மது மகிழன் - 7

மதுவை அழைத்துச் செல்ல தாமரையும், சந்திரனும் நாளை திருச்சி வருகிறார்கள். ஆனால் இந்த ஆடி அழைப்பை மகிழன் விரும்பவில்லை, 

"அம்மா மதுவை அனுப்பனுமா" என்றான் தாயிடம்..

"சும்மா இரு மகி. எல்லத்திலும் விளையாட்டு கூடாது, உங்க பெரியாம்மாவுக்கு யாரு பதில் சொல்றது? நாளைக்கு அவங்க எல்லாம் வந்ததும் நாம அனுப்பித்தான் ஆகணும்"

"நானும் கூட போகலாமா?

பார்வதி முறைத்தார்...

"அப்போ ஒரு வாரம் கழிச்சுப் போகலாமா." 

சும்மா இருக்க விடுடா என்னப் படுத்தாத எதுன்னாலும் உன் அக்காவிடம் கேட்டுக்க சொன்னவர் சமையல் அறைக்குள் நகர்ந்து விட்டார்.

மறுநாள் காலையில் சந்திரனும், தாமரையும் வந்துவிட்டார்கள்.
மகிழன் பேக்டரிக்கும் போகாமல் பள்ளி மாணவனை போல் காரணம் சொல்லிக்கொண்டே அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, தாய் அவனைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார். எப்போதும் காலையில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருப்பவன். இன்று சம்மந்தமே இல்லாமல் மேலேயும் கீழேயும் நடக்க.

"மகி கால் வலிக்க போகுது ஒரு இடத்தில் உட்கார் என்றார்.

"அம்மா' என்றான் கோபமாக.

 "போகாதேன்னு சொல்லலாம் தானே இந்த மாமாவுக்கு என்னை பிரியறதுல கொஞ்சமும் வருத்தமே இல்லை?" மனதிற்குள் குறைப்பட்டுக் கொண்டே,  பெற்றோருடன் புறப்படத் தயாரானாள் மது

மது ஏதாவது சொல்வாள் என்பது போல மகிழன் அவளைப் பார்க்க, அவளோ அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

"தாய் வீட்டுக்கு போற சந்தோசத்தில்  கண்டுக்க மாட்டேங்கறா பாரேன்...” மகிழன் தனக்குள் சலித்துக் கொண்டவன், 

"மது.. ஒருநிமிஷம் மேலே வா..." என்று அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான்.

அவளை தழுவிக் கொண்டவன் சிறிது நேரம் அமைதியாகவே நின்று, பின் அவளது கழுத்து வளைவு, கன்னம், நெற்றி என்று இதழ்களைப் பதித்துக் கொண்டே வந்தவன், “உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்? நீ இல்லாம இந்த வீட்டுல எப்படி இருக்கறது... இந்த ரூம் கூட என்னக்கு வெறுப்பா இருக்குமே... நீ இல்லாம தனியா இருக்கறது கொடுமை " வெளியில் அதை சொல்லாமல், மனதினில் மட்டுமே கவலையுடன் நினைத்துக் கொண்டு நின்றான்.

"நல்லா சாப்பிடு மது... நான் தினமும் போன் பன்றேன்.."

"அய்யோ லூசு மாமா என்னைவிட்டு உங்களால தனியா இருக்க முடியுமான்னு யோசிக்கத் தோணலையா? போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.." மது மனதில் மறுகிக் கொண்டே, நின்றிருந்தாள் மது

என்னடா மது.. என்னாச்சு?" மகிழன் கேட்க, தலையை மட்டும் அசைத்தவள், அப்படியே நிற்க,

"அம்மா வீட்டுக்குப் போய் ஜாலியா இருக்கப் போற..." அவன் கிண்டலாகச் சொல்லவும், 

"ஹ்ம்ம்... இனிமே நான் இருக்கேன்னு ஓடி ஓடி வர வேண்டாம். லேட்டா வந்தாலும் உங்களுக்கு ஒண்ணும் இல்ல... பேக்டரியை நல்லா பார்த்துக்கோங்க.” 

“அதை நான் பார்த்துக்கறேன்... நீ உடம்பைப் பார்த்துக்கோ.." 

அம்மாவின் இழுப்புக்கு அவர் பின்னோடு போனவள் மகிழனை திரும்பிப் பார்த்தாள். 

