மது மகிழன் - 4

காலையிலேயே திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு இருந்தார்கள் மதுநிலாவும், மகிழனும். நான்கு மணி நேரப் பயணம்.  ஓட்டுநர் இருக்கையில் இருந்த மதுவின் தோற்றம் இன்று கூடுதல் அழகாக இருந்தது. தன் காதல் கைகூடும் மகிழ்ச்சி அவள் கண்களில்.. இன்று ஊருக்கு வருவதாக தன் தாய்க்கு நேற்றே தகவல் சொல்லிவிட்டாள். ஆனால் மாமனை பற்றி மூச்சு விடவில்லை. அம்மா தன் உணர்வுகளை புரிந்து கொள்வார் என்று மனம் ஆறுதலாக இருந்தாலும், அப்பாவை  நினைக்கும் போது கொஞ்சம் கவலையும், பயமும் இருந்தது மதுவுக்கு.

கார் சிட்டியை விட்டுத் தாண்டியதும் வேகமெடுத்தது. மது கைகளில் அந்தக் ஹோண்டா சிட்டி மிக லாவகமாக முன்னால் சென்ற வாகனங்களை முந்திக்கொண்டு பறந்தது. மகிழன் அவள் கார் ஓட்டும் அழகை வியந்து பார்த்தான். அவன் ரசிப்பதை கண்ட பெண்ணுக்குள் உற்சாகம் பிறந்தது.

"ஏய் மது இவ்வளவு அழகா கார் ஓட்டுற..

"தாங்க்ஸ் மாமா... என்று உள்ளம் இனிக்க சிரித்தாள் பெண்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சவாலாக எடுத்துக் கொள்பவள் மது

 மதுரை நெருங்கியதும் ஒரு உணவு விடுதியின் முன்பாக நின்றது கார்.

"சாப்பிடலாம் மாமா, ரெம்ப பசிக்குது."  என்று வயிறை தட்டி கட்டி அவள் சொன்ன அழகில் மகிழன் குட்டி மதுவை பார்த்தான்.

காலை உணவை முடித்து, சூடாக டீயும் அருந்திவிட்டுக் கிளம்பிய பயணம் அதன் பிறகு எங்கேயும் நிற்கவில்லை.
நான்கு மணிநேர பயணம் சலிக்காதவாறு என்னென்னவோ பேசினாள். ஊரை நெருங்கும் போது நேரம் பத்து தாண்டிவிட்டது.
 
விளாத்திக்குளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்னும் தகவல் பலகை கடந்ததும் சட்டென்று அமைதியாகி விட்டாள் மது. கொஞ்சம் படபடப்பு தெரிந்தது, காருக்குள் ஏசி இருந்தும் நெற்றியில் வியர்த்தது. அவள் கார் ஓட்டும் அழகை ரசித்துக் கொண்டே வந்த மகிழன் அவளின் முக மாறுதல்களை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்..

நகருக்குள் நுழைந்த கார் கடைவீதி, பேருந்து நிலையம் கடந்து எட்டையபுரம் சாலையில் திரும்பி கறிக்கடைகள், சினிமா தியேட்டர் கடந்து மது வீட்டு வாசலில் நின்றது, காரில் இருந்து மதுதான் முதலில் இறங்கினாள். அமர்ந்தே இருந்த மாமனை கேள்வியாக பார்த்து என்ன? என்று கண்களால் கேட்க.

"நீ முதல்ல உள்ள போ மது” என்று  சொன்னவனை வியப்பாக பார்த்தவள்..

"என்ன மாமா பயமா இருக்க? பொண்ண சைட் அடிக்க தெரியும் போது, அடி விழுந்தாலும் வாங்க தைரியம் இருக்கணும்” சிரிப்போடு அவள் சொல்ல, அவனும் சிரித்தான், தைரியமாக வந்துவிட்டாலும் அவனுக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. 

மது பயந்ததைப் போல அவள் அப்பா குறித்து மகிழனுக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. அவர் தன்னைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது. ஐந்து வருடங்கள் இந்த வீட்டின் வாசற்படியைக் கூட மிதிக்காமல் வீம்பாக இருந்துவிட்டான். வீட்டுக்குள் உரிமையோடு நுழைந்த கால்கள் இன்று தயங்கி நிற்கிறது. 

காரைவிட்டு இறங்கிய மகிழனை "உள்ளே வா மாமா' கையைப் பிடித்து மது இழுத்த போதும் நகராமல் நின்றான். கோபமாக அவனை முறைத்துக் கொண்டே கேட்டை திறந்து கொண்டு அவள் மட்டும் உள்ளே சென்றாள். 

மகிழன் கம்பீரமாக நின்ற அக்காவின் வீட்டை நிமிர்ந்து பார்த்தான். ஒரு கைதேர்ந்த கட்டட கலைஞனின் கவிதையாய் இருந்தது வீடு. இந்த வீடு  சந்திரன் இப்போது புதிதாக காட்டியது, இரண்டு வருடங்கள்தான். மகிழன் முதல் முறையாக இப்போது தான் இந்த வீட்டுக்கு வருகிறான். 4800 சதுர அடி நிலத்தில் 2000 சதுர அடியை வீடாக்கி இருந்தனர். சுற்றிலும் ஐந்து அடி உயர மதில்சுவர், இரண்டு கார்கள் நிறுத்தும் அளவுக்கு போர்டிகோ, அதன் முன்னால் படர்ந்து விரிந்த மல்லிகை பந்தல். காலியாக இருந்த இடத்தில் அழகான பூந்தோட்டம். மகிழன் வீட்டை ரசித்து நிற்க.. உள்ளே சென்ற மது அழைப்பு மணியை அழுத்த, இளமாறன் வந்து கதவைத் திறந்தான்.  வெளியே தன் அக்காவை தாண்டி மகிழனை பார்த்தவன், 

"அம்மா மாமா வந்திருக்காங்க' என்று சத்தமாக கத்திக்கொண்டே அவனைப் பார்த்து ஓடி வந்தான். 

மது தம்பியையே ஆச்சர்யமாக பார்த்து நின்றாள். அக்காவின் மனதில் உள்ளது தம்பிக்கும் தெரியும்தான், ஆனால் அவனும் மகிழனை எவ்வளவு தூரம் எதிர்பார்த்தான் என்பது அவன் ஓட்டத்தில் தெரிந்தது.  

மகிழன் கைகளை பிடித்துக் கொண்டு "அக்கா உங்க கூடத்தான் வந்தாளா மாமா' என்று மகிழ்ச்சியில் குதித்தான். தம்பி வந்துவிட்டான் என்றதும் தாமரை உள்ளே நுழைந்த மகளைக் கூட பார்க்காமல் வாசலுக்கு வந்திருந்தார்.

"மகி உள்ளே வாடா, ஏன் அங்கேயே நின்னுட்ட?" மகிழ்ச்சி பொங்க தாமரை அழைத்த பின்புதான் கதவை நோக்கி நகர்ந்தான் மகிழன். ஓடிவந்து தம்பியை கட்டிக்கொண்டார் தாமரை, கண்களில் தாரை தாரையாக கண்ணீர். மகிழன் கண்களும் கலங்கி இருந்தது.

நால்வரும் உள்ளே வர.. ஹாலில் சோபாவில் அமர்ந்து இருந்தார் சந்திரன். டிவியில் செய்தி ஓடிக்கொண்டு இருந்தது. உள்ளே வந்த மகிழன் இருகரம் கூப்பி மாமனை வணங்கினான், பதிலுக்கு சந்திரனும் வணக்கம் சொல்லிவிட்டு அமரும்படி இருக்கையை காட்டினார். எதிரில் அமர்ந்து கொண்டான்.

மது உள்ளே வந்ததில் இருந்து படபடப்புடனேயே இருந்தாள், எதிரே கம்பீரமாக சந்திரன் அமர்ந்திருக்க தவிப்புடன் அமர்ந்திருந்தான் மகிழன், ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இதுநாள் வரை சந்திரன் அக்காவின் கணவர். ஆனால் இன்று? இனிமேல்?

மௌனத்தை உடைத்தார் தாமரை.

"சித்தி நல்ல இருக்காங்களா மகி?'

"ம்ம்" அம்மாவும் கூட வர்றதா இருந்ததுக்கா... கொஞ்சம் கால் முடியல' என்றவன் நிமிர்ந்து தன் அக்காவை பார்த்தான்...

"எங்க மேல என்னடா கோபம்? அஞ்சு வருசமா ஒதுங்கி இருந்துட்ட! ஆதங்கமாக கேட்ட தாமரையின் கண்கள் மீண்டும் கலங்கியது. 

மகிழன் பேச முடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

"சொல்லுங்க மாப்ள, உங்க அக்கா தான் கேட்கிறா! எப்போதும் அவனை ஒருமையில் அழைக்கும் மாமாவின் வார்த்தைகள், இன்று பன்மைக்கு மாறியிருந்தது.

மாமனை நேருக்கு நேராக பார்த்தான் மகிழன். 

"மதுவை எனக்கு பிடிச்சிருக்கு மாமா, அந்த எண்ணத்தோடு இங்க வர்ரது உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல?  அதான்..." என்று எழுந்து நின்றான். 

"உட்காருங்க மாப்ள" உங்ககிட்ட நிறைய பேச இருக்கு' என்று அவனை பார்த்து மூச்சை இழுத்து விட்டவர். 

