற்கு தகவல் சொன்னதோடு சரி, அன்று அவளுடைய அறைக்குள் அடைந்தவள் தான், அதன் பிறகு வெளியே வரவும் இல்லை, யாரிடமும் பேசவும் இல்லை. தோழிகளுக்கும் அவள் மனநிலை புரிந்ததால் தொந்தரவு செய்யவில்லை.

பார்வதி அவள் கைபேசிக்கு அழைத்தார், மது அவர் அழைப்பை ஏற்கவில்லை பேத்தியின் ஒதுக்கத்தில் மிகவும் வேதனையடைந்தார் பார்வதி, மனதால் துவண்டு போனவருக்கு உடலும் தொல்லை தந்தது, கடுமையான காய்ச்சல்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார்.

"மதுவை பார்க்க வேண்டும்.." என்று மஹா மூலமாக தகவல் சொன்ன போதும், மது அவரை பார்க்க வரவில்லை, மஹாவை அழைத்து அவரின் உடல்நிலையை பற்றிக்  கேட்டுக்கொண்டதோடு சரி  .. என்னதான் அவர் மேல் பாசம் இருந்தாலும் "கோவம், இயலாமை, ஏமாற்றம்.." எல்லாம் தீராத நெருப்பு போல் மனதுள் கனன்று கொண்டே  இருந்தது. எந்த முடிவும் அவளால் தெளிவாக எடுக்க முடியவில்லை. மாமனுக்கு தன்னை பிடிக்கவில்லை, அதனால் தான் வேறு பெண்ணோடு திருமணம் செய்ய தயார் ஆகிவிட்டார்' என்று தானே கற்பனையை வளர்த்துக் கொண்டாள். அந்த கற்பனையே அவளை தூங்க விடாமல் செய்தது.

"மது.." உன் மாமா மேல இருக்கிற உன்னோட கோவம், வருத்தம் எல்லாம் உனக்கு நியாயமா இருந்தாலும். அதை காண்பிக்கிற நேரம் இது இல்லை..உன் அம்மாச்சி ஹாஸ்பிடலில் இருக்காங்க, இந்த நேரத்தில நீ இப்படி அவர் கிட்ட நடந்துக்கிறது சரியில்லை என்றாள் கார்த்திகா.

அதோட உன்னை பார்க்கணும்னு ஒரு பெரியவங்க கூப்பிட்டும் நீ போகலனா அது சரியான முடிவு இல்லை. மாமா மேல உள்ள கோபத்தில் நீ உன் இயல்பான குணத்தை இழந்துட்ட மது... அம்மாவை நீ ஒதுக்குறது அதுவும் இந்த நிலையில ஒதுக்குறது ரொம்ப ரொம்ப தப்பு.. கண்டிப்புடன் கார்த்திகா சொல்லவும்,

மதுவின் மனதுக்குள்ளும் இந்த எண்ணம் இருந்தது, அங்கு போனால் மாமனை பார்த்தால், அவரிடம் தன் கோவத்தை கட்டிவிடுவோமா..? அம்மாச்சி இப்போதிருக்கும் உடல்நிலையில் மறுபடியும் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ..? என்ற பயம் ஒரு புறம் தடுத்தது, அவரை பார்க்காமல்.. அதுவும் இந்த நிலையில் அவருடன் தான் இல்லாமல் இருப்பது மதுவுக்கும் கொஞ்சம் உறுத்தலாக இருக்க..

மருத்துவமனை வந்தாள் மது.  மகிழனும் அங்கே தான் இருந்தான். எப்போதும் கம்பீரமாக இருக்கும் மகிழன் அன்று கொஞ்சம் தளர்ச்சியாக தெரிந்தான்,  மூன்று நாள் கழித்து தன்னை பார்க்க வந்த பேத்தி ஐந்து நிமிடங்கள் கடந்தும் எதுவும் பேசாமல் குனிந்து  இருக்க, அவளுக்கு தன் மாமன் மேல் இருக்கும் கோவத்தை உணர்ந்து கொண்டார் பார்வதி,

"மது அம்மாச்சி மேல கோவமா இருக்கியா..? 