பொம்மையைப் பறிகொடுத்த குழந்தையைப் போல  மனைவியையே பார்த்திருந்தான் மகிழன்.
அவனிடம் மௌனமாய் தலையாட்டி விடைபெற்றவள் திரும்பித் திரும்பி மகிழனை பார்த்துக்கொண்டே சென்றாள், அவளின் அந்த பிரத்தியேக பார்வைகளை படம்பிடித்து தன் இதயத்தின் நான்கு அறைகளிலும் மாட்டிக்கொண்டான்..

காரில் ஏறும் கடைசி நொடிவரை போகவேண்டாம் என்று சொல்லிவிட மாட்டானா? என்னை பிரிந்து இந்த மாமனால் இருக்க முடியுமா? என்று மதுவின் மனது தவித்தது. பிரிந்து போகும் ஏக்கத்தில் மகிழன் அணைப்பையும், முத்தத்தையும் மதுவின் அனைத்து செல்களும் கேட்டது, மறுக்க முடியாத அந்த தவிப்பு அவளுக்கு  மட்டுமே தெரிந்த வலி.

************

தன் பெற்றோர்களுடன் பிறந்த வீட்டிற்கு வந்த மது  அவள் அறைக்குள் வந்தாள் அவளுடைய அறையே புதிதாக இருந்தது, மூன்று மாதத்தில் தான் வளர்ந்த தன் அறையே அந்நியமாக தெரியும் அளவுக்கு கணவன் மேல் வைத்திருந்த அன்பும் காதலும் அவளை மாற்றியிருந்தது, 

அறைக்குள் வந்ததும்.. என்னவோ இன்றுதான் தன்னை புதிதாய்ப் பார்ப்பதுபோல் கண்ணாடியில் பார்த்திருந்தாள். அரைமணிநேரம் கடந்து.. ஆசையாக மகிழனை அலைபேசியில் அழைத்தாள்.

மகிழன் அழைப்பை ஏற்க.. 

'மாமா..." என்றாள்.

'சொல்லு டா..?" என்றான்

'ம்ம்.. எனக்கு உங்களை 
பார்க்கனும் போல இருக்கு.."

'ஏய் மது.. நான் ஆபீஸ்ல இருக்கேன்..

"அதெல்லாம் தெரியாது எனக்கு இப்பவே உங்களை பார்க்கணும்..

 "ஏண்டி என்னை இப்படிப் படுத்தற...?
'சரி.. வீடியோ கால்ல வரியா..?"

'ம்ம்.." என்றவள் கனெக்ட் செய்தாள். அவன் முகத்தைப் பார்த்ததுமே அழுகை வந்தது மதுக்கு.

'ஏய் எதுக்கு அழற..?" என்றான் கண்கள் மின்ன.. கண்களில் நீர் வந்தாலும்.. சிரித்துக்கொண்டே 'நீங்க ஏன் மாமா என்ன விரட்டி விட்டீங்க?" 

"நானா?'

"ஆமா நீங்க தான்' 

"அழகு ராட்சசி என்னை ஏண்டி இப்படிக் கொல்ற..

அப்படித்தான் கொல்வேன்..?" என்றாள் செல்லமாக.

‘அந்தபக்கம் பதில் இல்லாமல் போக.. 'ஹலோ.. மாமா.. மாமா.." என்றழைத்து தன் அலைபேசியை ஆராய, அவன் அழைப்பை துண்டித்து இருந்தான்.. அழுகை முட்டிக்கொண்டு வந்தது மதுவுக்கு.

அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள்...

மகள் வந்தது சந்திரனுக்கும், தாமரைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
நீண்ட நாள்கள் கழித்து வந்திருக்கும் தங்கள் மகளை நல்லபடியா கவனிச்சுக்கணும். அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து தரணும் என்று தன் மனைவிக்கு கட்டளை இட்ட சந்திரன், ஆடையை மாற்றிக் கொண்டு, தன் மகளுக்கு பிடித்ததை வங்கி வர கடைத்தெருவுக்கு புறப்பட்டார்.

தாமரை வீட்டை எல்லாம் ஒரு முறை பெருக்கி ஒழுங்கு செய்து வைத்து விட்டு, மகளைக் காண மாடியேறி அவள் அறைக்குள் வந்தார்.... உள்ளே தன் மகளின் கோலத்தை கண்டதும் அதிர்ந்தார்....

கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்திருக்க,
கண்களில் இன்னும் இரண்டு துளி
கண்ணீர் தேங்கி நின்றது...அதை கண்ட தாமரைக்கு உள்ளுக்குள் பிசைந்தது...