நீங்க ரெண்டு பேரும்தான் ஏற்கனவே முடிவு எடுத்தாச்சே அப்புறம் என்ன?” நிதானமாக கேட்டர் சந்திரன், மது கண்களில் கண்ணீர் அருவியாய் ஓடியது. மகிழன் எதுவும் பேசமுடியாமல் அவரையே பார்த்திருந்தான்.

"உண்மையைச் சொல்லணும்னா.. "உங்களுக்கு பொண்ணு கொடுக்க முதல்ல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை." அது உங்களை பிடிக்காம எல்லாம் இல்லை, தன்னோட பொண்ணு எந்தக் குறையும் இல்லாமல் வசதியா வாழனும்னு  நினைக்கிற சராசரி அப்பானோட ஆசை.

"எனக்கு புரியுது மாமா"

"ஆனா... உங்க அக்கா அதைப்பத்தி எதையுமே யோசிக்கலை, ஏன் தெரியுமா?" அவளுக்கு உங்கமேல அவ்வளவு பாசம், என் தம்பிக்கு தான் என் மகளை கட்டி கொடுப்பேன்னு சண்டை போட்டு என்னை சம்மதிக்க வச்ச, மகிழன் நிமிர்ந்து தன் சகோதரியை பாசமாய் பார்த்தான். தாமரையின் கண்கள் இன்னும் கலங்கியே இருந்தது...

"அவ பாசத்தை நீங்க காப்பாத்தலயே மாப்ள! வீட்டுக்கும் வராம எதுக்கு இவ்வளவு தூரம் விலகிப் போனீங்க?

தலைகுனிந்து இருந்தான் அவர் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. பாசத்தை பேசும் மனிதரிடம், பணம் இல்லை, நான் அப்போது ஏழ்மையில் இருந்தேன் என்று சொல்ல மனது வரவில்லை. தவித்துப் போய் அமர்ந்து இருந்தான். 

சந்திரனுக்கே அவனை பார்க்க வேதனையாக இருந்திருக்க வேண்டும். எழுந்தவர் அவனருகில் வந்து அமர்ந்து தோளோடு அவனை அணைத்துக் கொண்டார். அதைக்கண்டு தாமரை நெகிழ்ந்து போக. மது ஓடிவந்து தன் தந்தையை கட்டிக்கொண்டாள். அவள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. ஒரு தந்தையாய் சந்திரன் இதுவரை பார்த்திராத மகிழ்ச்சி.

ஒரு கையால் மருமகனையும், மறுகையால் மகளையும் அணைத்துக் கொண்ட சந்திரன். 

"என் மக மனசு இந்த அப்பாவுக்கு தெரியாத' என தன் தலையை மகள் தலையோடு செல்லமாக முட்டினார். 

"பெண் பிள்ளைகள் மீது தந்தைக்கு இருக்கும் பாசத்தை  நிரூபித்துக் கொண்டிருந்தார் அந்த பாசமிகு தந்தை. எம்பொண்ணு சந்தோஷமா வாழணும், எனக்கு அது மட்டுந்தான் வேணும் என்றது அவரது செயல்கள். 

தந்தையின் இடுப்பை கட்டிக்கொண்டு அவர் மீது சாய்ந்து கொண்டாள் மது. அவள் கண்களில் இன்னும் மகிழ்ச்சியின் கண்ணீர்...

சந்திரனை பிரமிப்பாக பார்த்தான் மகிழன், மகளின் மேல் இந்த மனிதருக்கு எத்தனை அன்பு, தன் பெண்ணின் வாழ்க்கை மேல் எத்தனை அக்கறை இருந்தால் இதை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வார்.
குடும்பம்தான் தன் உலகம் என்று வாழ்ந்து பழகிவிட்ட மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ?  பாசம் வைப்பதில் அவரை அடித்துக் கொள்ள முடியாது என்று அக்கா கூடச் சொன்னாளே! அந்த உண்மையை கண்ணால் பார்க்கிறான்.

மனதுக்குள் மழை பெய்வது போல இருந்தது மகிழனுக்கு, மதுவைப் பார்த்து புன்னகைத்தான். அவள் உதட்டைச் சுழித்து அவனை கேலி செய்தாள். என் அப்பா எப்படி? என்று பெருமை பேசியது அவள் விழிகள்.

"எனக்கு ஒரேயொரு ஆசைதான் மாப்ள  "என் பொண்ணு எப்போதும் கண் கலங்கக் கூடாது' கண்களில் உயிரைத் தேக்கிச் சொன்னார் சந்திரன். அதுவரை அமைதியாக இருந்தவன் சட்டென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"மது என்னோட உயிர் மாமா" உணர்ச்சி ததும்ப மகிழன் சொன்னபோது சந்திரன் தன் கண்களை ஒருமுறை மூடித் திறந்தார். 

"இதில் அம்மாவுக்கு? மகிழனை கேள்வியாக பார்த்தார் சந்திரன்.

அம்மாவுக்கு எல்லாம் தெரியும் மாமா "அவங்க சம்மதம் இல்லாம என்னோட எந்த முடிவும் இருந்ததில்லை! அவன் சொல்ல சந்திரன் அவன் கைகளை அழுத்திக் கொடுத்தார். 

தம்பி வந்த மகிழ்ச்சியில் தாமரைக்கு என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை. மகிழன் தேநீர் குடித்து ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை, அவன் முன்னால் பழரசம் இருந்தது. கூடவே புரூட் கேக்கும்.

மதிய சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்க தந்த லிஸ்டில் இருந்ததை பார்த்து சந்திரனுக்கு மயக்கமே வந்துவிட்டது.

"தாமரை இது உனக்கே கொஞ்சம் ஓவராக தெரியலையா?

"போங்க நீங்க' எத்தனை வருசம் போய் என் தம்பி வந்திருக்கான், சீக்கிரம் வாங்கிட்டு வாங்க.. இப்பவே மணி பத்தாச்சு சந்திரனை விரட்டினார்.

சமையல் அறையில் இருந்து கொண்டு தாமரை சத்தமாக கேட்டார். மகி தோசைக்கு சாம்பார், சட்னி மட்டும் போதுமா? இல்ல வேற எதுவும் செய்யவா? 

பழரசத்தையே குடிக்க முடியாமல் திணறும் மாமனை பார்த்து மதுவும், இளமாறனும் விழுந்து விழுந்து சிரிக்க மகிழன் செய்வதறியாமல் விழித்தான்.

மதுவுக்கு மாமனை பார்க்க பாவமாக இருந்தது. சமையல் அறைக்குள் சென்று தன் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டவள்.

"அம்மா நானும், மாமாவும் வரும்போதே ஹோட்டல்ல சாப்பிட்டாச்சு, அங்க ஜூசை வச்சுக்கிட்டு மாமா குடிக்க முடியாமல் திணறுறார், நீ இங்க தோசையை அடுக்குற..  "பாவம் மா அவரு விட்டுரும்மா' என்று கேலி பேச. 

தாமரை மதுவின் கன்னத்தை பிடித்து ஆசையாக கிள்ளினார். தாயின் முகம் மகிழ்ச்சியில் பூரித்துப் போய் இருந்தது. மகளின் கண்களுக்கு தாய் பத்து வயது குறைந்ததுபோல் உற்சாகமாக தெரிந்தார்.

"மது இந்த வெங்காயத்தை வெட்டும்மா.. என்று அவளுக்கு ஒரு வேலையை ஒதுக்கியவர், 

"மாறா.. என்று அழைக்க இளமாறன் மகிழனையும் இழுத்துக் கொண்டு மாடிக்கு ஓடிவிட்டான்.

கீழ்தளத்தில் பெரிய ஹால், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, பூஜை அறை என்று இருக்க, மேல்தளத்தில் இருபதுக்கு பதினாறு அளவில் இரண்டு பெரிய அறைகளும்,  ஒரு சிறிய விருந்தினர் அறையும் இருந்தது. மதுவின் அறைக்குள் மகிழனை அழைத்து வந்திருந்தான் இளமாறன். மதுவை போலவே அவள் அறையும் அவ்வளவு அழகாக இருந்தது. 

"அக்கா ரூம் எப்போதும் நீட்ட இருக்கும் மாமா' எதையாவது மாற்றி வைத்தால் அவ்வளவுதான் பத்ரகாளியா மாறிடுவா!.

"மதுவுக்கு கோபம் வருமா? மகிழன் ஆச்சர்யமாக கேட்டான்

"கோபம் வருமா வா? "ஐயோ' பாவம் மாமா நீங்க! என்று சிரித்தான்.

மதுவின் விருப்பு, வெறுப்புகளை, ஆசைகளை, சேட்டைகளை இளமாறன் ஒவ்வொன்றாக சொல்ல தனக்குள் குறித்துக்கொண்டான் அவள் வருங்கால கணவன். 

மதிய உணவுவரை இருவரும் மேலேயே இருந்தனர். தந்தை இருந்ததால் மது மேலே வரவேயில்லை. தாமரை உணவுண்ண அழைக்க இருவரும் கீழே வந்தார்கள். மதுவை பரிமாறச் சொல்ல, மகிழனுக்கு வெகு கவனமுடன் அவன் இலையை பார்த்துப் பார்த்து பரிமாறினாள். மட்டன், சிக்கன், மீன், இறால் என்று வாழை இலையையே மறைத்தது உணவு வகைகள்.