 இல்லை என்று தலையாட்டினாள்..

"மாமா மேல் கோபமா'

அமைதியாக இருந்தாள் மது

பேசு மது, இப்படி யாரோ மாதிரி இருக்காதடா.."என்ற அவரின் வேதனையை குரலிலே உணர்ந்த மது, 

ஐந்து நாட்களாய் அழுது அழுது கண்ணீரால் அடைத்த தன் தொண்டையை செறுமிய படி

"எப்படி இருக்கீங்க..? என்று மிகவும் சிரமப்பட்டு கேட்கவும், அளவில்லா வருத்தத்தை கண்களில் தேக்கி அவளை பார்த்தார் பார்வதி.

"ஏன்டா இப்படி யாரோ போல பேசுற..?

"அப்படி எல்லாம் இல்லை.." 

மகிழன் எழுந்து வெளியே சென்றான்.

"வந்ததில் இருந்து "ஒரு தடவை கூட நீ என்னை அம்மாச்சின்னு கூப்பிடலைடா.." என்று விரக்தியாக சிரித்தார் பார்வதி 

அவர் முகத்திலே அவரின் வேதனையை புரிந்து கொண்ட மது, "ஐயோ அம்மாச்சி' அப்படி எல்லாம் இல்லை, உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது எதுவும் பேச வேண்டாம், நாம இதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம்..

இல்லை மது, நான் இன்னிக்கு சொல்லியே ஆகணும்.. என்னால இதுக்கு மேலயும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது..,

மாமனுக்கே என்னை பிடிக்கவில்லை, இதற்கு மேல் கேட்டு ஆகப்போவது என்ன..? என்று தோன்றினாலும், அவருக்காக கேட்க நினைத்தவள், 

"பேசலாம்..,' ஆனா இப்போ வேண்டாம் அம்மாச்சி, இன்னொரு நாள் உங்க உடல்நிலை சீரானதும் கண்டிப்பாக நான் நம்ம வீட்டுக்கு வருவேன், அப்ப பேசலாம் என்று ஆதரவுடன் அவர் கையை தடவிக் கொடுத்தாள். நம்ம வீடு என்று மது சொன்னதும் அந்த தாயின் உள்ளம் பூரித்து போனது. அவள் அருகாமை தந்த மகிழ்ச்சியும், ஆறுதலும் மூன்று நாட்களாய் அவர் இழந்திருந்த தூக்கத்தை மீட்டு வந்தது. பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர் கண்கள் சொருக.. அவரை தூங்க வைத்துவிட்டு மது வெளியே வந்தாள்.

மகிழன் அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை, அன்றோடு இல்லாமல் அடுத்த நாளும் அப்படியே தான் இருந்தான். தப்பி தவறி எதிரே வந்து விட்டாலும் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டான்.. அந்த இரண்டு நாட்களும் தன்னை தவிர்க்க மாமன் நினைப்பது தெரிந்தால் மூன்றாவது நாளிலிருந்து ஹாஸ்பிடல் வரவில்லை மது . 

மது மனதுக்குள் மிகவும் ஒடுங்கியே விட்டாள். அவனின்  பாராமுகமும் தன்னை இவ்வளவு துன்பப்படுத்துமா?


  **********
மருத்துவ மனையில் இருந்து
பார்வதி அம்மா வீடு திரும்பி ஒருவாரம் கடந்திருந்தது. அவர் பரிமாறிக்கொண்டிருக்க, மகிழனும், மஹாவும் அவர்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொண்டே உணவுண்டு கொண்டிருந்தனர்.

மகிழன் கைபேசி அழைத்தது!