"என்னாச்சு இந்த பொண்ணுக்கு? எப்பவும் பட்டாம் பூச்சியாக பறந்து மலர்ந்து சிரிப்பவள் இப்படி சுருண்டு படுத்து விட்டாளே.. அதோடு அழுகை வேறு... என்னாச்சு? “ என்று அவசரமாக யோசித்தவருக்கு அப்பொழுதுதான் புரிந்தது....

தன் தம்பிக்கும், பொண்ணுக்குமான நெருக்கம்... இந்த சிறு பிரிவைக் கூட மகளால் தங்க முடியவில்லை என்றால் அவர்கள் இருவரும் எப்படி பட்ட மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும்.

"மதுக்குட்டி...." என்று அழைத்தவாறு அவள் அருகில் சென்றார்...

தன் அன்னையின் குரலை கேட்டதும், அவசரமாக தன் கண்ணை துடைத்து கொண்டவள், மெதுவாக எழுந்து அமர்ந்தாள் வரவழைத்த புன்னகையுடன் ....

"என்னாச்சுடா? ஏன் வந்ததும் படுத்துட்ட?" என்றவாறு தன்  மறைத்துக் கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தார்.....

"ஹ்ம்ம்ம் கொஞ்சம் டயர்டா இருந்தது மா.. .அதோடு என் பெட் ஐ பார்த்ததும் அப்படியே படுத்துக்கணும் போல இருநந்தது.. அதான்... " என்று சமாளித்தாள்....

"மா... உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா? “ என்றாள் குழந்தையாக

"என்னடி இது? பெர்மிசன் எல்லாம் கேட்டுகிட்டிருக்க? என்று மகளை அணைத்து மடியில் போட்டுகொண்டார்
அன்னையின் மடியில் தலை வைத்த மது அவர் இடுப்பை கட்டி கொண்டாள்...

எவ்வளவுதான் பிள்ளைகள் வளர்ந்தாலும் அன்னை மடி தரும் சுகமே தனிதான்...மது அந்த சுகத்தை கண் மூடி அனுபவிக்க, தாமரையும் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்து மறு கையால் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்....அந்தச் சுகத்தில் கண்ணை மூடியவள் அப்படியே உறங்கிப் போனாள்....

தாமரை

" இவள் மனக்குறை எதுவானாலும் சீக்கிரம் தீர்த்து வச்சுடு முருகா என் பொண்ணு எப்பவும் போல சிரிச்சுகிட்டே  இருக்கணும்..." என்று தன் விருப்ப தெய்வமான திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டே, ஒரு தலையணையை எடுத்து அவள் தலையை தூக்கி வைத்து அவளை நேராக படுக்க வைத்து அறை கதவை மெல்ல சாத்திவிட்டு வெளி வந்தார்....

சந்திரன் திரும்பி வந்திருக்க, அவரிடம் மது உறங்குவதாக சொல்லி விட்டு சமையலை ஆரம்பித்தார்...

**************

அவளுக்கே இந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இரண்டு நாட்களில் இத்தனை மாற்றம் வந்து விடுமா? அவரை பார்க்காமல் என்னால் இனிமேல் இருக்கவே முடியாதா
தினம் போனில் பேசிக்கொண்டு  இருந்தாலும் பிரிவு மதுவை வதைத்தது. 

மகிழனுக்கும் முதலிரண்டு நாட்கள் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் நாட்கள் ஒவ்வொன்றாக கழிய, அவனது நினைவெல்லாம் அவளாகினாள். இத்தனை தவிப்பதற்கு பேசாமல் அனுப்பாமல் இருந்திருக்கலாமே என்று கூட தோன்றியது. ஆனால் எப்படி அனுப்பாமல் விட முடியும்?

நாள் தவறாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளோடு பேசி விடுவான் மகிழன். இன்று என்ன நடந்தது என்று அவனாலும் கேட்காமல் இருக்க முடியாது, அவளாலும் சொல்லாமல் இருக்க முடியாது.

அவள் பிரிவை உணரக் கூடாது என்று என்ன வேலையிருந்தாலும் அழைத்து விடுவான். அவன் அழைக்கவில்லை என்றால், மது அழைத்து விடுவாள். வேலை இருக்கும் பட்சத்தில் கூட இரண்டு நிமிடமாவது அவன் பேசாமல் வைத்ததில்லை.

மது! இது உனக்கே ஓவராக தெரியலையா? வருஷக் கணக்குல எங்களையெல்லாம் விட்டுட்டு ஹாஸ்டல்ல போய் உக்கார்ந்து படிச்சியே? அப்பல்லாம் இப்படியொரு வார்த்தை இந்த அம்மாவைப் பார்த்துச் சொல்லி இருக்கியா?'  