மகிழன் தன் அக்காவை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தான். 

"என்னக்கா அதுக்குள்ள இவ்வளவு செஞ்சிருக்க? 

அவன் தலையை தடவிக்கொண்டே "சும்மா சாப்பிடுறா.. எத்தனை வருஷம் ஆச்சு என் கையாள உனக்கு சமைச்சுப் போட்டு.

"மாப்ள உங்க அக்காவுக்கு இப்படி எல்லாம் சமைக்க தெரியும்னு எனக்கே இன்னைக்கு தான் தெரியும் என்றார் சந்திரன்.

ஆமா இவருக்கு நான் எதுவுமே சமைச்சு கொடுக்கல பாருங்க..

கேலியும், கிண்டலுமாய் வயிறும், மனசும் ஒன்றாய் நிறைந்தது அனைவருக்கும்.

தொழில் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொண்டு மாமனுடன் அமர்ந்து தேநீர் அருந்தியவன்

"நேரமாச்சு, "அப்போ நான் போயிட்டு வரேன், மாமா" என சந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தான்.

"சரி மாப்ள' என்று சோபாவில் அமர்ந்தவாறு விடைகொடுத்தவர்  அவன் புறப்பட போவதாக சொன்னதும் மகளின் முகம் வாடிப்போனதை கவனிக்க தவறவில்லை. சந்திரன் சோபாவிலேயே அமர்ந்து விட தாயும் பிள்ளைகளும் முகப்பு வாசல்வரை வந்தார்கள். 

தாமரையிடமும், இளமாறனிடமும் சொல்லிக் கொண்டவன். மதுவிடம் கண்ணசைவில் விடைபெற அனுமதி கேட்க, அவள் தலை தானாக அசைத்து விடைக்கொடுத்தாலும். அவனை கலவரமாக பார்த்தாள். என்னை விட்டுவிட்டு போகப்போகிறாயா? என்றது அவள் கண்கள்.

இருவரும் பேசிக் கொள்ளட்டும் என நினைத்து மகிழனுக்கு விடை கொடுத்துவிட்டு தாயும், மகனும் உள்ளே சென்றுவிட, வாசலில் நின்றிருந்தனர் மதுவும், மகிழனும்.

அவனது அந்த சிரித்த முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள் மது. இவரால் எப்படி சிரிக்க முடிகிறது? என்னைப் பிரிவது அவருக்கு துன்பமாக இல்லையா? 

காரில் ஏறியதும் அவனுமே கலங்கிப் போனான். அவள் கண்ணீர் விழிகளைப் பார்த்த போது, அப்படியே அவளையும் அழைத்துக் கொண்டு போய்விடலாமா எனத்தான் தோன்றியது. 

அவளை பார்த்து கொண்டே காரை மெதுவாக நகர்த்தினான், மது அவனை பார்த்து சிரிக்க முயன்று தோற்றுப்போனாள். கண்கள் அருவியாகி இருந்தது. கையை அசைத்து கொண்டே இருந்தாள்  கண்ணில் இருந்து கார் மறையும்வரை..


**********

மறுநாள் விடுமுறை நாள். சந்திரன் வீட்டில் இருந்தார். முதல்நாள் மகிழன் வந்து சென்றிருக்க, அதன் பின்  மதுவிடம் வழக்கம் போலவே இயல்பாகவே இருந்தார், மகிழன் தொடர்பான எதுவும் பேச்சுக்குள் வரவில்லை. தந்தையிடம் சொல்லாமல் மாமனோடு காரில் வந்ததற்கு மன்னிப்புக்கோர தந்தை ஏதாவது கேட்பார் என எதிர்பார்த்தாவாறு மது அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தாள். கவனித்தவர் எதுவும் சொல்லாதிருக்க, 

அமைதியாக அவள் அப்பத்தாவின் அறைக்குள் சென்று தூய்மை செய்வதாக பொருட்களை உருட்ட, அந்த சத்தம் வாசல்வரை கேட்டது. அவள் அப்பத்தா வீட்டில் இல்லை. தன் மகள்வழிப் பேரன் அர்ஜுனுக்கு மதுவை திருமணம் முடிக்க அவருக்கு ஆசை. ஆனால் சந்திரனுக்கு அதில் உடன்பாடு இல்லை. தந்தைக்குத் தான் மகள் மனதில் என்ன இருக்கு என்று தெரியுமே! அதில் அவர் தாய்க்கு கொஞ்சம் வருத்தம். மகள் வீட்டுக்கு போனவர் ஒருவாரம் ஆகியும் இன்னும் திரும்பவில்லை, 

மகிழனிடம் ஒரு வசீகரம் இருந்தது. அது சந்திரனையும் ஈர்க்கத் தவறவில்லை. தன் மகளுக்குப் பொருத்தமானவன் மகிழன்தான் என்று அவருக்குள்ளும் பதிந்து போனது. ஒரு தந்தைக்கு மகளின் மகிழ்ச்சியை விட வேறென்ன வேண்டும், 

தாமரை வழக்கம் போல் சமையலில் இருந்தார். இளமாறனும் வீட்டில் இல்லை. மதுவை அழைத்த சந்திரன். பக்கத்தில் அமரவைத்து அவளையே புன்னகையுடன் பார்த்தார்.

"என்னப்பா'

"என் பொண்ணு எவ்வளவு பெரிய மனுசியா வளர்ந்துட்ட..! என்று ஆச்சரியம் காட்டினார்.

சிறுவயதில் மகிழன் மீது மகளுக்கு வந்த ஆர்வம் அந்த வயதின் சிறு தடுமாற்றம் என்றுதான் நினைத்தார் சந்திரன், நேற்று மகிழன் புறப்பட்ட போது மகளின் கண்களில் தெரிந்த தவிப்பில் தந்தை திகைத்து நின்றார். மகிழன் மீது அவள் கொண்ட காதல் புரிந்ததும் இதை இழந்தால் மகள் என்னவாகி இருப்பாள் என்று நினைக்கவே பயந்தார்.

"உனக்கு மகிய கல்யாணம் பண்ண சம்மதம் தானே மதும்மா?

தந்தையின் கேள்வியில் வெட்கம் கொண்டவள், "அப்பா' என்று சிணுங்கி  அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள். இதுவரை மது தன் தந்தையிடம் மகிழன் மீதான தன் காதலை சொன்னதில்லை என்பது புரிய, தந்தையின் எதிர்பார்ப்பை அறிந்தவள்,

"எனக்கு மாமாவை ரெம்ப பிடிக்கும்பா” அவர் இல்லாமல்.. கூற வந்ததை நிறுத்தியவள் தந்தை மார்பில் சாய்ந்து கொண்டாள். 

மகள் முகத்தில் என்றும் இல்லாத பரவசம் கண்டார் தந்தை,  மென்மையாக அவள் தலையை தடவிக் கொடுத்தவர்.  பழைய மதுவை மீட்டு வரும் சக்தி மகிழனிடம் தான் உள்ளது என்பதை நேற்றே புரிந்துகொண்டவர். துள்ளலும், பேச்சில் குறும்பும் சேர மான்மகுட்டியாய் துள்ளித் திரிந்த மகளை பார்க்க தந்தையின் உள்ளம் மகிழ்ந்தது போனது, 

தங்கள் பெண்ணிற்கு அவர்கள் கொடுத்த வாழ்க்கையை விட மகிழன் ஒரு படி மேலே போய் இன்னும் வளமாக அவளை வாழ வைப்பான் என்று நிச்சயமாக அவர் நம்பினார். அந்த நம்பிக்கை எந்த இடத்திலும் பொய்த்துப் போய்விடக்கூடாது என்பதில் மகிழன் மிகவும் உறுதியாக இருந்தான். தாங்கள் சரியான ஒரு மாப்பிள்ளையைத்தான் தங்கள் பெண்ணிற்குத் தேர்வு செய்திருக்கிறோம் என்று அக்காவும், மாமாவும் திருப்திப்பட வேண்டும்.
அப்படித் திருப்தியான ஒரு வாழ்க்கையைத் தன் மனைவிக்கு, தான் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டான்.


******************


நாட்கள் வேகமாக கடந்தது. கல்யாணத்தை திருச்சியில் வைத்துக்கொள்ள மகிழன் பிடிவாதமாக இருந்ததால். சந்திரனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நீ தனியாக இருக்கிறாய் இங்கேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ சொல்லியும் மகிழன் அதைமட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். மதுவிற்கு திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு வரை பரீட்சை இருந்தது, அதனால் திருமணத்திற்கு முதல் நாளில் நிச்சயம் வைத்து அன்றே பெண் அழைப்பையும் வைப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயத்தை பெரிதாக நடத்த நேரம் இல்லாததால் பூ வைக்கும் விழாவை கொஞ்சம் பெரிதாக நடத்த நினைத்தார் சந்திரன். ஒரே பெண்ணின் திருமணவிழா எந்த மனக்குறையும் வராமல் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள்.

மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்று தனித்தனியாக விருந்தினர்களை அழைக்கவில்லை. என் தம்பிக்கும், மகளுக்கும் பேசி முடிக்கிறோம் என்று தாமரையே சொந்தங்களை அழைத்தார். பத்து மணிக்கு விழா, அதன் பிற்பாடு மதிய விருந்து என்று ஏற்பாடாகி இருந்தது. மண்டபம் பிடித்தால் இயந்திர தனமாக இருக்குமென்று தங்கள் காம்பவுண்ட்க்கு உள்ளேயே கீற்றில் பந்தல் போட்டு அதை மண்டபத்தை விட அழகாக அலங்கரித்து இருந்தார்கள். விருந்து ஒரு புறம் தயாராகிக் கொண்டிருக்க. வீடு சொந்தங்களால் நிரம்பி வழிந்தது. மாப்பிள்ளை வீட்டார் போய்ச் சேர்ந்தது தான் தாமதம், அந்த இடமே கோலாகலமாகிவிட்டது.

காரில் இருந்து முதலில் மகிழன் இறங்கினான், பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக இருந்தான், கூடவே அவன் தோழர்கள் அரவிந்த், அன்புச்செழியன்.  பின்னால் வந்த கார்களில் ஒன்றில் பார்வதியும், யமுனாவும், அர்ச்சனாவும் பின் இருக்கையில் இருந்து இறங்க. முன் இருக்கையில் இருந்து மதன் இறங்கினான். மற்றொரு காரில் மஹா அக்கா கீர்த்தனாவும், அவள் கணவர் சிவாவும், அவர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு மஹாவும் இறங்கினார்கள். மணமகன் தரப்பில் அவ்வளவுதான் கூட்டம். ஆனால், பெண் வீட்டார் தரப்பில் ஒரு ஊரே திரண்டு இருந்தது. அத்தனைப் பேரையும் எந்தக் குறையும் இல்லாமல், முகம் கோணாமல் வரவேற்றார்கள் பெண்வீட்டார்.

புன்னகை முகமாக பாட்டியின் அறையில் அமர்ந்திருந்தாள் மது அதற்குள் அவள் அத்தை வந்து அவளை அழைத்துச் செல்ல, அதே மெல்லிய சிரிப்போடு மலர்ந்த முகமாக வெளியில் வந்தாள், ஹாலுக்கு வந்தவள் கைக்கூப்பி அனைவருக்குமாக ஒரு வணக்கத்தைத் தெரிவித்தாள். 

 வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்தான் மகிழன். கல்யாணக் கலையோ ஏதோ ஒன்று அவள் முகத்தில் கூடுதல் அழகை கொடுத்திருந்தது.
ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த பட்டு உடுத்தி இருந்தாள். அடுத்தடுத்ததாக அடுக்கி வைத்தாற்போல மாங்காய் டிசைன் தங்க நிற பார்டரில் மின்னியது. உடம்பு முழுவதும் அதே தங்க நிற மாங்காய் டிசைன். கூந்தலைத் தளர்வாகப் பின்னி பூ வைத்திருந்தாள். மிதமான ஒப்பனை. ஆபரணங்கள் அத்தனை அணிந்திருக்கவில்லை. நெற்றி வகிட்டில் சின்னதாக ஒரு நெற்றிச்சுட்டி, 

தங்கப் பாவைப்போல நுழைந்த பெண்ணிடம் இருந்து விழியை விலக்க முடியாமல் தவித்தான் மகிழன்.. கோகிலா மகிழனுக்கு எதிரே யமுனாவிற்கு அருகே மதுவை அமர வைத்தார். அவள் கண்கள் ஒரு முறை அண்ணார்ந்து அங்கிருந்த மனிதர்களைப் பார்த்தது தந்தைக்கு அருகே அமர்ந்திருக்கும் மகிழனை  ஒருமுறை பார்வையால் வருடிக்கொண்டாள். அந்தக் காந்த விழிகள்  மகிழனை பார்த்து புன்னகைக்க, அப்பொழுது தான் அவளைப் புதிதாக பார்ப்பது போல மகிழன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையின் தீவிரம் உணர்ந்த மது நாணத்தில் முகம் சிவந்தாள், 

சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவு பெற... இன்னாரது பெண் இன்னார்க்கு என்று சுற்றம் சூழ உறுதிப்படுத்தப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டார் சார்பாக, கோகிலா பூ வைக்க, மஹா ஒரு பெரிய ஆரம் அணிவித்தாள். மாப்பிள்ளையின் தங்கையாக  அனைத்துக் காரியங்களிலும் அவளே முன்னின்று செய்ய. ஒரு சிலருக்கு உடன்பாடில்லை. அது எப்படி அந்த பொண்ணு மகமுறையில்ல வேணும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

 மது படித்துக் கொண்டிருந்ததால், அவளது பரீட்சை முடிந்தே திருமணம் என்று இரு தரப்பும் சொல்லிவிட,  அதற்கு தோதான நாள் ஏற்கனவே முடிவு செய்தாகிவிட்டது. வைகாசி 28 சபையில் பெரியவர்கள் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது...

 "வைகாசி 28 நாள் நல்ல இருக்கு, ஞாயிறுக்கிழமை வருது, எல்லோரும் குடும்பமாக கலந்துக்கலாம் என்ன சொல்றிங்க ஒரு பெரியவர் கேட்க

"அதற்கு முன்னாடியே வேறு முகூர்த்த நாள் இல்லையான்னு' மாப்பிள்ளை கேட்கிறார் என்றான் அரவிந்த், அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்தது அனைவரிடமிருந்தும்.

"மாப்பிளைக்கு ரொம்ப தான் அவசரம்" என்று சொந்தங்கள் கேலி பேச, "உண்மையிலே உன் அழகுல மயங்கிட்டார் போல" என மதுவின் காதுக்குள் உரைத்தார்கள் அவள் வயது பெண்கள், மது தான் நெளிந்து கொண்டிருந்தாள்.

"லூசு மாமா' என்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

"இந்த நாள்தான் எல்லோருக்கும் தோதா வருது மாப்ள' உங்களுக்கு எதுவும் மாத்தணுமா? சந்திரன் கேட்டார்.

"இல்ல மாமா' அவன் சும்மா கேலி பேசுறான். எங்களுக்கும் சம்மதம் என்றான் மகிழன்.

"ஸ்கூல் தொடங்கிருமே' என்று யாரோ இடையில் புகுந்தார்கள். 

"ஏம்பா அதனால தானே ஞாயிற்றுக்கிழமை வைக்கிறோம், காலேஜ், ஸ்கூலு தொடங்கினாலும் பரீட்சை எல்லாம் இருக்காது, ஒரு ரெண்டு நாளு லீவு போடுங்க, இது கூட பண்ணலானா அப்புறம் என்ன சொந்த பந்தம்.

 ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைச் சொல்ல, கடைசியாக  கூடிப்பேசி அந்த நாளையே உறுதி செய்தார்கள். இந்த மாதம், இந்த நாள் திருமணம், 

மகிழ்ச்சி பொங்க தாமரையை இறுக அணைத்துக் கொண்ட மகிழனின் தாய். தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"ஐயோ! என்ன சித்தி இது? எதுக்கு இப்போ கண் கலங்குற?"

"அவனை நல்லாப் பார்த்துக்கிற மாதிரி, பொறுப்பான ஒரு பொண்ணு அமையணும்னு எல்லா கடவுளிடமும் வேண்டிக்கிடுவேன் தாமரை, என்னோட பிரார்த்தனை வீண் போகலை."

"அழாதீங்க சித்தி."

"மனசுக்கு நிறைவா இருக்கு தாமரை, மது எம்புள்ளையை நல்லாப் பார்த்திக்கிடுவா, அவனுக்கு தனியாக பிறந்த குறை இல்லாம செஞ்சிடுவா."

"என்ன சித்தி இதெல்லாம், நாங்க எல்லாம் இல்லையா? அவனை எப்ப பிரிச்சு பார்த்தோம், அவன் என் தம்பி சித்தி...

"எனக்கு அது போதும் தாமரை"

மதிய உணவு சிறப்பாக நடந்து முடிந்தது, விருந்தினர்கள் அனைவரும் கலைந்து போயிருக்க ஒரு சம்பிரதாயத்திற்காக மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார்கள் அமர்ந்து கூடி பேசினார்கள்.

இளையவர்கள் எல்லாம் மாடிக்குப் போக, மகிழனையும் இழுத்துப் போனார்கள், அங்கேதான் மதுவும் இருந்தாள்.

"ஏம்பா பொண்ணு பார்க்க வந்தா' பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேசணும்! அந்த பழக்கம் எல்லாம் உங்க ஊரில் கிடையாதா? என்றாள் மஹா.

"அது புதுசா பார்க்க வர்றவங்களுக்கு! இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசிப் பேசித்தான் இந்த கல்யாணமே நடக்குது... என்றாள் கவிதா. அந்த இடமே சிரிப்பாள் அதிர்ந்தது.

"வந்து உன் மாமா பக்கத்தில் உட்காரு செல்லம்" என்று மதுவை பிடித்து  மகிழன் அருகில் அமர வைத்தாள் மஹா. மது சட்டென்று எழுந்து விட்டாள்.

'பொண்ணு ரெம்ப வெட்க படுறா வாங்க நாம வெளியே போகலாம்! என்று மஹா சொல்லி முடிக்க..