எடுத்து பார்த்தவனுக்கு அந்த எண் யாருடையது என்று தெரியவில்லை.

'ம்ம்ம்...புது நம்பர், யாரா இருக்கும்?' என்று யோசித்தவன், ஆன் செய்து, "ஹலோ..." என்றவாறு காதுக்கு கொடுத்தான்.

"மகிழன்?"

"எஸ்... நீங்க?"

"நான் கார்த்திகா..."

தனது காதுகள் கேட்டது என்னவென முதலில் மகிழனுக்கு புரியவில்லை.

"யார்?"

"நான் கார்த்திகா... மது பிரண்ட்"  என்று கூற, அதிர்ந்து அந்த செல்பேசியை பார்த்தான். 

"சொல்லுங்க கார்த்திகா!" என்ற இவனின் பதிலில் மஹா விசுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். இவனுடைய கைபேசி எண்களை கார்த்திகாவிற்கு கொடுத்தது இவள் தானே.

"நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியாக பேசனுமே என்றாள் கார்த்திகா.

ஒரு நிமிடம் என்றவன் டைனிங் டேபிளில் இருந்து எழுந்து மாடியில் அவன் அறைக்கு வந்தான்.

"ம்ம், சொல்லுங்க கார்த்திகா நான் இப்ப தனியாக தான் இருக்கேன்.

"இல்லண்ணா நான் உங்களை நேரில் சந்தித்து பேசனுமே' என்று இழுக்க..

சரிம்மா நான் வர்றேன், எங்க வரணும் சொல்லுங்க.

கல்லணைக்கு, நாளைக்கு  காலைல 11 மணிக்கு..

அங்க எதுக்கும்மா..

அண்ணா ப்ளீஸ் வங்கண்ணா, மதுவும் என்கூட வருவா என்றவள் 


சட்டென்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

கிழே வர... டைனிங் டேபிளில் மஹா இல்லை.

"எங்கம்மா உங்க செல்லப் பேத்தியை காணோம், 

என்னன்னு தெரியலப்பா வேக வேகமாக சாப்பிட்டா..கொஞ்சம் டிபன்ல கட்டி எடுத்துக்கிட்டு ஓடிட்ட...

மகிழன் சிரித்துக் கொண்டான் ஏதோ திருட்டுத்தனமாக வேலை செய்து இருக்கிறாள்.


*************

டைரி கையில் இருக்க அதை பார்த்தபடி இருந்தாள் மது. அவளால் நம்பவே முடியவில்லை. தன்னை அத்தனை தூரம் காதலித்தார மாமா..

டைரியை பிரித்து பார்த்ததும்
ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது மதுவுக்கு! டைரி என்பதை விட கவிதை தொகுப்பின் கையெழுத்து பிரதி! மாமா கவிதை எழுதுவார்களா? டைரியின் முதல் பக்கத்தில் சிறுவயது மதுவை ஓவியமாக வரைந்திருந்தான்.

தன்னை குறித்தான கவிதையா? ஆச்சரியத்தில் உறைந்து போனாள் 

அவசரமாக ஒவ்வொரு பக்கமாக திருப்ப... ஒவ்வொரு பக்கத்திலும் கவிதைகள்! ஒவ்வொரு கவிதைக்கும் இவளின் கோட்டோவியம்! மாமாவுக்கு ஓவியமும் வருமா? அதுவரை இருந்த அழுத்தமான மனநிலை சட்டென மாறியது!

அவளது ஓவியத்தோடு கூடிய அந்த கவிதைகள் அவள் உணர்வுகளை தட்டியெழுப்ப... கண்களில் நீர் சூழ்ந்தது!

மாமா... தன்னிடம் ஒரு முறை கூட காதலை வெளிப்படையாக சொன்னதில்லையே என்ற கவலை அவளுக்கு எப்போதும் உண்டு!  சேது திருமணத்தில் அவன் பார்த்த அந்த ஒற்றை பார்வை மட்டும்தான் அவள் நம்பிக்கை.. 

