கவிதை
நீ மகளென
செவிலி சொன்னபோது
பெரிய அதிர்வெல்லாம் இல்லை ஏனெனில்
நான்
உன் பெயரை மட்டுமே
வைத்து காத்திருந்தேன்
உன் முதல் குரல்
நிச்சயம் அது அழுகையல்ல
அதோர் அறிவிப்பு
அப்பாவெனும் சொல்லுக்கு
அமைந்த பின்னணி இசை
நீ பார்த்தாய்
அந்த சின்ன கண்களால்
பின்
அயர்ந்தாய் மெதுவாய்..
கருவறைக்குப் பின்
உலகின் சிறு தொட்டில்
அப்பனின் கைகள் தானே
ஜா.பிராங்க்ளின் குமார்
டேய் தம்பி ....
அங்க கட்டில்ல புள்ள தூங்குறான்
தூக்கிட்டு இங்க வாடா
என அண்ணன் சொன்ன போது..
மெல்லமாய் வியர்க்கிறது..
புள்ள தூக்கத்தை
கலைத்துவிடுவோமோ என்று
நெஞ்சமும் கொஞ்சம் பதறுகிறது..
தலைக்கு அடியில்
விரலைவிடுவதா..
இடுப்புக்கு நடுவில்
பிடிப்பதா ....
அல்லது
முட்டிக்கு கீழேவா என்ற
பெரும் குழப்பமும்..
நெளிந்தால் என்ன செய்வது..
முழிச்சுகிட்டா என்ன பன்னுவது..
இது போன்ற
பல யோசனைகளுக்குப் பின்
புள்ளையில் உறக்கத்தை
ஆசையாப் பார்த்தப்படி
அப்படியே அவனருகில்
நானும் நிற்க..
பட்டென அவள் வந்தாள்..
என்ன வேடிக்கை என்றாள்..
தூக்க தெரியாதா என முரைத்தாள்..
அள்ளினாள்...
கொஞ்சினாள்..
முத்தமிட்டாள்..
என்னை முரைத்தப்படி
கையில் கொடுத்துவிட்டு
சரி சரி அங்கே அண்ணாகிட்ட கொண்டுபோய் கொடுவென
நடையைக் கட்டினாள்..
#அம்மாக்கள்_அப்படித்தான்..
#அப்பாதான்_பாவம்
அழும் சப்தம்
பிரசவ அறையில் கேட்டதும்..
சிரிப்பு சப்தங்கள் கதவுகளுக்கு
வெளியில் முளைக்க..
இரத்தமும் அழுகையோடும்
குழந்தையைக் காண்பித்து..
நல்லா இருக்கான் என்று
மருத்துவச்சி சொல்லும்போது..
வாயில் பற்கள் தெரிய..
புன்னகை உதட்டை கிழிக்க..
இருதயம் உற்சாகத்தில் துள்ளி குதிக்க..
அவள் எப்படி இருக்கா
என்று கேட்டு..
உறவுகள் சிரிப்பொலி எழுப்ப..
பிள்ளையைத் தூக்க
எல்லோரும் எனக்கு கற்றுத்தர..
தலையை பிடிக்கனும்..
முதுகையும் அணைக்கனும்..
இடுப்பு கால் என்று எல்லாவற்றையும்
அள்ளி கொள்ளனும்..
பார்த்துடா..
மெதுவாடா..
அழப்போகுது..
பிடிக்கத் தெரியுதா உனக்கு..
கொஞ்சம் பயம் படர..
காய்ச்சிய கை கொஞ்சம்
உதறல் எடுக்க..
கனமான பொருட்களை
அசாதாரணமாய் தூக்கும்
கரங்கள் கூட அன்று ஏனோ
கொஞ்சம் வெட்கப்பட்டு
சிலிர்த்து நின்றது...
#அப்பா_என்பவன்
சகிக்க முடில..
பொறுக்க முடில..
பதட்டத்தில் நடக்கவும் முடியல..
அலறலை கேட்க முடியல..
அழுவதையே தாங்க முடியல..
என்னாச்சு என்று
வருபவரிடமும் போவோரிடமும்
உள்ளம் கேட்க தவறல்ல..
கதறல் சப்தம் அடங்கிடுச்சு..
பிஞ்சு சப்தம் கேட்டுடிச்சு..
கதவு கொஞ்சம் திறந்திடுச்சு..
மருத்துவச்சி கையில்
இரத்த சகிதமாக
மொத்த உருவத்தில்
ஒரு அழகு..
தொட்டுப்பார்த்து கொஞ்சம்
புன்னகையில் உதடுப் பிளந்து..
ஒரு பெரு மூச்சில் மெல்லமாய்..
குழந்தையோட அம்மா
எப்படி இருக்குறாங்க...
Comments
Post a Comment