சட்டென்று கதவு மூடும் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தார்கள் இருவரும். அவர்களை தவிர அறைக்குள் யாரும் இல்லை. இந்தப் பெண்களின் கூத்து புரிய சிரித்துக் கொண்டான் மகிழன்

மதுவைப் பார்த்தான். இன்று முழுவதும் அவன் கண்ணெதிரேதான் நின்றிருந்தாள். ஆனால் இத்தனை உரிமையாக அவனால் அவளைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. சுற்றிவர அத்தனை உறவுகளை வைத்துக் கொண்டு அப்படிப் பார்ப்பதும் நன்றாக இராது என்பதால் மகிழன் தன்னை அடக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் கண்ணிரெண்டும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. முதல் முறையாக தன் சொத்து அவள் என்று அவளை ரசித்தது.

"புடவையில பார்க்க ரொம்ப அழகா இருக்கே!"

"ஏதாவது பேசேன் மது... இன்னைக்கு பங்ஷன் நல்லா இருந்துதில்லை?"

“ரொம்ப நல்லா இருந்துச்சு."

"உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கா?"

"ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லை, இதுவே ரொம்ப க்ராண்ட்டா இருந்துது."

"கல்யாணத்தை ஜமாய்ச்சுடலாம், அதுக்குத்தான் இன்னும் நிறைய நாள் இருக்கே.”

"ஆனா எனக்குத் தான் "நடுவுல இவ்வளவு நாள் இருக்கேன்னு வருத்தமா இருக்கு." அவன் சோகமாகச் சொல்ல இதுவரை இயல்பாக அவன் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று குனிந்து விட்டாள். 

இன்று மதுவிடம் வெட்கம் கொஞ்சம் கூடியிருந்தது மகிழன் மௌனமாகச் சிரித்தான். தான் பேசும் சின்னச் சின்ன வார்த்தைகளுக்கும் அவள் நாணுவது, முகம் சிவக்கத் தலை குனிவது... பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது அவனுக்கு.

"நான் எப்பிடி இருக்கேன்னு சொல்லவே இல்லையே?"

"அழகா இருக்கீங்க மாமா." குனிந்த தலை நிமிராமல் பதில் வந்தது.

****************

"ஹேய் அம்மு, எப்படி இருக்க? அவன் குரல் குழைந்தது.

"நல்லாவே இல்லை." சொல்லும் போதே குரல் கலங்கியது.

"ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு பொண்ணு பேசுறா பேச்சா இது? ஏன் பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையோ?" அவன் கேலியில் இறங்க,

"பேச்சை மாத்தாதீங்க மாமா. இந்த வாரம் எத்தனை வாட்டி எங்கூட பேசியிருக்கீங்க சொல்லுங்க. போன் பண்ணுறதே இல்லை. நீங்க என்னை மிஸ் பண்ணவே இல்லையா மாமா?'' அவள் குரல் உடைந்து வந்தது.

"கல்யாணத்திற்கு முன்னாடியே தொழிலை விரிவாக்கும் வேலையை முடிச்சிரணும்னு ரொம்பவே தீவிரமா இருக்கேன் அம்மு, அப்பத்தான் நான் உன்கூட நிறைய நேரம் இருக்க முடியும். இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டாத்தான் நிம்மதி. அதுக்கப்புறம் ஃபுல் டைம் என் அம்மு கூடத்தான் ?"

"ம்..." அவள் இழுக்க,

"அதை சிரிச்சுட்டே சொல்லலாமே"

"மாமா..."

“என்னடா..?” உலகத்துக் காதலெல்லாம் அவன் குரலிலும் வழிந்தது.

“எனக்கு உங்களைப் பாக்கனும்” அவள் குரல் கெஞ்சலாய் மாறியிருந்தது.

"இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்குடா, அப்புறம் இந்த அம்மு எப்போதும் மாமன் கூட தான்.

"இன்னும் ரெண்...டு வாரம் இருக்கு, என்னால உங்கள பார்க்கமா இருக்க முடியாது.... ப்ளீஸ் மம்மு ஊருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் வந்துட்டு போங்க...

“என்னால வரமுடியாது அம்மு. அது அழகும் இல்லை. என்னதான் அக்கா வீட இருந்தாலும் நிச்சயம் ஆனா பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வந்தால் நல்ல இருக்காதுடா...

"போங்க மாமா....'  அது அது ஜோடியா சேர்ந்தே ஊர் ஊராக சுற்றித்திரியுதுகா! நீங்க வீட்டுக்கு வர யோசிக்கணுமா?

"மது, முக்கியமான ஒருத்தர் கால் பண்ணுறார். நான் அப்புறமா கூப்பிடுறேன்டா" அவள் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டான். 

மதுவுக்கு சலிப்பாக இருந்தது. இனி அவனாகக் கூப்பிட மாட்டான். வேலையில் பிஸியாகிவிட்டால் இவள் அழைத்தாலும் பதில் இருக்காது.

மது பித்துப் பிடித்தது போல ஆகிப்போனாள். எங்கு பார்த்தாலும் அவன் நினைவுகள். நிச்சயதார்த்தம் அன்று அந்த ஒற்றை சோஃபாவில் தன்னையே வெறித்துப் பார்த்திருந்தவன் ஞாபகத்திற்கு வர. ஆசையாக சோபாவில் அமர்த்தவள், உடலை குறுக்கி அதில் படுத்துக்கொண்டாள். மயக்கத்தின் அதீதம் நோயாகத் தங்கிவிட, அவள் காதல் நோயினால் துன்புற்றாள்.

அடிக்கடி அவனை கைபேசியில் பிடிக்க முடியவில்லை. தவித்துப் போனாள் மது. வருடக்கணக்கில் மனதில் சுமந்து இருந்திருக்கிறாள். காதலாக நெருங்கிப் பழகியது விரல் விட்டு எண்ணும் நாட்களே.

இந்த இரண்டு வருடங்கள் திருச்சியில் இருந்தவரை அவன் காதல் இல்லாவிட்டாலும் அவன் இருக்கும் ஊரில் இருப்பதே சுகமாக இருந்தது.

மாமன் திடீரென கண்முன் நின்றபோது திக்குமுக்காடிப் போனாள். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சி. அதுவும் கடைசி மூன்று மாதங்கள் சொர்க்கமாய் இனித்தது மதுவிற்கு. அவன் காட்டிய அந்த கண்ணியம் தாண்டா நெருக்கமும். மார்பில் சாய்ந்து கொள்ள இடை நெருக்கிய அணைப்பும் மீண்டும் மீண்டும் வேண்டும் என மனம் சண்டித்தனம் பண்ணியது. 

அவன் இல்லாத தன் வாழ்வு இத்தனை ஆண்டுகள் எத்தனை சூனியமாக இருந்தது என்று எண்ணி எண்ணி அந்த நாட்களை வெறுத்தாள் . ஆனால் இதெயெல்லாம் யாரிடம் சொல்ல முடியும். புரிந்து கொள்ள வேண்டியவனே புரிந்து கொள்ளாமல் ஓடும்போது அவளால் என்னதான் செய்ய முடியும். வாடிப் போனாள்.

"அவருக்கா தோணும் போது பேசட்டும்.. அவர் மட்டும் வேலையைப் பார்த்துகிட்டு இருக்கார்..  உனக்கு மட்டும் என்ன எப்ப பார்த்தாலும் அவரோட நினைப்பு.. சும்மா இரு' என்று தன்னைத் தானே திட்டிக்கொள்வாள்

ஒருநாள் காத்திருப்புக்கு பின்பு அவளை அழைத்தான் மகிழன்..

"சொல்லுங்க மாமா'  என்று அவன் குரல் கேட்டதும் உருகியவள், அவன் மீதான கோபம் நினைப்பில் வர அமைதியானாள்.

மது என்ன அமைதியாகிட்ட

"என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்க மாமா என்றாள் கேலியாக..

"என்னடா? .."

“என்னோட பேசுறதுக்கு கூட உங்களுக்கு நேரம் இல்லையா மாமா.. நீங்க  ஒரு போனைக் காணோம்.."

"அப்போ மேடம் என்னைத் தேடிருக்கீங்க?" என்றவன் குரலில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது..

"நான் ஒன்னும் உங்களைத் தேடலை." அவள் வீம்புடன் கூற

"தேடலை?"

"ஆமா தேடலை."

"அப்போ போனை வெச்சுடவா?"

“என்ன மிரட்டுறீங்களா? எங்க போனை கட் பண்ணிப் பாருங்க..?" இவள் மிரட்ட

“ஏய் மது நீயா பேசுற?"

ஆமா நான் தான்'

"சத்தம் பலமா இருக்கு?!

"அப்புறம் எப்போதும் அமைதியா இருந்த நீங்கதான் என்னை ஏமத்துறீங்களே'

“ஏய் எல்லாரும் உன்னை அமைதியின் சிகரம்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க மது..." கிண்டலாக அவன் கூற,

"இல்ல நான் சண்டைக்காரி'

ஐயோ மது எனக்கு பயமா இருக்கே

"போங்க மாமா, அம்மாச்சி கூட நேத்து மட்டும் என்னோட ரெண்டு வாட்டி பேசிட்டாங்க.. நீங்க சுத்த வேஸ்ட் மாமா உங்களுக்கு லவ் பண்ணக்கூட தெரியல..

"ஹாஹா..