அவர் மனதில் நான் இருக்கிறேன், மகிழன் காதலை மது முழுமையாக நம்பினாள். ஐந்து வருடங்கள் அந்த நம்பிக்கை தான் அவள் காதலுக்கு துணையாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் அவன் கவிதையாய் உருகியிருந்ததை பார்த்தவள் தன்னுடையதை காட்டிலும் அவன் காதல் ஆழமானதாக உணர்ந்தாள்.

டைரியின் வருடத்தை பார்த்தவள் இன்னமும் இனிமையாக அதிர்ந்தாள்!
அது அவள் பத்தாம் வகுப்பு படித்த ஆண்டு! அப்போதிருந்தேவா தன்னை காதலித்து இருக்கிறார்? அவளுள் எழுந்த இந்த மிகப்பெரிய கேள்வி அவளுள் பல கேள்விகளை எழுப்பியது!
ஆனால் டைரியை படித்தால் அதற்கும் முன்பிருந்தேயான ரசனை போலிருக்க... மதுவின் தலையே சுற்றியது!

இவ்வளவு காதலை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு என்னை ஏன் தவிர்த்தாய் மாமா? அவனது சட்டையை பிடித்து கேட்க வேண்டும் போல் இருந்தது.. மனதுக்குள் அவனிடம் சண்டையிட்டதும் இத்தனை நாட்கள் இருந்த தவிப்பும், வெகு தூரம் சென்று விட அவள் காதல் கண்ணீராய் பெருகியது.

சில இடங்களில் பெயரையும் குறிப்பிட்டு கவிதையாக்கி இருந்தான்... பல இடங்களில் முகம் சிவக்கும் அளவு எழுதியிருந்தான்... காதலிப்பதை விட காதலிக்கப்படுவது வேறெதை காட்டிலும் பரவசத்தை கொடுக்க கூடியது அல்லவா!

இத்தனை நாட்களும் அவளது மனதில் முனுமுனுவென்று முனகி கொண்டு வலிக்க செய்த கொண்டிருந்தது இந்த ஆற்றாமை தான் என்பதை அந்த கணத்தில் உணர்ந்தாள் மது! அவன் காதலைக் கூட சொன்னதில்லையே என அவள் நினைக்காத நாளில்லை...

இப்போதும் அவனது செயல்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் இல்லை.. ஆனாலும் அவன் தன்னை உருகி உருகி காதலித்து இருக்கிறான் என்ற உண்மை அவளுள் இனிப்பாக இறங்கியது! அது ஒன்றே அந்த கணத்தில் அவளுக்கு போதுமானதாக இருந்தது!

ஒவ்வொரு பக்கமாக நிதானமாக படித்து முடித்தவள், இன்னொரு டைரியை எடுத்தாள்... ஆறு டைரி இருந்தது..

அழகான முகப்பு அட்டை... வழவழப்பான காகிதம்! வெகு ஆசையாக டைரியை திறந்தவளை வரவேற்றது அவளது மற்றொரு படம்.. புன்னகைத்து கொண்டே கீழே பார்த்தவள் வார்த்தைகளை பார்த்து அதிர்ந்தாள்!

எவ்வளவு நேரம் அதே இடத்தில் அமர்ந்து இருந்தாளோ அவளே அதை அறியவில்லை... முதலில் கலக்கம்..அதன் பின் வருத்தம்... அதன் பின் ஆதங்கம்... அதன் பின் அழுகை... என மாறி மாறி அவளது உணர்வுகளை கண்ணாடியாக காட்டியது அவள் முகம்...

தன்னை பார்ப்பதை தவிர்க்க கோவில் திருவிழாவிற்கு கூட வராத மாமா, அவள் வாழ்வின் முக்கியமான தருணங்களை
கூட உதாசீனப்படுத்திய மாமா, தன்னை ஒவ்வொரு நாளும் தவிக்க விட்டு கண்ணீர் சிந்த வைத்த மாமா, தன்னை இத்தனை தூரம் காதலித்தர..