வந்ததில் இருந்து மது ஒழுங்காக உண்பது இல்லை. முன்பைவிட மெலிந்தும்விட்டாள், 
தாமரைக்கு மதுவை சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது. ஆரம்பத்தில் செல்லம் கொஞ்சி கொஞ்சி ஊட்டிவிட கொஞ்சம் சாப்பிட்டவள். இப்போது அதுவும் இல்லை, கோபத்தில் தாமரை இன்று அதிகமாகவே திட்டிவிட்டார்,  உடனே அவனுக்கு அழைத்தவள்

"என்னை ஏன் மாமா உங்க அக்கா கூட அனுப்புனீங்க?" என்று எடுத்தவுடன் கேட்க, மறுபுறம் அவனுக்கு புரியவே இல்லை.

"ஏய்  மது? என்னாச்சு?" என்று சற்று பதட்டத்தோடு கேட்க,

"எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க..." என்று குழந்தையாய் சிணுங்கினாள்.

“அப்படி என்ன உங்கம்மா திட்டினாங்க?" புன்னகையோடு அவன் கேட்க,

"எங்கம்மான்னு சொல்லாதீங்க... உங்கக்கா..." ரோஷத்தோடு அவள் கூறியதை கேட்டவனுக்கு இன்னுமே சிரிப்பாக இருந்தது.

"சரி..." என்று ஒத்துக்கொண்டவன், புன்னகையோடு, "எங்கக்கா என்ன சொன்னாங்க?" என்று கேட்க,

அவனது கேலியான கேள்வி அவளை இன்னமும் எரிச்சல்படுத்த, ""மாமா..." பல்லைக் கடித்தாள் மது.

"ஓகே ஓகே... என்னாச்சுடா? அதை சொல்லு..." என்று சிரிப்பை குறைத்துக் கொண்டு அவன் கேட்க,

"நான் தத்தியாம்.. எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனாம், உங்க லைஃப்பையும் கெடுக்கறேனாம்...நான் என்ன மாமா பண்ணேன்? சாப்பிட முடியல அது ஒரு குற்றமா?

"ஒழுங்க சாப்பிடலனா எப்படி மதுக்குட்டி இந்த மாமனை சமாளிப்ப?" அவனது குரலில் குறும்பு மீண்டிருந்தது.

"மாமா.." சிணுங்கினாள் மது. அந்த குரல் அவனை வசியப்படுத்தியது! என்னன்னவோ செய்ய தோன்றியது.

"சரிடா... எங்கக்காவ கூப்பிடு... என் பொண்டாட்டிய எதுக்கு திட்டினான்னு கேக்கறேன்..."

"இதோ கூப்பிடறேன்... நல்லா திட்டி விடுங்க... நீங்க திட்ற திட்டுல அவங்க இனிமேல் என்னை சாப்பிட  கூப்பிட கூடாதாக்கும்... சொல்லிட்டேன்..."

ரொம்பவும் தீவிரமான குரலில் அவள் கூற, மகிழனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அப்போதிருந்த உல்லாசமான மனநிலை அவனை என்னவோ செய்தது!

“அம்மான்னு கூட பாக்காம நீ இப்படி எல்லாம் படுத்தக் கூடாது டா..." என்று அவன் சிரிக்க,

"அவங்க மட்டும் என்னை பொண்ணா நினைக்காறாங்களா? அவங்க தம்பி லைஃப்பை நான் என்னவோ கெடுத்துட்டு இருக்க மாதிரி பேசறாங்க..."

சீரியஸான தொனியிலேயே அவள் கூற, அடக்கமாட்டாமல் அவன் சிரித்தான்.

"சரி சரி... எங்கக்காவ கூப்பிடு... இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்..." அவனும் அவளைப் போலவே கூற, செல்பேசியை எடுத்துக் கொண்டு தங் தங்கென்று நடந்து வந்தவள், தாமரையிடம் பேசியை நீட்டப் போனவள், அவசரமாக ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு,

"உன் தம்பிக்கிட்ட பேசு..." விறைப்பாக கூறினாள்.

"போட்டுக் கொடுத்துட்டியா?" என்றபடியே பேசியை வாங்கிய தாமரை, ஸ்பீக்கரை ஆஃப் செய்யப் போக,

"ஸ்பீக்கர்ல பேசு... மாமா உன்னை திட்டறதை நானும் கேக்கணும்..." என்று தாமரையின் கையை தட்டி விட்டாள் மது.