"போன் எடுத்ததுல இருந்து சண்டை தான் போடுற.. தெரியாம உன்கிட்ட மாட்டிகிட்டேனோ?" சிரிப்புடன் கூற, மதுவும் சிரித்துக் கொண்டே

"மாட்டுனது மாட்டுனது தான்.. தப்பிக்க முடியாது.."

"மது.. என்னால தினமும் போன் பண்ண முடியாதுடா.. நேரம் கிடைக்கும் போது நானே கூப்பிடுறேன்.."

இருவரும் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்..

இடையில் இரண்டு நாட்கள் திருச்சி வந்திருந்தாள் மது, ஆனாலும் மகிழனை அவளால் நேரில் சந்திக்க முடியவில்லை தோழிகளின் கேலி, கிண்டலுடன் கல்யாண ஷாப்பிங், ட்ரீட் என்று நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது..


*************

மதுவின் வாழ்வில் குழப்பத்தை கொண்டுவரப் போகும் அன்றைய பொழுது மதுவுக்கு வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவள், அதை பருகும் போது, தன்னுடைய செல்பேசியை எடுத்துப் பார்க்கத் துவங்கினாள்.

அவள் பேசியில் இணையத்தை இணைத்ததும், 'டிங்' என்ற ஒலியோடு புலன செய்தி ஒன்று எட்டிப் பார்க்க, திறந்து பார்த்தவள், புது எண்ணில் அனுப்பிருந்த செய்தியை படிக்க அதிர்ச்சியில் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

தாமரை மகளின் செய்கையில் துணுக்குற்று அவள் அருகில் வந்தார்.

மகளின் பார்வை அலைபேசியில் நிலைத்திருக்க, கண்களில் கோடாய் கண்ணீர், அதிர்ச்சிடைந்த மது பேச்சு மூச்சற்று நிற்க, அவளைப் பிடித்து உலுக்கினார் தாமரை

மது...மது ! என்னாச்சுடா? இங்கப்பாரு, அம்மாவைப் பாரு." போன்ல என்ன பார்த்த.. என்று அவள் தோளைத் தட்ட,

மதுவிற்கு அதன் பிறகுதான் சூழ்நிலை புரிந்தது. தான் அவசரப்பட்டு அம்மா முன்னிலையில்  அழுதிருக்கக் கூடாதோ என்று காலந் தாழ்ந்து யோசித்தவள் மனதில் பலவாறு சிந்தனை ஓடியது.

"என் பிரண்டுக்கு ரெம்பவும் முடியலம்மா சீரியஸா ஹாஸ்பிடலில் இருக்க..திக்கித் திணறி பொய் சொன்னாள்.

மெதுவாக கண்களை துடைத்து இயல்புக்கு வர முயன்ற மகளை பார்க்க தாமரைக்கும் கலக்கமாக இருந்தது. தன் நெருங்கிய தோழிக்கு முடியாமல் ஆனதில் மகள் நொருங்கிப் போயிருக்கிறாள் என்றுதான் அவர் நினைத்தார்.

எதையும் சிந்திக்கும் நிலையில் மது இல்லை. அவள் எண்ணமெல்லாம் ஹாஸ்பிடலில் சீரியசாக இருக்கும் வர்சினியிடமே இருந்தது. அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று மனம் இடைவிடாது பிரார்த்திக்க ஆரம்பித்தது.

 அறைக்குள் நுழைந்த மது ஆத்திரத்தில் தன் அலைபேசியை படுக்கையில் வீசி எறிந்தாள்.

தலையை இரு கைகளிலும் அழுந்தப் பற்றியவள், அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள். சொல்ல முடியா வலி இதயத்தை தாக்க, 'ஒற்றைச் செய்தி வாழ்வின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையை குலைக்க முடியுமா?' என மனம் வேதனை கொள்ள சற்று நேரம் விழிகளை அழுந்த மூடி அப்படியே அமர்ந்திருந்தாள்.

கன்னத்தில் சூடான உவர் நீர் வழிய, அப்போதே தான் அழுவதை உணர்ந்தவள், கண்ணீரை துடைத்து விட்டு, எழுந்தாள். உள்ளம் முழுதும் பொங்கி வழியும் எரிமலைக் குழம்பாய் தகிக்க வீசி எறிந்த அலைபேசியை தேடி எடுத்து மஹாவை அழைத்தாள்.

இவன் காலையில் அழைக்கவும், சிறிது இடைவெளி விட்டே மஹா அழைப்பை ஏற்றாள்.  அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றாளோ இல்லையோ, அவள் 'ஹாலோ' என்ற வார்த்தையை சொல்லக் கூட இடைவெளி கொடுக்காமல், 

"என்ன நடந்தது' என்று கோபமாக கேட்டவள் விபரங்களை மனதில் குறித்துக் கொண்டு அழைப்பை துண்டித்தாள்.

சட்டென்று  முடிவெடுத்து அவள் திருச்சி  புறப்பட, தாமரை தடுத்து பார்த்தார், அவள் பிடிவாதமாக இருக்க தானும் துணைக்கு வருவதாக கூறவும் வேண்டாம் என்று தடுத்து விட்டாள். இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் தாமரைக்கு மகளின் முடிவில் உடன்பாடு இல்லை. ஆனால் சந்திரன் மகளின் குரலிலேயே அவளின் தவிப்பை புரிந்துகொண்டார். அவர் அனுமதி தந்ததும் தாய் அமைதியாகி விட்டார்.

அவர்களுடைய காரில் மதுரை வந்தவள், அங்கிருந்து கார்த்திகாவின் காரில் ஏறிக்கொண்டு, தங்கள் காரை திருப்பி அனுப்பிவிட்டாள். கார்த்திகா மதுரை வந்தது. தங்கள் ட்ரைவரை தவிர்க்க மது செய்த ஏற்பாடு.

நேராக ஹாஸ்பிடல் வளாகத்திற்குள் நுழைந்தார்கள் மதுவும், கார்த்திகாவும். மஹாவிடம் எல்லா தகவல்களையும் கார்த்திகா வாங்கியிருந்தாள். தோழியாக மதுவுடன் கார்த்திகா நின்றாலும் இங்கே மது வருவதில் அவளுக்கும் உடன்பாடில்லை.

ஹாஸ்பிடல் ரிசப்ஷனில் விசாரித்தபோது இரண்டாம் தளத்தில் தனிப் பிரிவில் 12ஆம் எண் அறை என்றார்கள், லிப்ட்டைப் பிடித்து இருவரும் மேலே வர, அந்த அறையின் கதவோரம் இருந்த இருக்கையில் ஒரு வயதான மனிதர் தலையெல்லாம் கலைந்து பார்க்கப் பரிதாபமாக அமர்ந்திருந்தார். 

அதுவரை தைரியமாக வந்திருந்த மதுவுக்கு அதற்கு மேல் கால்கள் பின்னிக் கொண்டன. வர்சினியின் குடும்பத்தினரை இருவருக்கும் அறிமுகம் இல்லை, இனங்காணும் அளவிற்கு கூட ஆட்களைத் தெரியாது. இவர் தான் வர்சினியின் அப்பாவா? 

அவரையே பார்த்து நின்றாள் மது, தன் தந்தையை விட கொஞ்சம் வயதானவராகவே தெரிந்தார். தன் தந்தையின் இடத்தில் அவரைப் பார்க்க உள்ளுக்குள் வலித்தது.

மெதுவாக அவரை நெருங்கிய கார்த்திகா "இங்க வர்சினி? சட்டென்று நிமிர்ந்து இருவரையும் கலக்கத்துடன் பார்த்தார். அவர் கண்களில் வாழ்வையே தொலைத்த வெறுமை தெரிந்தது.

"நீங்க யாரும்மா' என்றவரின் கேள்விக்கான பதிலைச் சொல்லாமல்
"நீங்க வர்சினி அப்பாவா?' என்றாள் கார்த்திகா, மதுவோ எதுவும் பேசவேயில்லை.

"ம்ம்' என்றவர் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

"டாக்டர் என்னப்பா சொல்றாங்க?" என்று கேட்டாள் கார்த்திகா

"எல்லாத்தையும் வாஷ் பண்ணிட்டாங்கம்மா, சரியான நேரத்துக்கு கொண்டு வந்துட்டோம். இல்லைன்னா.... பேச்சை நிறுத்தியவர் கண்களில் வழிந்த கண்ணீர் அவர் வலியைச் சொல்லியது.

"கடவுள் புண்ணியத்துல அவளுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லாம்மா."  அவ அம்மாதான் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறா என்று அவர் பேசிக் கொண்டிருக்க, 

இன்னைக்கு காலையில் தான் தனி ரூமுக்கு மாத்தினங்க என்றவர் கதவை தட்டிவிட்டு அறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றார். வர்சினி சோர்வாக கட்டிலில் படுத்திருக்க, அவள் வயதை ஒத்த பெண்கள் இருவர் அருகில் இருந்தார்கள். தலைமுடியை எல்லாம் விரித்துப் போட்டு பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

"அந்த பையனுக்கு கல்யாணம்னு கேள்விப் பட்டதிலிருந்து இப்படித்தான் பைத்தியம் மாதிரி இருக்கா. நீங்களும் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கம்மா என்று சொன்ன பெரியவர் வெளியே போய்விட்டார், 

வர்சினி அருகில் போனாள் மது, கார்த்திகாவிற்கு படபடப்பு இன்னும் அதிகமானது. அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள் வர்சினி, எவ்வளவு முயன்றும் அவர்கள் யாரென்று அவளால் யூகிக்க கூட முடியவில்லை. இருவரையும் கேள்வியாக பார்த்தாள்.