அவள் முகம் பிரதிபலித்த உணர்ச்சிகளை எல்லாம் கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா...

"ஏய் லூசு...! நீ மாறிட்டதா நினைச்ச எதுவுமே மாறலடி." உன் மாமா மனசுல நீ மட்டும் தான்.

"ஏதாவது பேசு மது."

தோழியை கூர்மையாக ஆழ்ந்து பார்த்தாள் மது, அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. பிடிவாதமாக இருந்த அந்த 
உதடுகள் துடித்தது..

"ஹேய் மது என்னாச்சுடி'

அந்த மனசுல நான் இருந்திருந்தா, என் நினைப்பு இருந்திருந்தா, இத்தனை வருஷத்துல ஒரு தரமாவது கூப்பிட்டு, மது எப்படி இருக்கேன்னு கேக்கத் தோணி இருக்கனும் கார்த்தி.. எவளோ ஒருத்திய போய் பொண்ணு எல்லாம் பார்த்திருக்கார்!

"ஐயோ மது, என்னடி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற...

இந்த ஐந்சு வருசத்துல வந்த எல்லா பிறந்தநாளும் எனக்கு நரகமா இருந்தது தெரியுமா? அத்தனை பேரும் விஷ் பண்ணுவாங்க. எப்படியும்  இன்னைக்கு மாமா கூப்பிடுவாங்கன்னு ஆசை ஆசையா காத்திருப்பேன். என்னோட மாமா கடைசி வரைக்கும் கூப்பிடவே இல்லை தெரியுமா?" கண்ணீர் தாரை தரையாக வடிந்தது.

இருபத்தி இரண்டு வயதிலும் குழந்தையாய் தேம்பி தேம்பி அழும் தோழியை பார்க்க பாவமாகவும் இருந்தது, சிரிப்பும் வந்தது,

இவ்வளவு தூரம் காதலில் தவித்த உன் மாமா, உன்னை பார்க்கமா, பேசாம இருந்தார்னா ஏதாவது காரணம் இருக்கும் மது என்றாள் கார்த்திகா

"புடலங்காய் காரணம், என்னை விட அவருக்கு அதெல்லாம் பெரிசா போய்ச்சுன்ன, இந்த அன்பு, காதல், பசப்பு எல்லாம் எதுக்கு...கோபமாக டைரியை வீசப்போனவள் அப்படியே அதை அணைத்துக் கொண்டு அழுதாள்.

உள்ளுக்குள் உயிர்ப்போடு இருந்த அன்பையும் தாண்டி, மதுவிடம் இயற்கையாகவே இருந்த பிடிவாதமும், கோபமும் அவளை ஆட்கொண்டது, இத்தனை வருடங்களாக மாமன் பிரிந்து இருந்ததை அவளால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. 

"ஐயோ மது" என்னடி இப்படி படுத்துரா.. நாளைக்கு உன்ன கல்லணைக்கு கூட்டிட்டு வராத சொல்லிட்டேன், நீ வருவல்ல..

அவள் கார்த்திகாவை பார்த்த பார்வையில் அழுகையும் இருந்தது, ஆசையும் இருந்தது.


 *************


இந்த ட்ரெஸ் போடுடி.. அது ரொம்பச் சிம்பிளா இருக்கு.." மது கையில் வைத்திருந்த உடையை வாங்கிவிட்டு வேறு உடையை அவள் கையில் கொடுத்தாள் கார்த்திகா..

"கார்த்தி.. இது ரெம்ப கிராண்டா இருக்கு, வேணாம் கொஞ்சம் ஓவராக தெரியும்.

"உன்னை விரும்பும் ஒருவரை பார்க்கப் போற, கொஞ்சம் கிராண்டா இருந்த தான் என்னடி..