"உன்னோட ரவுசு பெருசா இருக்குடி..." என்று நொடித்த தாமரை, பேசியை காதுக்கு கொடுத்து,

"சொல்லு மகி..." என்று கூற,

"என் பொண்டாட்டிய என்னக்கா சொன்ன?" என்று எடுத்ததும் அவன் கேட்ட கேள்வியில் உண்மையில் இனிமையாக அதிர்ந்தார் தாமரை.

"உன் பொண்டாட்டிய நான் என்ன சொல்லப் போறேன்?" என்று மெல்லிய சிரிப்போடு அவர் கேட்க,

"அப்புறம் ஏன் அப்படி அழறா?"

"ஏன்டா தம்பி... அவ அழுகறதுக்கு நான் என்னடா பண்ண முடியும்?"

"அழற மாதிரி என்னக்க சொன்ன?"

"என் பொண்ணை நான் எதுவுமே சொல்லக் கூடாதா?" பெற்ற பெண்ணை கணவனோடு இணக்கமாக இரு என்று சொன்னது ஒரு குற்றமா? ஆனால் அதுவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. இருவருக்கும் எல்லாம் சரியானால் போதுமே!.

"உன் பொண்ணை என்ன வேண்ணா சொல்லிக்க, ஆனா என் பொண்டாட்டிய எல்லாம் திட்டக் கூடாது. இதுக்காகத்தான் அவளை உன்கூட அனுப்பி வைத்தேனா?" என்று லேசான சிரிப்போடு சொல்ல,

"மாமா... சிரிக்காம திட்டுங்க..." அருகில் அமர்ந்து கொண்டு பேசியில் தன் காதையும் வைத்திருந்த மது குரல் கொடுக்க.

"வந்து இருக்கு கச்சேரி... எப்படி என் பொண்டாட்டிய திட்டுவன்னு கேக்கறேன் மதுக்குட்டி... டோன்ட் வொர்ரி... உன் நாத்தனாரை வீட்டை விட்டு தொரத்தறதுதான் அடுத்த டார்கெட்... ஓகே வா?" என்றான் சிரித்தபடி!

"ஹேய்யியியி..." என்று எழுந்து நின்று குத்தாட்டம் போட்டவளை பார்த்து தலையிலடித்துக் கொண்ட தாமரை,

"எப்பா சாமி... நல்ல தம்பி... அவனுக்கு இப்படியொரு பொண்டாட்டி... எப்படியோ போங்க..." என்று அவனிடம் சலித்துக் கொண்டு, அந்த கதையை கணவரிடம் கூறப் போனார்.

****************


இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில், மதுவின் எடை குறைந்து மெலிந்து இருந்தாள். ஒழுங்காக சாப்பிடுவதும் இல்லை தூங்குவதும் இல்லை, சந்திரன் பிடிவாதமாக அவளை மருத்துவரிடம் அழைத்து வந்தார்.

"டாக்டர் இவ சாப்பிடவே மாட்டேன்கிற...ஏன் இப்படி இருக்கான்னே தெரியலையே..." தாமரை குறிப்பிட, 

மருத்துவர் மதுவை கூர்ந்து கவனித்தார். சிறுவயதில் இருந்தே அவளை பார்ப்பவர்.  பழைய உற்சாகம் அவளிடம் இல்லை.

“என்னாச்சு மது? நீ ஸ்ட்ராங்கான பொண்ணாச்சே, இப்ப என்ன ஆச்சு உன் உடம்புக்கு. மனசுல எதையாவது நினைச்சு குழம்பிட்டு இருக்கீயா? " டாக்டர் கேட்க

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்.." அவருக்கு பதில் சொன்னவள், அதற்கு மேல் தலையைக் குனிந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

"ஏன் மது? சரியா சாப்பிடாம இருக்கியாம்?" மருத்துவர்  கேட்க,

"பசிக்கவே இல்ல டாக்டர்'
 என்றாள் மது

"சரிம்மா... முதல்ல நல்ல சாப்பிடு.." என்றபடி மருந்துகளை எழுதிக் கொடுக்க, அவரிடம் இருந்து விடைப்பெற்று கிளம்பியவர்களைப் பார்த்து,

"தாமரை கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்... நீங்க மட்டும் இருங்க" என்று டாக்டர் அவளைத் தேக்கவும், மது தாயை கேள்வியாக பார்த்தாள், தாமரை நிற்கவும், மதுவை அழைத்துக் கொண்டு சந்திரன் வெளியே வந்துவிட்டார்

“என்ன டாக்டர்? ஏதாவது பிரச்சனையா?” தாமரை கவலையுடன் கேட்க,

மருத்துவர் சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல... அவ கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கற மாதிரி இருக்கு, மனசு ஏதோ சரி இல்லன்னு நினைக்கிறேன், புருஷன் கூட எதுவும் பிரச்சனையா? 