வர்சினியின் படுக்கையில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட மது, அவள் கண்களை நேராக பார்த்தாள். 

"நான் மது, இது என்னோட பிரண்ட் கார்த்திகா, நான்தான் நீங்க விரும்பிய மகிழன் மாமாவை கட்டிக்க இருக்கும் பொண்ணு..... மது முடிக்க

சட்டென்று கையை இழுத்துக் கொண்டு பின்னால் நகர்ந்திருந்தாள் வர்சினி, கண்களில் அவ்வளவு அதிர்ச்சி. துணைக்கு இருந்த இரு பெண்களும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றார்கள்.

"ஏய் நீ எதுக்கு இங்க வந்த' என்று மதுவின் கையை பிடித்து இழுத்து கட்டிலை விட்டு இறக்கினாள் உடன் இருந்த ஒருபெண், நிலைமை கைமீறிப் போவது போல தோணவே கார்த்திகா கொஞ்சம் பயந்து போனாள் . 

"பார்தி' அவ கையை விடு என்றாள் வர்சினி, முறைத்துக் கொண்டு கையை விட்டவள் அவர்களையே பார்த்து நிற்க.

"எதுக்கு இங்க வந்த? நான் சாகிறத பார்க்கவா? சீக்கிரம் இங்க இருந்து ஓடிப்போயிரு எங்க அண்ணன் வந்தான் ஒரு விரலை நீட்டி மதுவை எச்சரித்தாள்.   அவரு மேல எங்க வீட்டில் எல்லோரும் கோபமா இருக்காங்க. நீ அவங்க கண்ணுல படாம சீக்கிரம் கிளம்பு" என்றாள் கேலியாக

நீ பண்ணின முட்டாள்த்தனத்துக்கு என் மாமா என்ன செய்வார்

"யாரு நான் முட்டாளா? நான் முட்டாளா? சத்தமாக கத்தினாள்.

ஐயோ இந்தப் பெண் நிலமை இப்படி இருக்க மது எதற்கு இங்கு வந்திருக்கிறாள். தலை வேதனையாக இருந்தது கார்த்திகாவிற்கு

அடுத்த நிமிடம் அமிலமாக வந்தது வர்சினியின் வார்த்தைகள்

உன் மாமாவா? பார்க்கலாம் "நிச்சயமா உங்க கல்யாணம் நடக்காது! நடக்கவும் விட மாட்டேன்." என்றாள் வர்சினி அங்காரமாக.. மது விழிகளை இறுக மூடி அந்த வார்த்தைகளை தங்கிக்கொண்டாள்.. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

" உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சுன்னா நீ தாலி அறுத்திட்டு தான் நிற்ப என்றாள் கூட இருந்த பெண்" உடன் இருந்த இரு பெண்களும் மாறி மாறி கேவலமாக பேச காதை பொத்திக்கொண்ட மது எதுவும் பேசாமல் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். 
.
அவள் அருகே வந்த கார்த்திகா, 
"மது... மது...!" மென்மையாக அவள் கன்னம் தட்ட, எந்த பதிலும் இல்லை. அப்படியே உறைந்தபடி அமர்ந்திருந்தாள் மது. அவள் முகத்தை கைகளில் ஏந்தியவள்,

"மது, இங்கப்பாரு , ஏதாவது பேசுடி." அவளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவள் தோள்களைப் பிடித்து அவள் உலுக்க, அப்போது அசைந்தவள் அவள் முகத்தைப் பார்த்தாள்.

"எதுக்குடி நீ இங்கெல்லாம் வந்த. இது உனக்கு தேவையா?"அவன் கேள்வி அவள் மூளையை சென்றடைந்த மாதிரி தெரியவில்லை. அவள் கை பிடித்து எழுப்பி வெளியே அழைத்துச் சென்றாள் கார்த்திகா

பின்தொடர்ந்த இரு பெண்களும் லிப்ட் வரை திட்டிக்கொண்டே  வந்தார்கள். 

எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்று அவளுக்கே தெரியாது. மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பெருக கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள் மது

கார்த்திகா அவள் எதிரே அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். மதுவின் போன் திரும்பத் திரும்ப இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. கார்த்திகா எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்தாள்.

மனதின் காயம் சிறிது ஆறும் வரை அழுதவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

"அழுது முடிச்சாச்சா மது?" தோழியின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை மது.

கார்த்தி, அவங்க என்னைப் பாத்து எப்படி சத்தம் போட்டாங்க பாத்தியா?. நான் என்னடி பண்ணினேன், போறவங்க, வர்றவங்க எல்லாரும் திரும்பி திரும்பிப் பாத்தாங்க" உடம்பெல்லாம் கூசுதுடி.. மது உடம்பில் அத்தனை நடுக்கம்.. தோழியை அணைத்து கொண்டாள் கார்த்திகா. வர்சினியை கொன்று விடலாம் போல் ஆத்திரம் வந்தது அவளுக்கு.

"அவங்க சத்தம் போட்டது கூடப் பரவாயில்லை. என்னைப் பாத்து, நீ தாலி கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழ மாட்டாடி? அந்தத்... தாலி... உனக்கு... நி... நிலைக்கா....." உதடு பிதுங்க கேவிக் கேவி அவள் வெடித்தழுத போது, செய்வதறியாது மலைத்து நின்றாள் கார்த்திகா. கண்கள் குளமாக  வார்த்தைக்கு தவித்த தோழியை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. அவங்க சொன்னா நடந்திடுமா? விட்டுத் தள்ளு மது." நியாயம்னு ஒண்ணு இருக்கு, "அவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும் கடவுள் இருக்கிறார். இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுது கரையுற?"

இன்னும் என்ன ஆகணும் கார்த்தி? என் மாமாவால் ஒரு பெண்ணு சாக கிடக்கிறாள்.” சொல்லும் போதே குரல் கம்மியது.

“உனக்கு பைத்தியமா மது? அவள் செய்த முட்டாள் தனத்திற்கு உன் மாமா என்ன செய்வார்?" 

கார்த்திகா சத்தமாக பேச. மது மௌனமாகி விட்டாள் 

"முதல்ல எழும்பி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா. சாப்பிடலாம். எனக்கு பசிக்குது

அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்கவும் கார்த்திகாவிற்கு கோபம் வந்தது.

"மது!" என்றாள் அதட்டலாக.

சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் எழுந்து உடையை மாற்றிக் கொண்டாள். கார்த்திகாவிற்காகப் பெயருக்கு உணவைக் கொறித்தாள்.
எவ்வளவு முயன்றும் அவர்கள் பேசியதில் இருந்து மதுவால் வெளியே வர முடியவில்லை. சோற்றை பிசைந்து கொண்டே இருந்தாள்.

அவளுக்கு உண்ணும் எண்ணம் இருப்பது போல் தோன்றவில்லை கார்த்திகாவிற்கு, அவள் கையில் இருந்த தட்டை வாங்கியவள் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட, அழுதுகொண்டே உண்டு முடித்தவள், அவள் மடியிலேயே தலை வைத்து உறங்கிப் போனாள். அவள் தலையை தடவிக் கொடுத்தபடி,  அவளையே பார்த்திருந்தாள் கார்த்திகா.


***************


திருவிழா நிகழ்ந்து முடிந்த கோவிலின்
வெறுமை உணர்ந்தாள் மது, கடந்த ஆறு மாதங்கள் இருந்த மகிழ்ச்சி தொலைந்து போயிருக்க, வர்சினியை பார்த்து வந்ததில் இருந்து படுத்தே இருந்தாள். 

காலையிலேயே மஹா வந்திருந்தாள். இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை மது.

"மது.." பேச ஆரம்பித்துவிட்டு லேசாகத் தயங்கினாள் கார்த்திகா

"என்ன? என்பது போல்  கார்த்திகாவை பார்த்தாள்

"நான் ஒன்னு கேட்பேன், நீ தப்பா எடுத்துக்கக் கூடாது."

"மது அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருந்தாள். 

"நீ மகி அண்ணாவை சந்தேக படுறியா?" பட்டென்று கேட்டாள் கார்த்திகா. மஹாவின் முகத்திலும் கவலை தெரிந்தது. மதுவின் முகத்தையே இருவரும் பார்த்தபடி இருந்தார்கள். 

விரக்தியாக  சிரித்தாள் மது நானும் என் மாமாவும் வேற வேற இல்லடி. அவரை சந்தேகப்பட...

சிறிது நேரம் எதுவுமே பேசமால் இருந்தவள் கண்கள் சட்டென்று கண்ணீரை கொட்டியது, 

"அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா? என் மாமாவை.. மேலே பேச முடியாமல் தவித்தாள். செய்யாத தப்புக்கு என் மாமா வாழ்க்கை முழுவதும் தண்டனை அனுபவிக்கனும், அதுக்கு அவளையே அவர் கட்டிகலாம்.

"என்னடி உளறல் இது?." பைத்தியமா உனக்கு. அவ செத்த சாகட்டும் விடு, நீ லூசு மாதிரி பேசாத.