 பார்த்து பேசப் போறோம்.. அதுக்கு ஏன் பொண்ணு பார்க்க போற மாதிரி நீ என்னை ரெடி பண்ற.."

"கொஞ்சம் அழகா போனா தானே அவருக்கும் உன்னைப் பிடிக்கும்.."

"நான் எப்போதும் இருக்கும் அழகோடு, என்னை அவருக்கு பிடிச்ச போதும்.

“உனக்கு எல்லாம் ட்ரெஸ் செலெக்ட் செஞ்சு கொடுக்கிறேன் பாரு.. என்னைச் சொல்லணும்.. என்னத்தையோ போட்டுக்கிட்டு வா" அவள் கோபமாக வெளியேற..

 மது சிரிப்புடனே சுடிதார் ஒன்றை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

குளித்து விட்டு தலையைத் துவட்டியவள் முக அலங்காரத்தை முடித்துவிட்டு தலையை ப்ரீ ஹேர் விட்டு கிளிப்பை போட்டாள்.

"மது.. முதல் முறையா மாமாவைப் பார்க்கப் போற.. இப்படித் தலைவிரி கோலமா போகாதடி.." ஜானகி 

"ஐயோ உங்க இம்சை தங்களாடி, அவளை கொஞ்சம் ப்ரியா விடுங்கடி என்ற நிகிலா

"மது, அப்போ அத்தானை நான் எப்போ பார்க்குறது"என்று  ஆரம்பிக்க, 

 ஜானகியும் "ஆமா' எனக்கும் அத்தானை பார்க்க ஆசையா இருக்கு' என்றாள் கிறக்கமாக

மது தலையணை எடுத்து அவர்கள் மீது வீசினாள்..  அதை பிடித்துக் கொண்ட நிகிலா

"ஏன்டி ஜானு இப்படி பண்ற? உனக்கு தான் கல்யாணம் ஆச்சுல்ல அப்புறம் என்ன? அத்தான் எனக்கும் மதுவுக்கும் மட்டும் தான் என்றாள்.

"ஏன் கல்யாணம் ஆகிட்டா சைட்டடிக்க கூடாதா... ஆம்பளைங்க மட்டும் தான் கல்யாணத்துக்கு அப்புறமும் சைட்டு, ஜாலினு இருப்பாங்களா? "ஏம்ப்பா! பொண்ணுங்க ரசிக்கறது கூட தப்பா? எனக் கேட்டாள் ஜானகி.

ஏன் ரொம்ப வருத்தமோ?" என்று சீண்டினாள் கார்த்திகா.

மூவரும் மதுவை கேலி பேச ஆரம்பிக்க, அந்த இடத்தில் சந்தை தோற்கும் அளவுக்கு அவ்வளவு சத்தம்.

இரண்டு கைகளாலும் காதை இறுக மூடிக்கொண்டு, ஏதும் பேசாமல் புன்னகையுடன் அவர்களை பார்த்த மதுவின் மனமோ, தோழியர்களின் தன் மீதான அன்பில் நெகிழ்ந்து போய் இருந்தது.

தான் காதலிக்கும் ஒரே காரணத்திற்காக, பார்த்தேயிராத மகிழனை உறவுமுறை வைத்து அழைப்பது எல்லாம், அவளின் மீது அவர்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடு அல்லவா.....

இத்தனை வருடங்களாக அணைபோட்டு வைத்திருந்த காதலை எல்லாம், உரியவனிடம் கொட்டி கவிழ்க்கப் போகும் ஆசையுடன் மகிழ்ச்சியில் மதுவின் மனம் பொங்கி வழிந்தது. 

தன்னவனை இப்போதே பார்க்க வேண்டும் போல உள்ளுணர்வு சொன்னது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஏங்கித் தவித்தது.

                       

Comments

Popular posts from this blog

mm1

மது மகிழன் - 3