அப்படி எல்லாம் இல்லை டாக்டர், ரெண்டும் போன்ல எப்போதும் பேசிக்கிட்டே தான் இருக்கும். என் தம்பிக்கு மது மேல அப்படி ஒரு பாசம்.

எதைப்பத்தியாவது யோசிச்சு குழப்பிக்கறாங்களோன்னு தோணுது எதுக்கும் தன்மையா மனசுவிட்டுப் பேசிப் பாருங்க!  டாக்டர் சொல்லவும், தலையசைத்து கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர், யோசனையுடன் மதுவைப் பார்த்தார்.

“டாக்டர் என்ன சொல்றாங்க தாமரை?”  கவலையுடன் சந்திரன் கேட்க,

ஒண்ணும் இல்லங்க... அப்போ சொன்னதையே தான் சொன்னாங்க." உங்க பொண்ணு ஒழுங்க சாப்பிட்ட எல்லாம் சரியாகிவிடும்.




நாட்கள் ஓடிச் செல்ல, ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மதிய உணவருந்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தாள்

மது எப்பொழுதும் பகலில் உறங்க மாட்டாள். இரவு மகிழனின் நினைவுகளால் சரியாக
உறங்காமல், இன்று பகலிலேயே உறங்கினாள்.

உறக்கம் கலைந்து கண்களைத் திறக்க பக்கத்தில் மகிழன் சிரித்துக்கொண்டே
படுத்திருந்தான். கனவோ என நினைத்து அவன் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க,

 “என்னை பார்த்துட்டு ஆசையா வந்து கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுப்பன்னு பார்த்தா, இப்படி கிள்ளுறியே?" என மகிழன் கேட்டதுதான் தாமதம், தாவி அவனை அணைத்துக் கொண்டாள்.

"என்ன திடீர்னு,' எனக்கேட்டாள்.

"திடீர்னு வந்தா ஸ்பெஷலா ஏதாவது கிடைக்கும்னு தான்" என்றான் மகிழன்.

"ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் உங்களை” என மது கூற,

"எவ்ளோ மிஸ் பண்ணின? சொல்லு கேட்போம்" என்றான் மகிழன்.

"ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன்" என்றாள் மது.

"அதுதான் எவ்வளவுன்னு சொல்லு" என்றான் மகிழன்.

அவனிடம் இருந்து விலகியவள்,

"அதான் சொல்றேன்ல்ல ரொம்ப சொல்லுன்னா வேற என்ன சொல்ல?" என பாவமாய் கேட்டாள்.

“பின்ன எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கேன், சும்மா கட்டிப்பிடிச்சுக்கிட்டு, மிஸ் பண்ணிட்டேன் மிஸ்
பண்ணிட்டேன்னு சொன்னா...? நான் சொல்லவா உன்னை எவ்ளோ மிஸ் பண்ணினேன்னு" என கேட்ட மகிழன் அவளுக்கு காதலின் பாஷையில் புரியவைக்க, புரிந்துகொண்ட மது மகிழன்
பாணியிலேயே அவனை எவ்வளவு மிஸ் பண்ணினாள் என சொல்ல ஆரம்பித்தாள்.

மகிழன் அணைப்பில் இருந்த
மது "ஐயோ எல்லோரும் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?" என பதறிப்போய்
படுக்கையிலிருந்து எழுந்திருக்க, அவளை பிடித்து இழுத்து தன் மேலே போட்டுகொண்டவன்,

"இன்னைக்கு நான் வர்றது உனக்குதான் தெரியாது. மத்த எல்லோருக்கும் தெரியும். அக்கா, மாமா, சஞ்சீவ் எல்லோரும் பெரியம்மாவ பார்க்க ஊருக்கு போயிட்டாங்க. நைட்டு தான் வருவாங்க" என்றான்.

"எனக்கு தெரியவே இல்லை" என்றாள் மது.

"நீ நல்லா தூங்கிட்டு இருந்த" என்றவன், “உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணினேன்னு சொன்னேனே, உனக்கு
புரிஞ்சுதா?" என கேட்டான்.

****************

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3