“உன்னளவுக்கு என்னால இதையெல்லாம் சட்டுன்னு ஏத்துக்க முடியலை கார்த்தி." எனக்கு என் மாமா நல்ல இருக்கணும், அவர் மேல எந்த பழியும் வந்திரக் கூடாது. 

"மது சித்தப்பா மனசு முழுக்க நீதான் இருக்கே. தேவை இல்லாமல் ஏதாவது பேசி வாழ்க்கையை குழப்பிக்காத என்றாள் மஹா.

"மது! நீ உன் மாமாவோட முதல்ல பேசிடு." என்றாள் கார்த்திகா

“வேணாம் கார்த்தி."

"பாவம்டி அவங்க என்ன பண்ணினாங்க? யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் யாரையோ தண்டிக்க நினைக்கிற?"

“ம்ப்ச்... விடு கார்த்தி." இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மது போன் பாடியது. மகிழன் தான் அழைத்திருந்தான.

'தயங்கி படியே போனைக் காதுக்குக் கொடுத்தாள் மது.

"மது..." கோபமாக வந்தது அவன் குரல்.

"மாமா?" அவன் குரலில் திகைத்துப் போனாள் மது.

"கீழ வா மது'

"என்ன சொல்றீங்க? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?"

"உங்க வீட்டுக்கு முன்னாடி தான்... கீழே இறங்கி வா மது அவன் சொல்லி முடிக்கவும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மது. 

மதுவின் மனநிலையை மகிழனுக்கு செய்தியாக தெரியப்படுத்தி இருந்தாள் மஹா.

மது கீழே வர. அவளை உள்ளே வாங்கிக் கொண்டு பறந்து கார்

***********

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் மகிழன். மாமனின் முகத்தைப் பார்க்க அவளுக்கு சற்று பயமாக இருந்தது. இன்னும் அவன் மதுவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோபத்தில் இருக்கிறான்.

அவளாக எந்த பேச்சையும் துவக்கவில்லை. அவனாகவும் பேசவில்லை.

விராலிமலை தாண்டி மதுரை நோக்கி போய்க்கொண்டிருந்தது கார்.

"மாமா..." மெலிதாக அவனை அழைக்க, அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவனது பார்வை நேராக சாலையில் இருந்தது. முன்பானால் எதாவது பேசி அவனை பேச வைத்து விடுவாள். ஆனால் இப்போது தயக்கமாக இருந்தது.

"ஏன் இப்படி இருக்கீங்க? என்றவளின் குரல் திக்கியது. என்னவானாலும் சொல்லுங்க மாமா." நீங்க எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரி" என்று கூறுவதற்குள் லட்சம் தடவை தவித்துப் போனாள்.

அவளை திரும்பி ஆழ்ந்து பார்த்தான்..

"அப்படி என்ன முடிவெடுப்பேன்னு நினைக்கறீங்க மேடம்?” உணர்வுகளை சற்றும் காட்டிக் கொள்ளாமல் அவன் கேட்க,

"பாவம் அவங்க. நீங்க என்னை...” என்று திக்கியவள், அதற்கும் மேல் தொடர முடியாமல் தவித்து நிறுத்தினாள்.

"ம்ம்ம் சொல்லு மது..."

“நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன்..." என்றவள் உணர்வுகளை துடைத்துவிட்டு கூறினாலும், அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் ஆயிரம் பாகங்களாக உடைந்து கொண்டிருந்தாள்.

மகிழன் காரை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தி இருந்தான். அவனால் அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை இயக்க முடியவில்லை

"அதுதான் நான் என்ன முடிவெடுக்கணும்ன்னு நீங்க சொல்லுங்க மேடம்..." என்றவனின் குரலில் அத்தனை  கோபம்! அதை கேட்டதில் மதுவுக்கு பொறுமை பறந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் உடைத்துக் கொண்டு வெளியேறி விடும் போல தோன்றியது.

“நான் என்ன சொல்ல மாமா? நீங்க என்னவோ பண்ணுங்க... என்னை விடுங்க..." என்றவள், பொங்கிய கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதாள், அவளது கண்ணீர் அவனையும் காயப்படுத்தியது!

"நான் என்ன பண்ணட்டும் மது?" அவன் அவளைக் கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது பார்வையில் உயிர் வலி தெரிந்தது

“போ மாமா... என் கிட்ட வராத... இன்னொரு தடவை என்ன பண்ணட்டும்ன்னு கேட்ட, கொலை விழும்..." கொதித்துக் கொட்டினாள்.

அவனது முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது!

"சரி வா போகலாம்." என்று கூறியவனை கோபமாக பார்த்தாள். 

"வர்சினியை பார்க்க போகணும்." என்றதும் எழுந்து நின்றவள்,

"நிஜமா கொலை விழுந்துரும். போறதுன்னா போய் தொலை.

"ஏய் நீ தான் தியாகியாச்சே! என்னை தூக்கி கொடுத்துடலாம்ன்னு முடிவுக்கு வந்தவளாச்சே. அப்புறம் ஏன் உனக்குக் கோபம் வருது?" என்று கேட்க,

"அதுக்காக உன்னை பிடிச்சு வெச்சுக்க போட்டி போட சொல்றியா?" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உஷ்ணம்.

"அப்படீன்னா என்னை விட்டுக் கொடுத்துடுவ?" கேலியாக அவன் கேட்க,

"உன்னால ஒரு உயிர் போச்சுன்னு யாராவது சொன்ன அதை என்னால தாங்க முடியாது மாமா..." என்றவள் வெடித்தாள்.

"என் மேல உனக்கு கொஞ்சம் கூட பொசெசிவ்னஸ் இல்லையா மது?" என்றவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.

"சண்டை போட சொல்றியா?" கண்ணீர் மளுக்கென்று எட்டிப் பார்த்தது. உனக்காக ஒருத்தி சாக துணிந்து இருக்க அவ கூட எப்படி மாமா நான் சண்ட போட, உன்மேல் அன்பு வைக்கும் யாரையும் என்னால் வெறுக்க முடியாது.

“அவளுக்கு என்மேல் இருப்பது அன்பு இல்ல மது. காதலித்த மனிதனை தண்டிக்க துடிக்கிறதும், காயப்படுத்த நினைக்கிறதும் உண்மையான காதல் இல்லை மது. நான் தூங்கி மூன்று நாட்கள் ஆச்சு. முடியல மது கேட்டவளுக்கு அவளையுமறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மெளனமாக தலை குனிந்து கொண்டாள், ஆனாலும் கண்ணீர் நின்றபாடில்லை.

"எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை விட்டுக் கொடுப்பேன்னு சொல்ற?" என்றவனின் முகம் அவ்வளவு சிவந்திருந்தது.

அவள் எதுவும் பேசவில்லை. கண்களை துடைத்துக் கொண்டே இருந்தாள். அவள் தோளைத் தொட்டான்.

அவன் வயிற்றில் முகம் புதைத்து
அவனை இறுகக் கட்டிக்கொண்டு அழுதாள். மகிழன் மதுவை அணைத்தவாறு ஒன்றும் கூறாமல் நிற்க, சில நிமிடங்களில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"அழாதேன்னு சொல்ல மாட்டியா மாமா?" எனக் கேட்டாள்.

"பேசுறதெல்லாம் பேசிட்டு ஒன்னுமே தெரியாத பச்ச புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்கிற பாரு. உன் மேல பயங்கர கோபமாதான் இருந்தேன். இப்படி அழறத பார்த்தா மனசு கேட்க மாட்டேங்குது. அழுது என் சட்டையை நனைக்காம எழுந்திரு முதல்ல" என்றான்.

"என்னை லவ் பண்றேன்னு சொன்னதெல்லாம் பொய்யா மது?"

"ஏன் மாமா என்னை கொல்லுற?"

"அப்புறம் எப்படிடி விட்டுக் கொடுப்ப?"

"நான் பார்க்கறது உனக்காக மட்டும் தான் மாமா" உன்னை யாராவது தப்பா பேசினா என்னால தாங்க முடியாது மாமா!

"நான் பார்க்கறது நம்ம ரெண்டு பேருக்காகவும் தான்டி." என்றவன், "நாம சண்டை போடலாம் தப்பில்ல, அடிச்சுக்கலாம், கொஞ்சிக்கலாம் என்ன வேண்ணா பண்ணலாம்... ஆனா இந்த மாதிரி முட்டாள்தனமா பேசிட்டு இருக்காத..."

அதுவரை குழம்பிப் போயிருந்த அவளது முகம் லேசாக தெளிந்தது. வர்சினிக்காக அவளால் பரிதாபப் பட முடியும். ஆனால் இவனை விட்டுக் கொடுக்கவெல்லாம் முடியாது என்று முழுமையாக மனம் உணர்ந்தது.

மகிழனை நிமிர்ந்து பார்த்தவள், "சாரி மாமா..." என்றாள் சிறு குரலில்!

அவளைப் பார்த்து முறைத்தவன், மதுவின் முகம் வெவ்வேறு உணர்வுகளை காட்டியது.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் காருக்கு போக, அவன் பின்னால் ஓடினாள் மது. அவனது வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. துரத்திப் பிடிக்க வேண்டி இருந்தது.

*********

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3